Published:Updated:

கொரோனாவா, சைனஸ் பிரச்னையா... வித்தியாசம் காண்பது எப்படி?

Sinus
Sinus

உணவுப் பொருள்கள், வேதிப்பொருள்கள், மகரந்தம், தூசு, நுண்ணுயிரிகள் (fungal spores) போன்ற பல்வேறு வகையான பொருள்களின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையினால் ஒருவருக்கு சைனஸ் பிரச்னை உருவாகலாம்.

கொரோனவை தாண்டி பெரும்பாலான மக்களைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை 'சைனஸ்'! சைனஸில் வரும் இருமல், சளி, தலைவலி எல்லாம் கொரோனா தொற்றுக்கான அதிமுக்கிய அறிகுறிகள் என்பதால் ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தங்களுக்கு உள்ளது 'சைனஸ்'தானா, இல்லை கொரோனா தொற்றா என்று குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்
ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்

கொரோனா மற்றும் சைனஸுக்கான அறிகுறிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும், வருடக்கணக்கில் சைனஸ் பிரச்னையால் அவதிப்படுவோர், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரனிடம் பேசினோம்.

சைனஸ் என்றால் என்ன?

சைனஸ்
சைனஸ்

நம் மூக்கைச் சுற்றிலும் உள்ள காற்று அறைகளுக்கு 'சைனஸ்' என்று பெயர். மூக்கைச் சுற்றிலும் உள்ள இரண்டு பக்கங்களிலும் ஃப்ரன்ட்டல் (Frontal), எத்மாய்டு (Ethmoid), ஸ்பீனாய்டு (Sphenoid) மற்றும் மேக்ஸில்லரி (Maxillary) என்ற காற்றறைகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் நான்கு என இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டு. இந்த அறைகளில் காற்று நிரம்பியிருக்கும். நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கிலிருந்து நேரடியாக நுரையீரலுக்குள் செல்லாது. நாம் மூக்கின் வழியே உள்ளிழுக்கும் காற்று மூக்குக்கும் சைனஸுக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளி வழியே மேலே குறிப்பிட்ட காற்றறைகளுக்குள் செல்கிறது. இந்த அறைகளில் காற்றில் உள்ள தூசுகளும் மாசும் வடிகட்டப்பட்டு, காற்றில் லேசாக ஈரப்பதம் சேர்க்கப்படுகிறது. இதன் பின்னர் இந்தக் காற்று மூச்சுக்குழல் வழியே நுரையீரலுக்குள் செல்லும்போது இதமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.

சைனஸ் பிரச்னை ஏன் ஏற்படுகிறது?

Sinus
Sinus

சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்றுநோய் அல்லது ஏதாவது அலர்ஜி ஏற்படும்போதோ, சைனஸில் உள்ள காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது. எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். சளி காரணமாக சைனஸில் உள்ள காற்றறைகள் அடைபட்டு, மூக்குக்கும் அந்தக் காற்றறைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அடைபடும்போது நாம் மூக்கின் வழியே உள்ளிழுக்கும் காற்று சைனஸின் காற்றறைகளுக்குள் செல்ல வழியில்லாமல் நேரடியாகத் தொண்டைக்குள் சென்று, நுரையீரலுக்குள் செல்கிறது. தூசு, மாசுகளுடனும் சற்று ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் இந்தக் காற்று நேரடியே தொண்டைக்குள் செல்வதால் அடிக்கடி தொண்டைவலி ஏற்படும்.

மேலும் சைனஸ் பிரச்னை காரணமாகத் தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வும் உருவாகும். இதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறும் பட்சத்தில் நாளடைவில் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

கொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா?

சைனஸ் பிரச்னையும் கொரோனாவும்...

தற்போது பரவிவரும் கொரோனாவுக்கான அறிகுறிகளும் சைனஸ் பிரச்னைக்கான அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருப்பதால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டதோ என்று குழப்பமடைய நிறையவே வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்றைப் பொறுத்தவரையில் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் வாசனை, ருசியை அறியும் திறனை இழப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன. இவற்றில் காய்ச்சலைத் தவிர மற்ற அறிகுறிகள் அனைத்தும் சைனஸ் பிரச்னையிலும் தென்படும். ஏற்கெனவே நாள்பட்ட சைனஸ் உள்ள ஒருவருக்கு இந்த அறிகுறிகள் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே இருந்திருக்கும் பட்சத்தில் பயப்படத் தேவையில்லை. ஆனால், இடைப்பட்ட நாள்களில்தான் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன என்றால் அது கொரோனா தொற்றாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

corona test
corona test

நாள்பட்ட சைனஸ் பிரச்னையை ஒருவர் கவனிக்காமல் விடும்போது அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். சைனஸ் பிரச்னை உள்ள ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது கொரோனாவாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது நுரையீரல் பிரச்னையாகக்கூட இருக்கலாம். சைனஸ் பிரச்னை உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவருக்குள்ள இருமல், தலைவலி, உடல்சோர்வு எல்லாம் மேலும் அதிகரிக்கும். இதனுடன் காய்ச்சலும் இருக்கும்.

