Published:Updated:

மழைக்காலத்தில் முதியவர்களை பாதிக்கும் மலச்சிக்கல்...தீர்வு என்ன? #EldersDay

மழைக்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். வெளியிடங்களில் நடமாடுவதையும் முதியவர்கள் குறைத்துக்கொள்வார்கள் என்பதால் உடல் சற்று இறுக்கமாக இருக்கும். தண்ணீர் அருந்துவது குறைவதாலும், உடல் இயக்கம் குறைவதாலும், உடல் இறுகி மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

Elder
Elder ( pixabay )

மழை மற்றும் குளிர்காலங்களில் முதியோர் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம் கேட்டோம். எளிமையான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் கூறினார்.

Dr.Natarajan
Dr.Natarajan

``மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் முதியோர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சரும வறட்சி ஏற்படும் என்பதால் அரிப்பு அதிகமாக இருக்கும். மென்மையான சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கலாம். `ஆல்கனைன்' அமிலம் சேர்க்கப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ளலாம். பகல் நேரத்திலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை உடலில் பூசிக்கொள்வதன்மூலம் சருமப் பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

மழைக்காலத்தில் தாகம் எடுப்பது குறைந்து உடலில் நீர் வறட்சி ஏற்படும். வெளியிடங்களில் நடமாடுவதையும் முதியவர்கள் குறைத்துக்கொள்வார்கள் என்பதால் உடல் சற்று இறுக்கமாக இருக்கும். தண்ணீர் அருந்துவது குறைவதாலும், உடல் இயக்கம் குறைவதாலும், உடல் இறுகி மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க அதிகமாக நீர் அருந்த வேண்டும். பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, மாதுளை போன்ற பழங்கள் மலச்சிக்கலைப் போக்க உதவக்கூடியவை என்பதால் அவற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம். முடிந்தவரை வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது நல்லது. வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Elder
Elder

வெங்காயம், பீட்ரூட் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கலோரி அதிகம் உள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். ஜலதோஷம், சளித்தொந்தரவு ஏற்படும் என்பதால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். சாதாரண நீரை அருந்துவதற்குப் பதிலாக கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துவதே நல்லது. சிலர் வெந்நீரையும் குளிர்ந்த நீரையும் சேர்த்துக் குடிப்பார்கள். அது ஆரோக்கியமானதல்ல.

வீட்டில் செய்த காய்கறி சூப்பை அருந்துவது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பதுடன் இறைச்சி உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

Elder
Elder
Pixabay

மழைக்காலங்களில் வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கையில் குடை எடுத்துச்செல்ல மறக்க வேண்டாம். மெல்லிய உடைகளை உடுத்துவதற்குப் பதில் கொஞ்சம் கனமான உடைகளை உடுத்துவது நல்லது. இரவு தூங்கும்போது கனமான போர்வை அல்லது கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். கைகால் மூட்டுகளில் பாதிப்பு உள்ளவர்களும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஒன்று அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தைராய்டு குறைவாகச் சுரப்பவர்களால் குளிரைத் தாங்க முடியாது என்பதால், இந்தச் சூழலில் என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செயல்பட வேண்டும்.

Elder
Elder

நிமோனியா, இருமல் போன்ற பாதிப்புகள் யாருக்காவது இருந்தால் அவை மிக எளிதாகப் பரவும். எனவே, முதியவர்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. நிமோனியா பாதிக்காமலிருக்க அதற்கென உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிமோனியா தடுப்பூசி ஒருவரது ஆயுள்காலத்தில் ஒருமுறைதான் போடப்படுவது என்றாலும், தேவைப்படுபவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம். மழைக்காலத்தில் ஃப்ளூ காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் இன்ஃபுளூயென்சா தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது'' என்கிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.

பரவும் டைபாய்டு காய்ச்சல்... தற்காத்துக்கொள்வது எப்படி?