Published:Updated:

`மாரடைப்பைத் தடுக்கும் இரண்டரை ரூபாய் மாத்திரை!' - வாட்ஸ்அப் செய்திக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர் விளக்கம்

"இந்த மாத்திரை அரசு மருத்துவமனையில் இலவசமாகவே வழங்கப்படுகிறது" - வாட்ஸ்அப் செய்திக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர் விளக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமூக வலைதளங்களில் நாம் அதிகம் பார்க்க நேர்வது, ஃபார்வேர்டு தகவல்களைத்தான். இதுபோன்ற தகவல்களில் அதிகம் பகிரப்படுவது வீட்டு வைத்தியம், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை போன்ற மருத்துவம் சார்ந்த தகவல்களே. ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களை சிலர் சாதாரணமாகக் கடந்துவிட, பலரோ அதை சீரியஸாகப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

சமீபத்தில் இதுபோன்ற ஒரு தகவல் பரவியது. அதில், `மாரடைப்பு வராமல் தடுக்க ஒரே மாத்திரை - அனைத்து சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக்கொள்ளுங்கள் - பொது நலன் கருதி வெளியிடுபவர் டாக்டர் விவேகானந்தன் - என்னால் மாரடைப்பு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்' என்று குறிப்பிட்டு மாத்திரையின் பெயர், மருத்துவரின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் பகிரப்பட்டது அந்தத் தகவல். அது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டோம்.

அழைப்பை எடுத்தவர் அந்தத் தகவலில் இடம்பெற்றிருந்த மருத்துவர் விவேகானந்தன்தான். அவர் உக்ரேன் நாட்டில் மருத்துவப் படிப்பில் எம்.டி (M.D Physician) முடித்தவர். தற்போது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவர் விவேகானந்தன்
மருத்துவர் விவேகானந்தன்

இந்தத் தகவலைப் பரப்பியதன் நோக்கம் என்ன என்று டாக்டர் விவேகானந்தனிடம் கேட்டோம். "சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவில்லை என்றால் மாரடைப்பு ஏற்படலாம். காரணம், இத்தகைய நோய்களால் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும். பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தக்குழாய்கள் சிறியதாகக் குறுகிவிடும். ரத்தக்குழாய்களும் குறுகி, ரத்தமும் அடர்த்தியாக இருக்கும்போது ரத்தம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சீராகப் போய்ச் சேராது. இதற்குத் தீர்வாக, T.Aspirin 75mg + T.Atorvastatin 10 mg என்ற காம்பினேஷனில் வரும் குறிப்பிட்ட இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது, ரத்த ஓட்டம் இயல்பாகவும் சீராகவும் இருக்கும். இது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இல்லை. இதனால் பல சர்க்கரை நோயாளிகள் உயிரை இழக்க நேரிடுகிறது. சர்க்கரை நோயாளியான என் மாமா 45 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒருநாள் திடீரென்று வயிறு வலியென்று சொல்லியிருக்கிறார். அஜீரணப் பிரச்னையாக இருக்கும் என்று நினைத்து மருத்துவமனைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு என்னிடம் பேசியபோது, ஈசிஜி எடுத்துப் பார்க்கச் சொன்னேன். அப்போதுதான் மாரடைப்பு என்று தெரியவந்தது.

மருத்துவர் விவேகானந்தன் சமூக வலைதள விளம்பரம்
மருத்துவர் விவேகானந்தன் சமூக வலைதள விளம்பரம்
``போலியோவை ஒழிக்க எது சிறந்த தீர்வு?''- எக்ஸ்பர்ட் கருத்து #WorldPolioDay

மாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். இன்று அவர் குடும்பமே நிர்கதியாய் நிற்கிறது. என் மாமா இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டிருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைந்திருக்கும். இதுபோன்ற பல சம்பவங்களைக் கேள்விப்படுகிறேன். அதனால்தான் விழிப்புணர்வுக்கான இந்தத் தகவலை சமூகவலைதளங்களில் வெளியிட்டேன்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், குடும்பத்தில் யாரேனும் இதயநோயால் பாதிக்கப்பட்ட மரபு என, இந்தக் காரணிகள் இருப்பவர்கள் எல்லோருமே இதயநோய் வருவதற்கு வாய்ப்புள்ள அபாயப் பட்டியலில் இருப்பவர்கள். இவர்கள் 40 வயதுக்கு மேல் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது.

உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயாளிகள் தாங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையுடன் சேர்த்து இந்த மாத்திரையும் எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். அதனால் உயிரிழப்பு விகிதத்தையும் நிச்சயம் குறைக்க முடியும்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை பெற்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
மருத்துவர் விவேகானந்தன்

சர்க்கரை நோயாளிகளில் சிலர் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களினால் மட்டுமே நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாத்திரை தேவையில்லை. ஆனால், வருடத்துக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் இதயத்தின் செயல்பாட்டை டிரெட்மில் போன்ற பரிசோதனைகளின் மூலம் பரிசோதித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது" என்றார்.

சர்க்கரைநோய்
சர்க்கரைநோய்
டைப் 3 சர்க்கரை நோய் எதுவென்று தெரியுமா? முதியவர்களுக்கு ஓர் அலர்ட்! #InternationalAlzheimersDay

மருத்துவர்கள் தங்களின் புகைப்படங்களைப் போட்டு, `நோய்களைக் குணப்படுத்துவேன்' என்று கூறி தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு விளம்பரப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சமீபத்தில் அறிவித்திருந்தது. `அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்று புகைப்படத்தைப் போட்டு விளம்பரப்படுத்துவது சரிதானா?' என்று கேட்டோம் டாக்டர் விவேகானந்தனிடம்.

இந்த மாத்திரையின் விலை வெறும் இரண்டரை ரூபாய்தான். அரசு மருத்துவமனையில் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
டாக்டர் விவேகானந்தன்

"சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்துப் பல செய்திகள் பரவுகின்றன. அதைப் பலர் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் கடந்து போய்விடுவார்கள். ஆனால், என் புகைப்படத்தையும் செல்போன் எண்ணையும் வெளியிட்டால் அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அந்த நம்பகத்தன்மையின் காரணமாக, தங்கள் மருத்துவரை அணுகி இதுபற்றி கேட்டுத் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை இப்படி முயன்றேன்.

இதயப் பிரச்னைகள்
இதயப் பிரச்னைகள்

இந்த விளம்பரத்தால் எனக்கு ஒரு ரூபாய் லாபம் கிடையாது. இந்த மாத்திரையின் விலை வெறும் இரண்டரை ரூபாய்தான். அரசு மருத்துவமனையில் இலவசமாகவே வழங்கப்படுகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு