Election bannerElection banner
Published:Updated:

கொரோனா பாசிட்டிவ் வந்தால் நாம் செய்யவேண்டியது என்ன?

Samples to test for COVID-19
Samples to test for COVID-19 ( AP Photo / Dar Yasin )

கொரோனா தொற்று உறுதியானவுடன் நாம் செய்யவேண்டியது என்ன, யாரெல்லாம் வீட்டுத்தனிமையில் இருக்கலாம், கவனமாக இருக்கவேண்டியவர்கள் என்பது குறித்த விரிவான வழிகாட்டல்.

முதல் அலையைவிட அதிவேகமாகப் பரவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா இரண்டாவது அலை. கடந்த ஆண்டின் சூழல் இப்படியானது கிடையாது. அப்போது நமக்கு கொரோனா வைரஸ் குறித்த எந்தப் புரிதலும் இல்லை. தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஊரடங்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே ஒரே தீர்வாக இருந்தன. அதனால் நிலைமை கைமீறிப் போனது. ஆனால், இப்போது அப்படியல்ல, மக்களிடம் கொரோனா குறித்த தெளிவு அதிகம் இருக்கிறது, தடுப்பூசியும் வந்துவிட்டது. ஆனாலும் கொரோனா, புயல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே இருப்பது அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், பிரச்னையின் தீவிரம் தெரிந்தும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாததுதான் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது.

A health worker takes a nasal swab to test for COVID-19
A health worker takes a nasal swab to test for COVID-19
Manish Swarup

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வருவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், கொரோனா தொற்று உறுதியானால் என்ன செய்வது என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது. காரணம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையிலிருந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 36 வயதான ஏழுமலை மரணமடைந்திருப்பது.

லேசான அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. மூச்சுவிட சிரமம் ஏற்படுதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் மருத்துவமனை சிகிச்சைக்குச் சென்றால் போதுமானது என்று கொரோனா முதல் அலையின்போது கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படியே ஏழுமலை இரு தினங்களாகத் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்தான் கொரோனா தொற்றுக்குப் பின்பு செய்ய வேண்டியது என்ன, வீட்டுத் தனிமையில் இருக்கலாமா கூடாதா என்ற குழப்பத்துக்குள் மக்களைத் தள்ளியிருக்கிறது. இப்படியான சூழலில் தமிழகம் முழுக்க தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளியாகும் தகவல்கள் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

வசந்தாமணி
வசந்தாமணி

இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணியிடம் பேசினோம்,

``கடந்த வருடம் கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோருக்குத் தீவிர காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, சுவை அல்லது மணம் அற்றுப்போதல், வயிற்றுப் போக்கு, அதீத சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. ஆனால், இப்போது பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்டிருக்கிறது. தீவிர காய்ச்சல் இருப்பதில்லை, அதிக தொண்டை வலி வருவதில்லை, அதீத சோர்வும் வருவதில்லை. லேசான காய்ச்சலாக இருந்து நேரடியாக நுரையீரலைப் போய் பாதிக்கிறது.

* அதேபோல பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரிடமிருந்து அடுத்த நபருக்குப் பரவுவதற்கு மூன்று நான்கு நாள்கள் ஆனது. ஆனால், இப்போது மூன்று நான்கு நாள்களில் ஒருவரிடமிருந்து இரண்டு மூன்று பேருக்குப் பரவிவிடுகிறது.

* லேசான காய்ச்சல் ஏற்பட்டால், `சாதாரண காய்ச்சல்தானே..' என்று சிலர் அவர்களாகவே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்கின்றனர். இரண்டு மூன்று நாள்களில் காய்ச்சல் சரியாகிவிடுகிறது. ஆனால், மூன்று நாள்கள் கழித்து தீவிர நுரையீரல் பாதிப்புடனும், ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த நிலையிலும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அது தவறு. லேசான காய்ச்சலாக இருந்தால்கூட, அது வித்தியாசமாகத் தெரிந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா முதியவர்களை மட்டுமே பாதிக்கும். இளம் வயதினருக்கு வந்தாலும் ஒன்றும் செய்யாது என்ற சூழல்தான் கடந்த ஆண்டு நிலவியது. ஆனால், இப்போது அப்படி அல்ல. எல்லா வயதினரையும் கொரோனா தீவிரமாக பாதிக்கிறது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

கொரோனா
கொரோனா

* ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அவருக்கு இணை நோய்கள் அதாவது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அவர்களுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. எனவே இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும்.

* எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை ஆகிய சோதனைகள் எல்லாம் மேற்கொள்வோம். இந்த அனைத்துப் பரிசோதனைகளும் நார்மல் அவர்களுக்கு எவ்வித இணை நோய்களும் இல்லை, அறிகுறிகளும் இல்லையென்றால் அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 5 நாள்கள் கழித்து மறு ஆய்வு செய்துகொண்டால் போதுமானது. அப்படியானவர்கள் வீட்டுத் தனிமையிலிருந்து கொள்ளலாம்.

* வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டுமெனில் அதற்கு ஏதுவாக அவர்களது வீட்டில் கழிப்பறையுடன் கூடிய தனி அறை இருக்க வேண்டும். அவர்களைக் கண்காணித்துக்கொள்ள விவரமறிந்த ஒருவர் உடனிருக்க வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக அவரது வீடு தகுதியானது என சம்பந்தப்பட்ட ஏரியா சானிடைரி இன்ஸ்பெக்டரும், உங்களது உடல் தகுதியானது என மருத்துவரும் எனச் சான்றளிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டுத் தனிமையில் இருக்க முடியும்.

* அந்த வசதி இல்லாதவர்கள் `கோவிட் கேர்' சென்டரில் ஐந்து நாள்கள் தங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அடிப்படை சிகிச்சை என்பது எல்லோருக்குமே அவசியம். அசித்ரோமைசின், வைட்டமின் -சி, ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகளும் புரோட்டீன் நிறைந்த டயட்டும் இந்த ஐந்து நாள்களில் `கொரோனா கேர் சென்டரில்' வழங்கப்படும். ஐந்து நாள்களுக்குப் பிறகு, அவர்களை மறு உடல்நிலையை ஆய்வு செய்து, பிரச்னை இல்லாதபட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். வீட்டுக்குச் சென்றதிலிருந்து பதினான்கு நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

கொரோனா
கொரோனா
கொரோனா இரண்டாம் அலை... கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த பத்து கட்டளைகள்!

* அறிகுறிகள் இருக்கிறதென்றால் அவர்களை `கோவிட் ஹெல்த் சென்டரில்' அனுமதிக்கிறோம். அதாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லாத மருத்துவமனைகள். அங்கும் இதே பரிசோதனைகள் ஆக்ஸிஜன் சாச்சுரேஷன் லெவல் ஆகிய பரிசோதனைகளெல்லாம் செய்தபிறகு மீண்டும் அவர்களை மறு பரிசோதனை செய்வோம். எந்த வித பாதிப்பும் இல்லையெனில் 9-வது நாள் அல்லது 10-வது நாள் டிஸ்சார்ஜ் செய்கிறோம். பிறகு அவர்கள் வீட்டுக்குச் சென்று 14 நாள்கள் வீட்டுத் தனிமையிலிருந்துவிட்டு அதன் பிறகு அவர்களுடைய வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்.

* மாறுபட்ட அல்லது தீவிர அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதித்து தேவையான சிகிச்சைகள் கொடுக்கிறோம்.

என்றவரிடம் திருவல்லிக்கேணியில் வீட்டுத் தனிமையிலிருந்த ஏழுமலை மரணமடைந்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினோம், ``நான் ஏற்கெனவே சொன்னதுதான். வீட்டுத்தனிமையில் இருப்பதற்கான வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வீட்டுத் தனிமையிலிருந்தாலும் அசித்ரோமைசின், வைட்டமின் -சி, ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் புரோட்டீன் மிகுந்த உணவுகளையும் அவர்கள் முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவர் மருத்துவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

Man wearing mask
Man wearing mask
AP Photo/Vadim Ghirda
கொரோனா சமயம் மட்டுமல்ல... எப்போதும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சரியாக வைத்துக்கொள்ள 10 வழிகள்!

குறிப்பாக அவ்வப்போது தங்களது `ஆக்ஸிஜன் சாச்சுரேஷன்' லெவல் என்னவென்பதை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் திடீரென்று இறந்துவிட மாட்டார்கள். ஆக்ஸிஜன் சாச்சுரேஷன் லெவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அதன்பிறகே மூச்சுத் திணறல் ஏற்படும். வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அனைவருமே வீட்டுத் தனிமையிலேயே சரியாகிவிடுவார்கள் எனச் சொல்லிவிட முடியாது. ஆக்ஸிஜன் சாச்சுரேஷன் லெவல் 95-க்கு கீழ் குறைந்தாலே அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். எனவே மக்கள் அதில் தெளிவாக இருக்க வேண்டும்" என்றார்.

இறுதியாகத் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது என சொல்லப்படும் தகவல் குறித்துக் கேட்டோம், ``அப்படியெல்லாம் இல்லை. போதுமான அளவு தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிகமாக ஸ்டோரேஜ் செய்ய முடியாத ஒரு சில இடங்களில் ஏதாவதொரு நாள் தடுப்பூசி ஸ்டாக் இல்லாமல் இருந்திருக்கலாம். இன்று இல்லையெனில் அடுத்த ஓரிரு நாள்களில் அங்கு தடுப்பூசி கிடைத்துவிடும். எனவே தடுப்பூசி தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மை இல்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு