Published:Updated:

`உணவு முதல் கரியர் வரை; அனைத்தும் அறியலாம்!' - மாடர்ன் ஜாதகமா இந்த DNA டெஸ்ட்டிங்?

Representational Image
Representational Image ( Photo by Edward Jenner from Pexels )

நியூட்ரிஷன், ஃபிட்னஸ், ஹெல்த், அலர்ஜி, பர்சனாலிட்டி, கரியர் வரை எது நமக்கு சரியாக வரும் வராதென புட்டுபுட்டு வைக்கிறது புதிய அப்டேட்டடு ஜெனெடிக் டெஸ்டிங்.

டி.என்.ஏ டெஸ்டிங் எனும் மருத்துவ பரிசோதனையைப் பற்றி படங்கள் மற்றும் செய்திகளில் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அதென்ன டி.என்.ஏ டெஸ்டிங்? அதில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? விரிவாகப் பார்ப்போம்.

DNA
DNA

நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் டி.என்.ஏ-க்கள் இருக்கும். அதாவது தலைமுடி தொடங்கி பாதத்திலுள்ள சருமம் வரை அனைத்திலும் டி.என்.ஏ-வின் முழுமையான தொகுப்பு நிச்சயம் அமைந்திருக்கும். ஒருவரின் கண்ணின் கருவிழி நிறம் தொடங்கி குணாதிசயங்கள் வரை தீர்மானிப்பது இந்த டி.என்.ஏ-க்கள்தான். பொதுவாக, 99.9% டி.என்.ஏ-க்கள் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும். 0.1% மட்டுமே டி.என்.ஏ-வில் வேற்றுமைகளைக் காண முடியும். இதையே மருத்துவத் துறையில் மரபணு மார்க்கர்கள் என்கிறார்கள். இதைக் கண்டறியத்தான் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. இப்படி, உயிரின் மொத்த மரபணு குறியீடுகளும் அடங்கியுள்ள டி.என்.ஏ-க்களை ஆராய்வதே டி.என்.ஏ டெஸ்டிங் எனப்படுகிறது.

டி.என்.ஏ டெஸ்டிங் என்றவுடன் உடனே கண்முன் வந்துசெல்வது பெற்றோர் யாரெனத் தெரியாத குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் உச்சக்கட்ட முயற்சியாகத் திரையில் ஓட்டப்படும் காட்சிகள்தான். மனித உடலின் சாஃப்ட்வேர் சிஸ்டமான டி.என்.ஏ-க்கள் பரம்பரை நோய்களைக் கண்டுபிடிப்பதிலும், தடயவியல் பரிசோதனைகளிலும், மரபணு சிகிச்சைகளிலும்கூட முக்கிய பங்கை வகிக்கிறது.

மருத்துவர் மனோஜ் குணசீலன் (clinical research physician)
மருத்துவர் மனோஜ் குணசீலன் (clinical research physician)

இவற்றைப் பற்றி பெரிதாக நாம் கேள்விப்படவில்லை என்றாலும் இவை முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அப்படியான ஜெனெடிக் டெஸ்டிங் `ஹெல்த் ஹாரஸ்கோப்பாகவும்' மாறியிருப்பதுதான் இப்போதைய அப்டேட். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், `புயல் வருவது தெரிந்து ஓரிடத்துக்குப் போகிறோம் என்றால் முன்னெச்சரிக்கையோடு போவோம். முன்ஜாக்கிரதையோடு செல்வதால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். இதைத்தான் `அப்டேட்டடு ஜெனெடிக் டெஸ்டிங்' செய்து காட்டுகிறது என்கிறார் கிளினிகல் ரிசர்ச் மருத்துவர் மனோஜ் குணசீலன். இதுகுறித்து மேலும் விளக்குகிறார்.

``ஆடை, ஆபரணங்கள் தொடங்கி அன்பளிப்புகள் வரை விருப்பங்களுக்கு ஏற்ப பர்சனலைஸ் செய்துகொள்வது போலவே ஜெனெடிக் டெஸ்டிங்கிலும் அப்டேட் வந்திருப்பதுதான் மலைக்க வைக்கிறது. அதாவது நியூட்ரிஷன், ஃபிட்னஸ், ஹெல்த், அலர்ஜி, பர்சனாலிட்டி, கரியர் வரை எது நமக்கு சரியாக வரும் வராதென புட்டுபுட்டு வைக்கிறது புதிய அப்டேட்டடு ஜெனெடிக் டெஸ்டிங்.

Health
Health
Pixabay

உடம்பின் சாஃப்ட்வேர் சிஸ்டமான ஜீன்களின் ரன்னிங் கோடான என்சைம்களை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து வேலைகளும் உடலில் நடக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரே வயது மற்றும் ஒரே பருமனுள்ள இரு நண்பர்கள் உடல் மெலிவதற்கு ஆலோசனை செய்து சிகிச்சைக்குச் செல்கிறார்கள். ஒருவருக்கு பேலியோ டயட் பிரமாதமாக வேலை செய்கிறது மற்றவருக்கு வயிற்றுப்போக்கு பிரச்னைதான் ஏற்படுகிறது.

அதைப்போல ஒருவருக்கு யோகா செய்வது நடைப்பயிற்சி மேற்கொள்வதிலேயே உடம்பு இளைக்கிறது. மற்றவருக்கு தனக்கு ஏன் உடல் இளைக்கவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கும். இதற்கு உடல்வாகுதான் காரணம். எவை நம் உடலுக்கு செட் ஆகும் ஆகாது என்பதை மருத்துவர் டி.என்.ஏ-க்களை ஆராய்ந்தே கூறிவிடுவார். இதன்மூலம், டயட்டிங் முதல் ஜிம்மிங் வரை ட்ரையல் அண்ட் எரர் செய்வதைத் தவிர்த்துவிட்டு, எந்த வகை உணவுகள் மற்றும் எந்த உடற்பயிற்சிகள் உடலுக்குப் பொருந்துமோ அவற்றைக் கடைப்பிடிக்க முடியும்.

ஃபிட்னஸ் எக்ஸர்சைஸ் மேற்கொள்ளும்போது உடம்பு வேகமாக இளைப்பதும் இளைக்காததும் ஃபேட் மாலிஃக்யூள்கள் எரிக்கப்படும் அளவைப் பொறுத்தே அமைகிறது. மாலிஃக்யூள்கள் வேகமாக எரிக்கப்படுவதும் என்சைம்களின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த என்சைம்களின் அளவை டி.என்.ஏ-க்களை ஆராய்வதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த டி.என்.ஏ-க்கள் கைரேகையைப்போல நிரந்தரமானவை என்பதால் இந்த ஜெனெடிக் டெஸ்டிங்கை ஒருமுறை செய்துகொண்டாலே போதுமானது. அது போல, ஒரு நோய் தாக்கினால் அதன் பாதிப்பு எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பது தொடங்கி நோய் எதிர்ப்பு சக்தி உடலில் எவ்வளவு உற்பத்தி ஆகும் என்பதுவரை முன்கூட்டியே டி.என்.ஏ டெஸ்டிங்கில் தெரிந்துகொள்ள முடியும். இது கோவிட் தொற்றுக்கும் பொருந்தும். ஆனால், கோவிட் பாசிட்டிவ் இருக்கிறதா இல்லையா என்பது இதில் தெரியாது.

Exercise
Exercise
Photo by Fitsum Admasu on Unsplash

நீரிழிவு, மன அழுத்த நோய் போன்று நீண்டகாலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு டி.என்.ஏ டெஸ்டிங் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். எந்த மருந்து உடலுக்கு செட் ஆகும் என்பதை டி.என்.ஏ டெஸ்டிங் கூறிவிடுவதால் ஒவ்வொரு மருந்தாக இது செட் ஆகுமா அது செட் ஆகுமா என மாற்றிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதனால் மருந்துகளால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

இதைப்போலவே நியூட்ரிஷன், ஹெல்த், அலர்ஜி போன்றவற்றிலும் எது நம் உடம்புக்கு சரியாக வரும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஃபிட்னஸ், நியூட்ரிஷன், ஹெல்த் பற்றி டி.என்.ஏ-க்களை ஆராய்ந்து கூறுவது சரிதான்... எப்படி ஒருவரின் பர்சனாலிட்டியையும் அவருக்கு ஏற்ற கரியரையும் கூற முடியும் என்ற கேள்வி சிலருக்கு எழும்.

குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவர் எப்படி ரெஸ்பான்ஸ் செய்கிறார் என்பதைப் பொறுத்தே அவரின் பர்சனாலிட்டி நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் ரெஸ்பான்ஸ் செய்வது அவர் ஸ்ட்ரெஸ்ஸை ஹேண்டில் செய்யும் விதத்தைப் பொறுத்து அமைகிறது. இதையும்கூட டி.என்.ஏ-களில் இருக்கும் என்சைம்களை வைத்து அறிந்துகொள்ளலாம்.

ஸ்ட்ரெஸ்ஸை கையாளும் அளவைப் பொறுத்து ஒருவருக்கு ஏற்ற கரியரையும் கூறிவிட முடியும். ஒரே மாதிரியாக ஸ்ட்ரெஸ்ஸை கையாள்பவர்கள் திருமணம் செய்துகொண்டால் குழந்தைகளுக்கும் அதே பிரச்னையே வரும். இதை டி.என்.ஏ டெஸ்டிங் செய்துகொள்வதன் மூலம் முன்கூட்டியே கண்டுபிடித்துவிடுவதால் தவிர்த்துவிடலாம். அதனால்தான் `மாடர்ன் ஹாரஸ்கோப்பாகவும்' மாறியிருக்கிறது" என்கிறார் மருத்துவர் மனோஜ் குணசீலன்.

அடுத்த கட்டுரைக்கு