பேக்கரி உணவுகளை உட்கொள்ள வேண்டாம்... வைரலாகும் போலித் தகவல்! - மறுக்கும் உலக சுகாதார நிறுவனம்

பேக்கரி உணவுகள் குறித்த தகவலுக்கு, கோவிட் - 19 கொரோனா விளக்கம்!
இந்தியாவில் கடந்த சில வார காலமாக கொரோனா நோய்த் தொற்றின் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீட்டுக்குள் முடக்கிவைத்துள்ளது.

அத்தியாவசிய தேவைக்கான கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ள அரசு முதலில் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை இயங்க அனுமதியளித்தது.
குறிப்பிட்ட இந்த நேரத்தில் பொது மக்கள் முறையான சமூக விலகலைக் கடைப்பிடித்து கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கப்படாமல் விற்பனை நடக்கும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பேக்கரி கடைகளுக்கு மட்டும் கூடுதலாக இந்த தடையில் இருந்து தளர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
அவையும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை இயங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் போலி ஃபார்வர்டு ஒன்று பரவி வருகிறது. அதாவது உலக சுகாதார நிறுவனம் பொதுமக்களை பேக்கரி உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளதாகச் சொல்கிறது அந்த ஃபார்வர்டு. பேக்கரி உணவுகளைக் கழுவ முடியாது என்பதால், இவற்றின் மூலம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஃபார்வர்டு தகவலில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் லோகோ உடன் இந்தத் தகவல் பரவி வருகிறது.

கடந்த சில நாள்களாக இணையத்தில் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த பேக்கரி பதிவு ஊரடங்கு தடையில் இருந்து தளர்வுபெற்ற பேக்கரி கடைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் காரணமாக மக்கள் பேக்கரி உணவுகளைப் புறக்கணிக்கவும் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ந்த உலக சுகாதார நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து மறுப்பு தெரிவித்திருக்கிறது. பேக்கரி உணவுகளைச் சாப்பிட வேண்டாமென்று தாங்கள் எதுவும் சொல்லவில்லை என்றும், மேலும் அப்படி எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு கூறிவரும் போதிலும் இத்தகைய தகவல்கள் இணையத்தில் சுதந்திரமாக உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நம்பி, உடனே பகிரும் நம் மக்கள் ஒரு போதும் இது போன்ற பதிவுகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில்லை. இனியாவது கவனமாக இருப்போம்.