Published:Updated:

போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் - நான் அடிமை இல்லை - 13

விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுவதில் தொடங்கி, போதைக்கு அடிமையாவதுவரை பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு, எல்லாம் எளிதாகத் தெரிவது ஏன்?

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் போதை மருந்து விவகாரத்தில் கைதானதை அடுத்து பெரிய இடத்துப் பிள்ளைகள் பலரின் பெயர்களும் சேர்ந்து கசிந்தன. விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுவதில் தொடங்கி, போதைக்கு அடிமையாவதுவரை பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு, எல்லாம் எளிதாகத் தெரிவது ஏன்?

உளவியல் விளக்குகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``பெரிய இடத்துப் பிள்ளைகள் போதைக்கு எளிதாக இலக்காவதன் பின்னணியில் அவர்களது வளர்ப்புமுறையும் குடும்பச் சூழலும் முக்கியப் பங்காற்றுகிறது. பணக்கார குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எப்போதுமே மிதமிஞ்சிய மகிழ்ச்சி கொடுக்கப்படுகிறது. அந்த மகிழ்ச்சியை பெற்றோர் வெளிப்படுத்தும் விதமும் மிதமிஞ்சியதாகவே இருக்கிறது. மிதமிஞ்சிய மகிழ்ச்சியை, எப்போதும் மிதமிஞ்சிய வெளிப்பாடு முந்திக்கொள்ளும். தங்கள் அந்தஸ்துக்கேற்ப அதை வெளிப்படுத்துவார்கள்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
பாலிவுட்டில் மட்டுமல்ல; கோலிவுட்டிலும் தலைவிரித்தாடும் போதை மோகம்; எங்கே, எப்படி? - 12

பிறந்தநாள் முதல் ஒவ்வொரு தருணத்தையும் அவர்கள் கொண்டாடும் விதமும் ஆடம்பரமானதாக இருக்கும். அவர்களுடைய வாழ்வில் கேளிக்கைகள், விருந்துகள், பார்ட்டி கலாசாரம் எல்லாம் அன்றாட நிகழ்வுகளாக மாறியிருக்கும். பணத்தால் எதையும் வெல்லலாம் என்ற எண்ணமும், பணமிருப்பதாலேயே உலகத்தின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.

சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டாலும் அதே பணத்தை வைத்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணமும் அவர்களுக்குள் பதிந்திருக்கும். பல வீடுகளில் பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர் குடிப்பதை, சிகரெட் பிடிப்பதைப் பார்க்கலாம். அதைப் பார்த்து வளரும் பிள்ளைகள் அதே லைஃப்ஸ்டைலுக்கு பழகுவார்கள்... சிலர் அதைவிட ஒருபடி மேலேபோய் போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கும் பழகுவார்கள்.

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பெரும்பாலும் தமக்கு இணையான அல்லது தன்னைவிடவும் வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளுடன்தான் சேர்வார்கள். அந்த நட்பு, கூடா நட்பாக இருக்கும்பட்சத்தில் அவர்களிமிருந்தும் போதைப் பழக்கம் இந்தப் பிள்ளைகளுக்குத் தொற்றிக்கொள்ளலாம். எவ்வளவு பிசியானவர்களாக இருந்தாலும் பெற்றோர், பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டியது நல்லுறவுக்கான அஸ்திவாரம்.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Mishal Ibrahim on Unsplash
தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! - நான் அடிமை இல்லை 11

பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்குள் ஏன் விழுகிறார்கள் என்பதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு.

கீழ்க்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அவர்களை போதைவலைக்குள் சிக்க வைக்கக்கூடிய ரிஸ்க் காரணிகள்:

- பெற்றோரின் கண்காணிப்பு இல்லாதது.

- பராமரிப்பாளர்கள், வீட்டு நபர்கள் எனப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வோர் அவர்களிடம் அக்கறையும் பொறுப்புமின்றி நடந்துகொள்வது.

- படிப்பதில் சிரமம், சவால்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

- கண்டறியப்படாத மனநலப் பிரச்னைகள்.

- பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என நெருங்கிய வட்டாரத்தில் உள்ளோருக்கு போதைப் பழக்கம் இருப்பது.

- போதைக்குப் பழகாவிட்டால் தான் தனது நட்பு வட்டத்தால் விலக்கப்படுவோம் என்ற பயம்.

- குழந்தைப் பருவத்தில் சந்திக்கும் பாலியல் வன்முறை மற்றும் உதாசீனம்.

அடுத்து வரும் விஷயங்கள் இந்த ரிஸ்க் காரணிகளிலிருந்து காப்பாற்றுபவை

- பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் பலமான குடும்ப உறவு.

- மென்ட்டார் அல்லது பாசிட்டிவ்வான ரோல் மாடல்கள் இருப்பது.

- பள்ளிக்கூடத்தில் பலதுறைகளில் பங்களிப்பு.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! - நான் அடிமை இல்லை - 10

- பிரச்னைகளை அணுகுவதிலும் கையாள்வதிலும் பக்குவம்.

- ஆரோக்கியமான நட்பு வட்டம்.

- அதீத தன்னம்பிக்கை.

- ஆரோக்கியமான குடும்பச் சூழல்.

ரிஸ்க் காரணிகளை எதிர்கொள்ளும் எல்லோரும் போதைப் பழக்கத்துக்குள் போவதில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.''

சரி... உங்கள் பிள்ளைக்கு போதைப் பழக்கம் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்கள்... அல்லது வந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் அவர்களுடனான உங்கள் உரையாடல் மிக மிக பக்குவமாக நிகழ்த்தப்பட வேண்டும். அது எப்படி..?

- அடுத்த அத்தியாயத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு