``கொரோனா காலத்தில் உபயோகிப்பட்ட பல ஆயிரக்கணக்கான டன் மருத்துவக் கழிவுகள் குவிந்து மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது" என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் அதிகப்படியாக உபயோகிக்கப்பட்ட சிரின்ஜுகள், தொற்றைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசி பாட்டில்கள் போன்றவை தற்போது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் பிரச்னை என்னவென்றால், கோவிட் வைரஸானது, மருத்துவக் கழிவுகளின் மீது உயிர்ப்புடன் இருக்கும்போது கழிவுகளை எரித்துச் சுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கு, எளிதாக நோய்த் தொற்றும் அபாயம் உள்ளது. மேலும், கழிவுகள் எரிக்கப்படும்போது நிலப்பரப்புகள், நீரின் தரம் போன்றவையும் பாதிக்கப்படலாம். காற்றின் மூலம் நோய் கிருமிகள் பரவும் அபாயமும் உள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கழிவுகளை பொறுத்தவரையில், நவம்பர் 2021-ல், ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே கிட்டதட்ட 87,000 டன் எனவும், இது பல நூறு திமிங்கிலங்களின் எடைக்கு சமமானவை எனவும், இதில் பெரும்பாலானவை தற்போது கழிவுகளாக மட்டுமே எஞ்சியுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், உபயோகிக்கப்பட்ட சுமார் 140 மில்லியன் பரிசோதனைக் கருவிகள், 2,600 டன் பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்கும் திறன் கொண்டவை. இது ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் மூன்றில் ஒரு பங்கு நிரப்பக்கூடிய அளவுக்குச் சமம், தற்போது இவையும் கழிவுகளாக எஞ்சி உள்ளன.
இதுமட்டும் இல்லாமல் உலக அளவில் செலுத்தப்பட்ட சுமார் 8 பில்லியன் தடுப்பூசிகள், கண்ணாடிக் குப்பிகள், ஊசிகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டிகள் கிட்டத்தட்ட 144,000 டன் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளதாகவும் இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு கழிவுகளையே இன்னும் சுத்திகரிக்க முடியாத நிலையில், தற்போது அதிகரித்துள்ள கொரோனா கால மருத்துவக் கழிவுகள் மனித ஆரோக்கியத்துக்கும் சூழலுக்கும் ஊறுவிளைவிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.