ஏற்கெனவே சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ள ஒருவர் அந்தப் பிரச்னைகளுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் புதிதாக வரும் நோய்களை நினைத்துப் பயப்படத் தேவையில்லை.

சைனஸ் இருப்பதைக் கண்டறிவது எவ்வாறு?

தும்மல், தலைவலி, தொண்டைவலி போன்ற சைனஸ் பிரச்னைக்கான அறிகுறிகள் ஏதாவது உங்களுக்குத் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி உங்களுக்கு ஏற்பட்டிருப்பது சைனஸா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூக்கின் சைனஸ் பகுதியை எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்க்கும்போது முன்பு மூக்கைச் சுற்றிலும் உள்ள காற்றறைகள் கறுப்பு நிறத்தில் காணப்பட்டால் அவற்றில் எந்த அடைப்பும் இல்லை, காற்று மட்டும்தான் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே வெள்ளை நிறத்தில் காணப்பட்டால் காற்றறைகளில் சளி அடைந்திருக்கிறது என்றும், அவருக்கு நாள்பட்ட சைனஸ் பிரச்னை இருக்கிறதென்றும் அர்த்தம். ஒருவருக்குள்ள சைனஸ் பிரச்னையைத் துல்லியமாகக் கண்டறிய சிடி ஸ்கேன் (CT scan) உதவுகிறது.

கொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா?

சைனஸ் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் என்னவாகும்?

நுரையீரல் பிரச்னை
நுரையீரல் பிரச்னை

ஒருவருக்கு ஏற்படும் சைனஸ் பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தும்போது அது நாள்பட்ட சைனஸாகவும் ஆஸ்துமாவாகவும் மாற வாய்ப்புள்ளது. ஒருவர் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அவருக்கு சைனஸ் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், சைனஸ் இருந்து ஆஸ்துமாவுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அந்தச் சிகிச்சை வீணானதுதான். இதனை எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைதளமும் மேல் தளமும் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இரண்டு தளங்களிலும் உள்ள தீயினை அணைத்தால் மட்டுமே தீயைக் கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து தரைதளத்தில் உள்ள தீயை மட்டும் அணைத்துக்கொண்டிருந்தால், மேல் தளத்தில் பரவும் தீ கீழே விழுந்து மீண்டும் கீழ்த்தளம் பற்றிக்கொள்ளும்.

இதேபோல்தான் ஆஸ்துமாவும் சைனஸும். இந்த இரண்டு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் தொடர்ந்து ஆஸ்துமாவுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டு, சைனஸுக்கு சிகிச்சை பெறத் தவறினால், ஆஸ்துமா பிரச்னை சரியானால்கூட, சைனஸ் காரணமாக அது மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து - இந்தியாவில் சோதனை!

சைனஸ் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்குப் புகைப்பழக்கம் இருந்தால் அது நோயின் தீவிரத்தை வீரியப்படுத்தும் என்பதால் அவர்கள் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

உணவுப் பொருள்கள், வேதிப்பொருள்கள், மகரந்தம், தூசு, நுண்ணுயிரிகள் (fungal spores) போன்ற பல்வேறு வகையான பொருள்களின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையினால் ஒருவருக்கு சைனஸ் பிரச்னை உருவாகலாம். முதலில் உங்களுக்கு எந்த ஒவ்வாமையினால் சைனஸ் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

Tablets
Tablets

எந்த ஒவ்வாமையின் காரணமாக சைனஸ் பிரச்னை என்பதைக் கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப ஆன்டிபயாட்டிக் மருந்துகளை 2 - 7 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பை (Sodium Chloride) சிறிதளவு தூய நீரில் கலந்து, இதனை மூக்கின் ஒரு துவாரத்தின் வழியே இழுத்து, மறு துவாரத்தின் வழியே வெளியேற்றும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சைனஸ் பிரச்னை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

நாள்பட்ட சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்குப் பிரத்யேக மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இதனை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்குத் தகுந்தாற்போல எடுத்துக்கொள்ளலாம்" என்றார் மருத்துவர் ஸ்ரீதரன்.

அடுத்த கட்டுரைக்கு