Published:Updated:

புத்தம் புது காலை : தைராய்டு எனும் கேடயம் அதிகம் சுரந்தால் உடலில் என்னவெல்லாம் நடக்கும்?!

world thyroid day
world thyroid day

கரு உருவான பதினோராவது வாரம் தனது பணியைத் துவக்கும் தைராய்டு சுரப்பி, கருவிலேயே குழந்தையின் மூளை, உடல் உருவாக்கத்தில் முக்கியப் பங்கேற்கிறது. பிறந்த பிறகு நமது வளர்ச்சியை ஒழுங்குபடுத்தி, பருவமடைதல், கருத்தரித்தல் மற்றும் கருவளர்தல் என மனிதச்சங்கிலி அறுபடாமல் பார்த்துக் கொள்கிறது

ஒரு வாகனம் சீராக ஓடுவதற்கு உதவும் ஆக்ஸிலரேட்டர் போல, நமது உடல் வளர்ச்சியை சீராக ஓட வைக்கிறது தைராய்டு சுரப்பி. இது தறிகெட்டு வேகமாய் ஓடினாலோ அல்லது தரம்குறைந்து மெதுவாக ஓடினாலோ என்ன ஆகும்?

நமது கழுத்து முன்புறத்தில்,

வெறும் முப்பது கிராம் எடை கூட இல்லாத பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது எடையை முப்பது கிலோ வரை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்...

சிறிய தோற்றம், பெரிய செயலாக்கம் என்றிருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. Thyreos என்றால் கிரேக்க மொழியில் கேடயம் என்று பொருளாம்.

உண்மையில் உடலை இது கேடயம் போலக் காப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று கூறும் மருத்துவர்கள் இதன் செயல்பாடுகளையும் விளக்குகிறார்கள்.

ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்பர் தைராய்டிசம்

கரு உருவான பதினோராவது வாரம் தனது பணியைத் துவக்கும் தைராய்டு சுரப்பி, கருவிலேயே குழந்தையின் மூளை, உடல் உருவாக்கத்தில் முக்கியப் பங்கேற்கிறது. நாம் பிறந்த பிறகு நமது வளர்ச்சியையும் ஒழுங்குபடுத்தி, பருவமடைதல், மீண்டும் கருத்தரித்தல் மற்றும் கருவளர்தல் என மனிதச்சங்கிலி அறுபடாமல் பார்த்துக் கொள்கிறது என்பதாலேயே இதனை மாஸ்டர் கிளாண்ட் என அழைக்கின்றனர் நாளமில்லா சுரப்பி நிபுணர்கள்.

இந்த மாஸ்டர் கிளாண்டில் ஏற்படும் வீக்கத்தை, "முன்கழுத்து கழலை" அதாவது Goiter என்று அழைக்கும் மருத்துவ உலகம், இந்தத் தைராய்டு தனது வேகத்தை குறைத்து நமது உடல் எடையைக் கூட்டுவதை 'ஹைப்போதைராய்டிசம்' (Hypothyroidism) என்றும், இந்தச் சுரப்பி தறிகெட்டு வேகமாக ஓடுவதை "ஹைப்பர்தைராய்டிசம்" (Hyperthyroidism) என்றும் கூறுகிறது.

இவற்றில் குறைந்தநிலையான ஹைப்போதைராய்டிசம் நமக்குப் பரிச்சயமான ஒன்றாக இருப்பதால், அதிகம் சுரக்கும் நிலையைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பெண்களில் அதிகம் காணப்படும் இந்த தைராய்டு அதிக சுரப்பு நிலை 'க்ரேவ்ஸ் டிசீஸ்' (Graves' Disease) எனப்படுகிறது. அதாவது, சுரப்பியும் அதிகம் சுரந்து, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளும் அதிகம் சுரப்பதால், இது வண்டி தானே ஓடி, தானே மோதிக் கொள்வதைப்போன்ற ஆட்டோ இம்யூன் நிலை. அதாவது தன்னுடல் தாக்குநோயாக மாறுகிறது என்று கூறும் மருத்துவர்கள், இந்த நிலையில் அதிகப் பசி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, அதீத எடையிழப்பு ( 20 கிலோ வரை), படபடப்பு, நடுக்கம், அதிக வியர்வை, மாதவிடாய் பிரச்னைகள், தூக்கமின்மை போன்ற அறிகுறிகளுடன் முடி கொட்டுதல், முன்கழுத்து வீக்கம், கண்களில் வீக்கம், மூச்சுத்திணறல், இருதய செயலிழப்பு ஆகியன ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

தைராய்டு டெஸ்ட் மற்றும் தைராய்டு ஸ்கேனிங் போன்ற எளிய பரிசோதனைகள் மூலமாக, ஹைப்பர்தைராய்டிசம் உறுதிபடுத்தப்பட்டால், நோயின் தன்மை மற்றும் அதன் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சையின் மூலமாகவோ நோயை நன்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனாலும், அரிதாக சிலருக்கு ஏற்படும் மிதமிஞ்சிய தைராய்டு சுரப்பு, தைராய்டு ஸ்டார்மை ஏற்படுத்தி, பெரும் பாதிப்புகளோடு உயிரிழப்பு வரைக்கூட போகலாம் என்பதால், இந்த ஹைப்பர்தைராய்டிசம் நிலையில் கவனம் மிகவும் அவசியம்.

புத்தம் புது காலை : தைராய்டு எனும் கேடயம் அதிகம் சுரந்தால் உடலில் என்னவெல்லாம் நடக்கும்?!

இந்த தன்னுடல் தாக்குநோய் என்பது மரபணுக்கள் மூலமாக, குடும்பங்களில் சகோதர சகோதரிகளிடம் காணப்படுகிறது என்பதால், இதைப் பற்றிய புரிதலும், மற்ற தன்னுடல் தாக்குநோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் இங்கு அவசியமாகிறது.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதும், பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், கேரட்கள் மற்றும் கனிகளையும், தயிரையும் சேர்த்துக் கொள்வதுடன் வைட்டமின் டி தரும் சூரிய வெளி நடை இவர்களுக்கு மிக உதவும்.

உண்மையில் உலகெங்கும் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் தைராய்டு சுரப்பி பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், இவர்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே இதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளது என்கிறது சர்வதேச தைராய்டு அமைப்பு. திடீரென எடை கூடினால் மட்டுமல்ல, திடீரென எடை குறையும்போதும் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

ஏனெனில், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள, நீங்களும் முக்கியம்... உங்கள் தைராய்டும் முக்கியம்! #WorldThyroidDay

அடுத்த கட்டுரைக்கு