இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சினின் விநியோகத்தை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்தத் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் ஏஜென்சிகள் மூலம் இதனை விநியோகம் செய்வதை நிறுத்துமாறு அறிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்திக் குறைபாடுகள் காரணமாக கோவாக்சின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட்ட உற்பத்தி தரம் குறித்த ஆய்வில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்திடம் குறைபாடுகளைச் சரிசெய்து உற்பத்தித் தரத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவாக்சினைப் பெற்றுக்கொண்ட நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது. ஆனால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனும் விவரம் அறிக்கையில் இல்லை. உலக சுகாதார நிறுவனம் கோவாக்சினின் செயல்படும் திறனிலும், ஆபத்து - பயன்கள் விகிதத்திலும் (Risk - benefit ratio) எந்தவித மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ``கோவாக்சினை ஏற்கெனவே செலுத்திக்கொண்டவர்களின் தடுப்பூசி சான்றிதழ்கள் செல்லுபடி ஆகும். தடுப்பூசியின் செயல்திறன் குறித்தோ பாதுகாப்பு குறித்தோ யாரும் கவலைப்படத் தேவையில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவிட் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்துள்ளதாலும், தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் தொகையினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாலும் கோவாக்சின் உற்பத்தியை சற்று குறைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

கோவாக்சின் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஓமன், மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்குள் 100 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளைத் தயாரிப்பதை இலக்காக வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகப் பேசியுள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், ``தற்போது கோவாக்சின் உற்பத்தி செய்யப்படுவதற்கான கட்டமைப்பு வசதிகள், 100% இதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதில்லை. வெறிநாய்க்கடி, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பைக் கொண்டுதான் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவாக்சின் தடுப்பூசிக்கான பிரத்யேக கட்டமைப்பை தரம் உயர்த்திய பிறகு உலக சுகாதார நிறுவனத்திடம் முழு உரிமத்துக்கு விண்ணப்பிப்போம். இதற்கென்று எந்த காலக்கெடுவும் வழங்கப்படவில்லை. இதனை தரம் உயர்த்துவதுவதற்கு பல கோடிகள் செலவாகும்." என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் விநியோகத்தை நிறுத்தியது கோவாக்சினின் அமெரிக்கச் சந்தையை பாதிக்குமா என்றதற்கு, ``அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு அல்லது உடனடி விநியோகத்துக்கு தடுப்பூசிகளைக் கொடுக்க வேண்டும் என்பது எங்களது உத்தி அல்ல. மருந்தின் செயல்திறன் குறித்த ஆய்வை (Clinical Trials) அமெரிக்காவில் நடத்துவதற்கான அனைத்து ஒப்புதலையும் பெற்றிருக்கிறோம்.
முதலில் பெரியவர்கள், தொடர்ந்து குழந்தைகளுக்கும் கொடுத்து ஆய்வு நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் குறுகிய கால பயன்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அங்கு விநியோகம் செய்வதற்கான முழு உரிமத்தைப் பெறவே முயல்கிறோம். அதனால் உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பாரத் பயோ டெக் நிறுவனத்தின் வர்த்தகத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் கோவாக்சினை விநியோகிப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்துமாறு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து எங்களுக்கு எந்தவித ஆர்டரும் வந்ததில்லை. அதனால் நாங்களும் தடுப்பூசியை அவர்களுக்கு விநியோகித்ததில்லை. இந்திய அரசு மற்றும் சில நாடுகளுக்கு மட்டுமே அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.