Published:Updated:

ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!

Sanitiser
Sanitiser ( Representational Image )

ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில், ஒரு நாளின் எண்ணிக்கை 10,000-த்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் இது 15,000-த்தை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதை மனதில் வைத்து, கொரோனாவின் உச்சநிலை (Peak) எப்போது ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துவருகின்றனர். ஒரு தரப்பினர் ஜூலை மாதம் முதல் வாரம் என்றும், மற்றொரு தரப்பினர் அக்டோபர் மாதம் என்றும் கூறிவருகின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா, ``இந்தியாவில் பெரும்பானவர்களுக்குப் பரவியிருப்பது A2a என்ற வகை கொரோனா வைரஸ் என்பதால்தான், அதன் தாக்கம் இந்த அளவுக்காவது குறைவாக உள்ளது. நாம் திட்டமிடுவதற்கும், நோயைக் கையாள்வதற்குமான உத்திகளைக் கண்டறிவதற்கும் சில நாள்கள் கிடைத்தன. வேறு வகை வைரஸ் என்றால், அதன் தீவிரத்தைக் கணித்திருக்கவே முடியாது.

தற்போது, இந்தியாவில் அதிகரிக்கும் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, ஜூலை மாத தொடக்கத்தில் உச்சநிலை ஏற்படும். அதற்குப் பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து, இரண்டாவது அலை (Second Wave) அக்டோபர் மாதத்தில் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மட்டுமே பிரச்னையாக இருக்கிறது. பிற இடங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவாகவே காணப்படுகிறது. சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.

Virologist Dr.Jayashree Sharma
Virologist Dr.Jayashree Sharma

சீனாவில், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளைக் காட்டிலும் தனிமைப்படுத்தும் மையங்களே அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டன. ஒரு வீட்டில், ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரை உடனே அங்கிருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்குக் கொண்டுபோய்விடுவார்கள். அவர் எந்த இடத்திலிருக்கிறார் என்பதுகூட உறவினர்களுக்குத் தெரியாது. அந்த மையத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொற்று நீங்கியதும் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இதே விஷயத்தைத்தான் பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தல் மையங்களை அதிகரிக்க வேண்டும். சென்னை போன்ற மக்கள் நெருக்கடி அதிகமிருக்கும் பகுதியில் தொற்றுள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது சரியான பலனைத் தராது. கேரள மாநிலத்தில்... மக்கள் நெருக்கடி குறைவாக இருக்கிறது, வீடுகளும் பெரும்பாலும் இடைவெளிவிட்டு அமைந்திருக்கும் என்பதால், அங்கு வீட்டில் தனிமைப்படுத்துதலில் நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

Social Distance
Social Distance

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தப் பகுதிக்கு எந்த உத்தியைக் கையாள வேண்டும் என்பதைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடங்களில், வீட்டில் தனிமைப்படுத்துதலை அனுமதிக்கக்கூடாது. மக்கள் நெருக்கடி குறைவாக இருக்கும் பகுதிகள், இடைவெளி விட்டு தனித்தனி வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் வீட்டில் தனிமைப்படுத்தலை அனுமதிக்கலாம்.

சென்னையை மட்டும் கவனம் செலுத்தி நோயைக் கட்டுப்படுத்தும் செயல்களைத் தீவிரப்படுத்தினால், உச்சநிலையை எளிதாகக் கடந்துவிட முடியும். பொதுவாக எந்தவோர் உலகளாவிய பெருந்தொற்றிலும் கொள்ளைநோயிலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சுற்றுச்சூழலே அதன் தீவிரத்தைக் குறைக்கும். குறிப்பிட்ட வைரஸ் பெருகுவதற்கான சாதகமான சூழல் மறைந்துவிடும். இதற்கு முன்பாக ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூவிலும் அப்படித்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. கொரோனா விஷயத்தில் சுற்றுச்சூழல் அதன் ஆதரவை எப்போது நிறுத்திக்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

corona
corona

தமிழகம் சந்திக்கப்போகும் உச்சநிலையைக் கையாள்வது எப்படி என்று விளக்குகிறார், தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார்.

``ஊரடங்கைத் தளர்த்திய நாடுகள் அனைத்தும் கொரோனா நோய் கட்டுக்குள் வந்ததும்தான் அந்த செயலைச் செய்தன. ஆனால், இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தியிருக்கிறோம்.

அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும். இந்தியாவில், ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் உச்சநிலையை அடையும். அதன்பிறகு சற்று தளர்வு ஏற்பட்டால்தான் இரண்டாம் அலை ஏற்படுமா என்று கூற முடியும்.

Dr.Suresh Kumar
Dr.Suresh Kumar

கொரோனா நோயாளிகளில் 85 சதவிகிதம் பேர் மிதமான பாதிப்பு அல்லது அறிகுறிகளற்றவர்கள்தான். இவர்களையெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை. தீவிர பாதிப்புள்ளவர்கள், வென்டிலேட்டர் உதவி தேவைப்படுபவர்கள், முழு நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டிய நிலையிலிருப்பவர்களை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் மிதமான பாதிப்புள்ளவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதால், மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவிட்டன. கூடுதல் நோயாளிகள் வரும்போது அவர்களை அனுமதிக்க இடமில்லாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. தேவையில்லாமல் அதிக மனிதவளமும் வீணாகிறது.

Corona (Representational Image)
Corona (Representational Image)
வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion

மிதமான பாதிப்புள்ளவர்களை வீட்டுக் கண்காணிப்பில் வைத்து, தீவிர பாதிப்புள்ளவர்களை மட்டும் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளித்தால், உச்சநிலையின்போது எளிதாக நோயாளிகளைக் கையாளலாம்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு