10 வாரங்களுக்கு முன்பு, ஒமிக்ரான் வேரியன்ட்டின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை கிட்டத்தட்ட 90 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது முதன்முதலில் பரவிய கோவிட் 19 தொற்று எண்ணிக்கையைவிட அதிகம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய நோய்த்தொற்றின் பாதிப்புகளைவிட ஒமிக்ரான் குறைந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், பல நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், ``குறைந்த பாதிப்புகளைக் கொடுப்பதால் ஒமிக்ரான் வேரியன்ட்டை குறைத்து மதிப்பிடக் கூடாது" என்று உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் எச்சரித்திருக்கிறார். மேலும், ``உலகின் பெரும்பாலான பகுதிகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரானின் வீரியம் குறைவாக இருப்பதாலும் தடுப்பூசிகள் வந்துவிட்டதாலும், வைரஸ் பரவுவதை இனி தடுக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சில நாடுகள் தீர்மானித்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்கூட்டியே வைரஸ் குறித்து முடிவெடுப்பது ஆபத்தானது என்றும், உலகெங்கிலும் உள்ள ஆறு பிராந்தியங்களுள் நான்கில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கட்டுபாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

5.8 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான டென்மார்க்கில், கடந்த வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
எனவே, பல நாடுகளும் அனுமானத்தில் முடிவெடுக்காமல், மெதுவாக சூழலை சிந்தித்துக் கையாளும்படியும், ஒரு நாட்டில் பின்பற்றுவதைப் பார்த்து மற்ற நாடுகளும் அதையே பின்பற்றாமல், அந்தந்த நாடுகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படும்படியும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.