Published:Updated:

Covid Questions: 3-வது முறை தொற்று உறுதி; 2 முறை ஏற்பட்ட பாதிப்பால் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகாதா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என் தோழிக்கு முதல் அலையில் ஒருமுறை, இரண்டாம் அலையில் ஒருமுறை என இரண்டு முறை கொரோனா தொற்று வந்து குணமானார். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்களுக்கு உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதனால் தடுப்பூசியைத் தள்ளிப்போட்ட என் தோழிக்கு சமீபத்தில் மூன்றாவது முறையும் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். தடுப்பூசி போட்டாலும் அதன் பலன் 6 - 8 மாதங்கள்தான் நீடிக்கும் என்கிறார்கள். தொற்று வந்த பிறகும் நோய் எதிர்ப்பாற்றல் இல்லை... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

- சௌதாமினி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி
மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``எந்தவிதமான தொற்று ஏற்பட்டாலும் அது உடலில் அதற்கான எதிர்ப்புசக்தியை உருவாக்கும். அது எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது அந்தத் தொற்றின் வகையைப் பொறுத்து மாறும். சின்னம்மை வந்தவர்களுக்கு அதன் பிறகு ஆயுள் முழுவதும் அது திரும்ப வராது. அது ஒருவகையான எதிர்ப்பாற்றல். கோவிட் வைரஸ் தொற்று வந்தவர்களுக்கும் ஒருவகையான எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஆனால், அது மறுமுறை கோவிட் தொற்றே ஏற்படாத அளவுக்குத் தடுக்குமா என்பதோ, அந்த எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் இருந்துவிட்டுப் போய்விடுமா என்பதோ இன்னும் நமக்கு சரியாகத் தெரியவில்லை. இதுகுறித்த மாறுபட்ட கருத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் தொற்று ஏற்பட்ட பிறகு மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது, தடுப்பூசி போடுவதற்கு முன் தொற்று வந்தாலும், முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு, தொற்று வந்தாலும், தொற்றின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததில் இருந்து மூன்று மாதங்கள் கழித்தே தடுப்பூசி போடச் சொல்கிறோம்.

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்?

மூன்றாவது முறையாக கொரோனா தொற்று என்பது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்தான்... எதிர்ப்புசக்தி என்பது நம் உடலில் இருப்பது, தடுப்பூசியின் மூலம் உருவாவது என இரண்டு வகைப்படும். கொரோனாவுக்கான தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலை உருவாக்குபவையா என்பது இன்னும் தெரியவில்லை. அவற்றின் பாதுகாப்பு எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது பற்றி இனிதான் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

அதே நேரம் அமெரிக்கா போன்ற நாடுகளில் செலுத்தப்படும் mRNA வகை தடுப்பூசிகளால், குறிப்பிட்ட சாராருக்கு சராசரியாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி, அளவில் வேறுபடுவது தெரிகிறது. அதாவது இளம் வயதினருக்கு ஏற்படும் அதே அளவு எதிர்ப்பாற்றல் வயதானவருக்கு ஏற்படாது அல்லது நாள்பட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அது குறைவாக இருக்கலாம். அதனால் அமெரிக்காவில், குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஒன்று தேவைப்படலாம் என்று யோசித்து அதற்கான அறிவுறுத்தல்களை ஆரம்பித்திருக் கிறார்கள். ஆனால், இது அங்கே செலுத்தப்படும் mRNA வகையைச் சேர்ந்த ஃபைஸர் தடுப்பூசிக்கு மட்டும்தான் பொருந்தும் என்கின்றன தரவுகள். மற்ற தடுப்பூசிகளைப் பற்றித் தெரியவில்லை.

Corona Virus (Representational Image)
Corona Virus (Representational Image)
Pixabay

கோவிட் தடுப்பூசி என்பது நம் நோய் தீவிரமாவதை 99 சதவிகிதம் குறைக்கிறது. ஆபத்தைக் குறைக்கிறது. தவிர தொற்று ஏற்படுவதை 60 முதல் 80 சதவிகிதம்தான் குறைக்கிறது. அதனால் தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று வரலாம். அப்படியே தொற்று வந்தாலும் மிதமான அறிகுறிகளுடன் கடந்துவிடுவார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படுவதில்லை. அதனால்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கைகழுவுதல் போன்றவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல மூன்றாவது முறை, இரண்டாவது முறை தொற்று என்பது மிக மிக அரிதாகவே ஏற்படுகிறது. அது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்தது. கோவிட் வைரஸானது உடலைவிட்டு முழுமையாக நீங்கவே பல நாள்கள் ஆவதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் ஸ்வாப் டெஸ்ட், ஆர்டிபிசிஆர் டெஸ்ட்டில் பலநாள்கள் கழித்துகூட பாசிட்டிவ் என வருகிறது. நோய் குணமாகிவிட்டதா எனப் பார்க்கச் செய்யப்படுகிற டெஸ்ட்டையும் இப்போது நிறுத்திவிட்டார்கள்.

covid vaccine
covid vaccine
AP Photo/Pavel Golovkin
Covid Questions: கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா?

இப்போது நமக்கு கிடைக்கும் தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர்ப்பாற்றல் என்பது வாழ்நாள் முழுக்க தொடருமா என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. பூஸ்டர் தேவைப்படலாம் என்ற நிலைதான் இப்போதைக்குச் சொல்லப்படுகிறது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு