Published:Updated:

`நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக இறப்புகள்...' -கொரோனா பரவலால் பதறும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா
கொரோனா

``கொரோனா வைரஸ் பாதிப்பு, சுகாதாரத்துறைக்கான பிரச்னை மட்டுமல்ல" - உலக சுகாதார நிறுவனம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பை, `உலகளாவிய பெருந்தொற்று நோய்' (Pandemic) என நேற்று அறிவித்துவிட்டது உலக சுகாதார நிறுவனம். இதற்கு முன் தொற்றுநோய் என்ற வட்டத்துக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, இப்போது `உலகளாவிய பெருந்தொற்று' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் எதிர்பார்த்தைவிடவும் மிகவும் வேகமாகவும் விரைந்தும் இந்த வைரஸ் உலகம் முழுக்கப் பரவுவதாலேயே இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

மருத்துவரும், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநருமான டெட்ராஸ் அதோனாம், கொரோனா தீவிரம் குறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ``இது வெறும் சுகாதாரத்துறைக்கான பிரச்னை மட்டுமல்ல; அனைத்துத் துறைகளுக்குமான பிரச்னையும்கூட. எனவே, அனைத்துத் துறை வல்லுநர்களும் இணைந்து, நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராட வேண்டும்" எனக்கூறியுள்ளார்.

டெட்ராஸ் அதோனாம்
டெட்ராஸ் அதோனாம்

மேலும் அவர், ``கடந்த வாரங்களில், நாங்கள் கணித்ததைவிடவும் அதிகமான இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டுவிட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் இதுவரையில் தாக்கியுள்ளது. எனவே உலக மக்களும், அனைத்து நாடுகளின் அரசுகளும் இதன் தீவிரத்தை உணர்ந்து, வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரும் தற்காப்பு முயற்சிகளை உடனடியாக விரைந்து மேற்கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

சீனாவைத் தாண்டிய நாடுகளில் கடந்த இரு வாரங்களில் பாதிப்பு 13 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார் மருத்துவர் டெட்ராஸ்.

தொற்றுநோயியல் மருத்துவர் மரியா
தொற்றுநோயியல் மருத்துவர் மரியா

உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் மருத்துவர் மரியா, கொரோனா குறித்துப் பேசும்போது, ``அனைத்து நாடுகளும், அதன் அரசாங்கங்களும், மருத்துவமனைகளையும் மருத்துவப் பணியாளர்களையும் தயார் செய்வதில் காட்டும் ஆர்வத்தைவிடவும் அதிகப்படியான ஆர்வத்தை வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் காட்ட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு