Published:Updated:

``திங்கள் கிழமையும், மிட் வீக் பிரேக்கும்!’’- ஆல் டே ஜாலிடேவாக இருக்க சின்ன டிப்ஸ்

மிட் வீக் பிரேக்
மிட் வீக் பிரேக்

ஒரு விடுமுறை தரும் உற்சாகத்தை வேறு எதுவுமே தர முடியாது. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் `மிட் வீக் பிரேக்.'

ரு வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் அலுவலகத்துக்கு விடுமுறை என்று தெரிந்துவிட்டால் அந்த உற்சாகம் வியாழக்கிழமையே நம்மைத் தொற்றிக்கொள்ளும். சுறுசுறுப்பாக வேலை செய்வோம். அதுவும் அந்த வெள்ளிக்கிழமை மதியம் 4 மணிக்கு எங்கிருந்துதான் வருமோ அந்தக் குதூகலம்? யாரைப் பார்த்தாலும் புன்னகைப்போம். `ஆல் டே ஜாலிடே' மனநிலைக்கே சென்றுவிடுவோம்.

மிட் வீக் பிரேக்
மிட் வீக் பிரேக்

சனி, ஞாயிறு விடுமுறை என்று வரும்போது எல்லாவற்றையும் அடுத்த இரண்டு நாள்களில் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையுடன் வெள்ளிக்கிழமை இரவு அனைத்தையும் மறந்துவிட்டுத் தூங்கும் நிம்மதியான தூக்கத்துக்குச் சொர்க்கத்தையே தந்தாலும் ஈடாகாது. அதுபோல்தான் சனிக்கிழமை இரவும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவே நமது மனம் மீண்டும் சோர்ந்த நிலைக்குச் சென்றுவிடும். மறுநாள் வரப்போவது நமது பரம எதிரியான திங்கள்கிழமை ஆயிற்றே!

`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...

வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமையில் அலுவலகத்துக்கு வேண்டா வெறுப்பாகக் கிளம்பிச் செல்லும் நமக்கு `எந்திரத்தனமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான். ஆனால், இது போன்ற மனநிலை நம்மை உற்சாகம் குறைய வைத்து நமது வேலையில் பின்தங்க வைக்கலாம். இதற்கான ஒரு தீர்வே `மிட் வீக் பிரேக்' (Mid Week Break).

மிட் வீக் பிரேக்
மிட் வீக் பிரேக்

ஒரு விடுமுறை தரும் உற்சாகத்தை வேறு எதுவுமே தர முடியாது. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் `மிட் வீக் பிரேக்.' ஒரு வாரத்தில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் அலுவலகம் இருக்கும்போது நடுவில் புதன் அல்லது வியாழக்கிழமையில் நாமாகவே எடுத்துக்கொள்ளும் சிறு விடுப்புதான் `மிட் வீக் பிரேக்.'

ஒருவேளை `காம்ப்-ஆஃப்' போன்ற வாய்ப்பு உங்களுக்கு இருந்தால் அதைப் பயன்படுத்தி புதன், வியாழக்கிழமையில் விடுப்பு எடுப்பது சிறந்தது. அது இல்லாத பட்சத்திலும், விடுப்பே எடுக்க முடியாது என்ற நிலையிலும் புதன் அல்லது வியாழக்கிழமையில் அலுவலகம் முடிந்த பிறகு, சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குத் தனியாகவோ, பிடித்தவர்களுடனோ சென்று வரலாம். ஏனென்றால், அந்த வாரத்தின் மிச்ச நாள்களும் தொடர்ந்து வேலைபார்த்தாக வேண்டும் அல்லவா!

மிட் வீக் பிரேக்
மிட் வீக் பிரேக்

இது போல் இடையில் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரேக் நம்மை உற்சாகமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் நமது மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். இந்த `மிட் வீக் பிரேக்' முறையை மேலைநாட்டு மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஒருவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட தேவைப்படும் விடுமுறையின் அவசியம் பற்றியும், இந்த மிட் வீக் பிரேக் பற்றியும் மனநல ஆலோசகர் வசந்தி பாபுவுடம் பேசினோம்.

 மனநல ஆலோசகர் வசந்தி பாபு
மனநல ஆலோசகர் வசந்தி பாபு

"20 வருடங்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால் ஒரு வீட்டில் கணவர் வேலைக்குச் செல்வார். மனைவி வீட்டைப் பராமரித்துக் கொள்வார். ஒருவருக்கு ஒரு வேலையுடன் முடிந்துவிடும். ஆனால், தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற கட்டாயம். இருவரும் அலுவலகத்துக்குச் சென்று வந்த பிறகு, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, பாடம் சொல்லிக் கொடுப்பது என்று வேலைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால் இருவருக்குமே போதுமான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.

அதிகம் பேசும் பெண்... அதை  விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களிலும் உறவினர் வீட்டுக்குச் செல்வது, உறவினர் வருகை, ஏதாவது ஸ்பெஷலாகச் சமைப்பது, ஷாப்பிங் செல்வது என்று தொடர்ந்து பிஸியாகவே இருக்கும்போது பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை, குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேச நேரம் கிடைப்பதில்லை. மேலும், சரியான அளவு தூக்கம் இல்லாததாலும், அலுவலக வேலைப்பளு, முறையற்ற உணவு முறை, பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவற்றால் நமக்கு அதிக அளவு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அலுவலக வேலைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட முடியாது.

மிட் வீக் பிரேக்
மிட் வீக் பிரேக்

எனவே, இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட `மிட் வீக் பிரேக்' சிறந்த தீர்வாக இருக்கும். வாரத்தின் நடுவில் அலுவலகம் முடிந்ததும் சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் மனதுக்குப் பிடித்த இடத்துக்குச் சென்று வருவது மனதுடன் சேர்த்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்தப் பிரேக் `இது என்ன எந்திர வாழ்க்கை!' என்ற மனநிலையிருந்து நம்மை விடுபட வைத்து உற்சாகத்துடன் பணிபுரிய உதவும்" என்றார் மனநல ஆலோசகர் வசந்தி பாபு.

எனவே, மக்களே திங்கள்கிழமையைத் திட்டி மீம்ஸ் போடுவதை விட்டுவிட்டு மிட் வீக் பிரேக் பற்றி யோசிக்கத் தொடங்குவோம்.

அடுத்த கட்டுரைக்கு