Published:Updated:

`செப்டம்பர் இறுதியில் கொரோனா உச்சநிலை... அதன்பிறகு என்னவாகும்?' - கணிக்கும் மருத்துவர்

கொரோனா உச்சநிலையை அடையும்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் உச்சநிலை, ஜூலை மாதம் அல்லது அக்டோபர் மாதமாக இருக்கும் என்று பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு கவனம்பெறுகிறது. பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையின் சார்பில், இதுவரை ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

Live with Corona (Representational Image)
Live with Corona (Representational Image)

ஆய்வின் முடிவில், `தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதிவாக்கில் 1,32,242 பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கும். 769 பேர் உயிரிழந்திருப்பார்கள். சென்னையைப் பொறுத்தவரை நோயாளிகளின் எண்ணிக்கை 71,024 ஆக அதிகரிக்கும். இறப்பு எண்ணிக்கை 748 ஆக அதிகரிக்கும்.

ஜூலை முதல் வாரத்தில் சென்னையில் 74,714 பேருக்கு கொரோனா பாதிப்பும் 790 உயிரிழப்புகளும் ஏற்படலாம். ஜூலை 15-ம் தேதியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 1,50,244 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,654 ஆகவும் இருக்கலாம்.

செப்டம்பர் மாத இறுதியில் நோயின் பாதிப்பு மேலும் உச்சத்தைத் தொடும். அதன் பிறகு பாதிப்புகளும் உயிரிழப்புகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கும்' என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆய்வு, `ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைவாக உள்ளது. இல்லையென்றால் இந்த நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1.9 லட்சமாக அதிகரித்திருக்கும்' என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை நகரத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகமுள்ள நகரம், ஊரடங்கை முழுமையாகப் பின்பற்றாதது எனப் பல்வேறு காரணங்கள் இதற்குக் கூறப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆய்வு தொடர்பான விளக்கத்தைப் பெற, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறைத் தலைவர் மருத்துவர் ஜி.ஸ்ரீனிவாஸிடம் பேசினோம். ``இதுவரை வெளியாகியுள்ள ஆய்வுத் தகவல்கள் தவிர வேறு எதுவும் கூடுதல் விவரங்கள் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கூடுதலாகப் பேச விரும்பவில்லை" என்றார்.

handling corona (Representational Image)
handling corona (Representational Image)

தமிழகத்தில் கொரோனா உச்சநிலை அடைவது பற்றிய புள்ளிவிவரங்களை அளித்திருக்கிறது இந்த ஆய்வறிக்கை. உச்சநிலையின்போது நோயாளிகளின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே. கொரோனா உச்சநிலையை எப்படிக் கையாள்வது, உச்சநிலைக்குப் பிறகு என்ன நேரிடும், இயல்பு நிலை மீள்வது எப்போது எனப் பல சந்தேகங்கள் எழுகின்றன.

இந்த சந்தேகங்களை, கொரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கிய நாளிலிருந்தே அது தொடர்பான பல்வேறு விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருபவரும், முன்னாள் அரசு மருத்துவரும் மூத்த மருத்துவருமான ஜெ.அமலோற்பவநாதனிடம் கேட்டோம்.

``உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து மூன்று விஷயங்கள்தான் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுவது.

Dr. J. Amalorpavanathan
Dr. J. Amalorpavanathan

கோவிட்-19-க்கான தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ இல்லாத நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும்போதும், நாம் பின்பற்ற வேண்டியது இந்த மூன்று விஷயங்களையும்தான். வயதானவர்கள், வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என நோய்க்கு எளிதாக இலக்காகக்கூடிய அபாயமுள்ளவர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருந்துகொள்ள வேண்டும். அவசியத் தேவையன்றி வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

நோயின் தாக்கம் குறைவாக இருந்த ஆரம்ப காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்ட நாம், நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது இன்னும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். அலட்சியமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கலாம்.

உச்சநிலையைப் பொறுத்தவரை, செப்டம்பர் மாத இறுதியில் எட்டுவோம் என்று கணிக்கப்பட்டுள்ளது. உச்சநிலையை அடைந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதும், உயிரிழப்புகளும் நிகழவே செய்யும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதன் தீவிரம் குறையும். இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. ஆனால், கொரோனா உச்ச நிலையை அடையும்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

corona spread (Representational Image)
corona spread (Representational Image)
2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...

இத்தாலி போன்ற நாடுகளில், உச்சநிலையைக் கடந்த பிறகும் இன்றளவும் கணிசமாக நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் அந்த நிலை ஏற்படலாம். என்றாலும், கணிப்புகள் தவறாகவும் வாய்ப்புள்ளது. காரணம், கோவிட்-19 வைரஸின் தன்மையை, பரவும் முறையை கணிக்கவே முடியவில்லை.

மொத்தத்தில், கொரோனா வைரஸின் ஆபத்தான கட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். துளி அலட்சியமும் உயிரை விலையாகக் கேட்பதுவரை பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனை காட்சிகள் எச்சரிக்கைகளை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. நோய்ப் பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ஒவ்வொருவரும் மிக கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் ஆணை" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு