Published:Updated:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை எப்போது ஏற்படும்?

Coronavirus
Coronavirus

இரண்டாவது அலை என்பது, கொரோனா ஏற்பட்ட ஒரு பகுதியில் அதன் தாக்கம் முற்றிலும் தணிந்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஏற்படுவது. நம் நாட்டில் இப்போதுதான் நாம் பாதிப்பின் உச்சத்தைத் தொடவிருக்கிறோம்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல, லாக்டௌனில் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் இரண்டாம் அலையைப் பற்றி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 1,00,000-க்கு மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதால் இதை அறிவித்துள்ளது.

Corona pandemic
Corona pandemic

சீனாவில், 50 நாள்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலை நீடித்தது. ஆனால், தற்போது பெய்ஜிங் மாகாணத்தில் கோவிட்-19 தொற்று அதிகமாகப் பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஐசிஎம்ஆர் அமைப்பின் ஆய்வறிக்கை, 'நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்' என்று கூறியுள்ளது. அதாவது, சீனாவில் கோவிட்-19 வைரஸ் தோன்ற அரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கும் வேளையில்தான், இந்தியாவில் இதன் பாதிப்பு தீவிரமடைய உள்ளது.

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

நம் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவது அலை உருவாகுமா என்பது பற்றித் தெரிந்துகொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி தி. மாரியப்பனிடம் பேசினோம்.

விஞ்ஞானி தி. மாரியப்பன்
விஞ்ஞானி தி. மாரியப்பன்

"இந்தியாவில் இரண்டாவது அலை உருவாவது என்பது பல காரணிகளைச் சார்ந்தது. இந்தியாவில் முதல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது ஜனவரி மாதத்தில். அதன் பிறகு மார்ச் 25 முதல் இங்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இப்போது, நாம் ஐந்தாம் கட்ட ஊரடங்கை சில தளர்வுகளுடன் கடைப்பிடித்துவருகிறோம். மக்கள் பின்பற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்துதான் கொரோனாவின் பரவல் தடுப்பும் இருக்கும். ஊரடங்கால்தான் இந்தியாவில் ஆரம்பகட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருகிறது.

இரண்டாவது அலை என்பது, கொரோனா ஏற்பட்ட ஒரு பகுதியில் அதன் தாக்கம் முற்றிலும் தணிந்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஏற்படுவது. நம் நாட்டில் இப்போதுதான் நாம் பாதிப்பின் உச்சத்தைத் தொடவிருக்கிறோம். எனவே, அதற்குப் பின் தொற்று தணிந்து, சில மாதங்களுக்குப் பிறகுதான் இரண்டாம் அலைக்கான சூழல் பற்றி நாம் யோசிக்க முடியும். முதலில், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாம் கடைப்பிடித்துவரும் ஊரடங்களின் பலனாக முழுமையாக இல்லாமல் ஆக வேண்டும். அதன் பிறகு, சிறிது காலம் கழித்து மீண்டும் வந்தால், அதை நாம் இரண்டாவது அலை என்று அழைக்கலாம்.

corona virus
corona virus
``கொரோனா வார்டுல இறந்த அம்மா...'' - மகனின் குற்றச்சாட்டும் மருத்துவமனையின் பதிலும்

இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுக்க, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் கைகொடுக்கும். கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் முடிந்தாலும், உலகிலிருந்து கோவிட்-19 அழியும்வரை, பின்வருவனவற்றைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தொற்றுப் பரவல் மீண்டும் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.

முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கூட்டமாகக் கூடுவது இரண்டாவது அலைக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்பதால், தவிர்க்க வேண்டும். எனவே, மக்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்தே இரண்டாவது அலை உருவாவதும் தள்ளிப்போவதும் அமையும். இவற்றைத் தாண்டி, கோவிட்-19 வைரஸின் தகவமைப்பு மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் தன்மையில் ஏற்படும் மாறுபாடுகளும் இரண்டாம் அலைக்கான காரணங்களாக அமையலாம்.

Corona
Corona

இப்போதுள்ள சூழலை வைத்துப்பார்க்கும்போது, இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதத்துக்குப் பிறகுதான் இரண்டாவது அலை உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதுவரை இரண்டாவது அலை பற்றி நாம் அச்சப்படத் தேவையில்லை. இந்த முதல் அலையில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு