கொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன்? `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து குணமடைந்த பிறகும் தொடரும் உடல்நல சிக்கல்களுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் பெரும்பாலானோரின் உடல்நிலை சில நாள்களிலேயே மீண்டும் மோசமடைந்து வருவதைக் காணமுடிகிறது.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குக் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையிலிருந்தபோதே அவரின் உடல்நலம் மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கொரோனா குணமடைந்ததாகவும், அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பி இன்று மறைந்துவிட்டார்.
இதேபோல் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர், கொரோனா குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து மீண்ட சிலரிடம் பேசியபோது, `கொரோனா ஏற்பட்டு, அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்த பிறகும், உடல் சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல், காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் தொடர்வதாகக் கூறுகின்றனர். சிலருக்கு நுரையீரல், இதயம் தொடர்பான பிரச்னைகளும் மன உளைச்சலும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இத்தாலி நாட்டின் ஓர் ஆய்வில் கொரோனா குணப்படுத்தப்பட்ட 600 கோவிட் நோயாளிகளைத் தொடர்ந்து கவனித்ததில், அவர்களில் 50 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பிரச்னைகளும், 10 சதவிகிதத்தினருக்கு இதயநோயும், 10 சதவிகிதத்தினருக்கு நரம்புத் தளர்ச்சியும், 9 சதவிகிதத்தினருக்கு தசைகளில் தொடர் வலியும் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த Post Covid Syndrome ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?
கொரோனா குணமான பிறக்கும் தொடரும் இந்த உடல்நல சிக்கல்கள் ஏன், எதனால் ஏற்படுகின்றன... தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

``ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து குணமடைந்த பிறகும் தொடரும் உடல்நல சிக்கல்களுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. மற்றொன்று பாதிப்பிலிருந்தபோது உடலுக்குள் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மாற்றம். கொரோனாவிலிருந்து விடுபட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், குணமடைந்த பிறகும் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் குறிப்பிட்ட காலம்வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள், உடற்பயிற்சி மூலம் இந்தப் பிரச்னைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம். ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு குணமான பின்பு, ஒரு வித மனஅழுத்தமும் பயமும் ஏற்படுவது இயல்பே. இந்த மனஅழுத்தம் கொரோனா தொற்றில் சற்று அதிகமாகவே உள்ளது. இது உலகளாவிய தொற்று என்பதால். இதிலிருந்தும் எளிதில் வெளியேறிவிடலாம். இந்தப் பிரச்னை அதிகரிக்கும் பட்சத்தில் மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் தகுந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனாவுக்குப் பின்பு ஏற்படும் நுரையீரல் பிரச்னைகள், இதய கோளாறு, பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு கொரோனா வைரஸ் உடலுக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் காரணமாகின்றன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நுரையீரல் வீக்கமடைந்து, அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும், நுரையீரலில் உள்ள செல்கள் சிதைவடைந்து `ஃபைப்ரோசிஸ் (Pulmonary fibrosis)' நிலையை எட்டியிருக்கும். இந்த நிலையில் நுரையீரல் சுருங்கி அதன் செயல்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதால் மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவு குறைவதால் சோர்வு, மயக்கம், தலைவலியும் ஏற்படும். கொரோனாவின் காரணமாக நம் ரத்தக்குழல்களில் ரத்தம் சிறுசிறு கட்டிகளாக உறைந்து அடைத்துக்கொள்ளும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் இந்த அடைப்பு ஏற்பட்டால் அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழல்களில் ரத்தம் உறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது.
கொரோனா பாதிப்பின் வீரியம், தொற்று ஏற்பட்டவரின் வைரல் லோடு (Viral Load) அளவைப் பொறுத்தது. வைரல் லோடு என்பது ஒருவரின் உடலில் வைரஸ் எந்த எண்ணிக்கையில் பரவியிருக்கிறது என்பதைக் குறிக்கும். இந்த அளவு அதிகமாக இருந்து, பாதிக்கப்பட்டவர் வயதானவராகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் இறக்க நேரிடலாம். அதுவே, வைரல் லோடு குறைவாக இருந்தால் அவரை தீவிர சிகிச்சையின் மூலம் பிழைக்க வைக்கலாம்.

அதுவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள பதின்ம, நடுத்தர வயதினருக்கு இந்த வைரல் லோடு அதிகமாக இருந்தால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மருத்துவ சிகிச்சைகளிலேயே இவர்களைக் குணப்படுத்திவிடலாம். ஆனால், உடலுக்குள் அதிக வைரஸ் இருந்ததால், அவை அதிகமாக மாற்றங்களை உள்ளுறுப்புகளில் ஏற்படுத்தியிருக்கும். அதனால் கொரோனாவுக்குப் பின்னான இந்த உடல்நலக் கோளாறுகள் பெரும்பாலும் இந்தத் தொற்றிலிருந்து குணமான பதின்ம, நடுத்தர வயதினருக்கே ஏற்படுகின்றன.
மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்க கொரோனாவிலிருந்து குணமான பின்பு `போஸ்ட் கோவிட் கேர் (Post covid care) சிகிச்சைகளை மருத்துவமனையில் தங்கியோ, வீட்டிலிருந்தோ எடுத்துக்கொள்வது நல்லது" என்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சித்ரா.