வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? #ExpertOpinion
`காற்று மாசுபடுவதால் இந்தியர்களின் ஆயுள் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் வரை குறைகின்றன'

சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கும் நம்மால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை என்ற பேருண்மையை அண்மையில் புரிந்துகொண்டோம். டெல்லியில் தொடங்கிய காற்று மாசுபாடு பிரச்னை தமிழகத்திலும் நுழைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து காற்று மாசுபாடு பிரச்னை நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், `லேன்செட்' மருத்துவ இதழ் `Lancet Countdown 2019 on health and climate change' என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் 2016-ம் ஆண்டில் வெளிப்புறக் காற்று மாசுபாட்டால் (Outdoor Air Pollution) இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைவிட அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்துபோன 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் `உரிய காலத்துக்கு முன்னரே' இறப்பு (Premature Death) ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். சுத்தமான காற்றை சுவாசித்திருந்தால் இவர்கள் அனைவரும் கூடுதலாகச் சில காலம் உயிரோடு இருந்திருக்க வாய்ப்புள்ளது.
`லேன்செட்' இதழின் மற்றோர் ஆய்வறிக்கையின்படி, இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு நாள்கள் மட்டுமே, `சுவாசிக்க உகந்த காற்று' இருந்துள்ளதெனக் கூறப்பட்டிருந்தது. டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வு முடிவில், காற்று மாசுபடுவதால் இந்தியர்களின் ஆயுள் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் வரை குறைகின்றன எனத் தெரியவந்துள்ளது.
`பொதுவாகவே, புகைமூட்டம் எந்தளவு இருக்கிறதென்பதைப் பொறுத்துதான், காற்று மாசுபாட்டைத் தீர்மானிக்கிறோம். அங்குதான் சிக்கல் ஆரம்பிக்கின்றது. காற்று மாசுபாட்டின் மிகத்தீவிரமான நிலையில்தான் புகைமூட்டம் ஏற்படும். அதனால் புகைமூட்டம் இல்லையென்றால், காற்று சுத்தமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளக்கூடாது. டெல்லியின் காற்று எப்போதும் மாசுபட்டுத்தான் இருக்கின்றது!' எனக் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதென்பது உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பிரச்னை என்பதால், அதை `உலக காலநிலை எமர்ஜென்சி' என்று அறிவிக்க வலியுறுத்தி 11,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
இவ்வளவு ஆபத்தான விஷயமாகப் பார்க்கப்படும், காற்று மாசுபாட்டை சமாளிக்கப் பலர் மாஸ்க் அணிந்துகொள்கின்றனர். இதனால் பிரச்னையைச் சரிசெய்ய முடியுமா? ஏற்கெனவே சுவாசக் கோளாறுகள் இருப்பவர்கள் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பது போன்ற முக்கியமான சந்தேகங்களைப் பொதுநல மருத்துவர் கண்ணையனிடம் கேட்டோம்.

உட்புற மாசு கவனம்!
காற்று மாசுபாடு என்றவுடன் பலரும் வெளிப்புறங்களில் சுவாசிக்கும் காற்றில்தான் கவனமாக இருக்க வேண்டுமென நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றைய சூழலில் வீட்டினுள், அலுவலகத்துக்குள் சுவாசிக்கும் காற்றிலும்கூட (Indoor Pollution) அதிக மாசு காணப்படுகிறது. வெளிப்புற மாசுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை உட்புற மாசு. உட்புற மாசுபாட்டைப் பொறுத்தவரையில், மற்றவர்களைவிட சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். காரணம், உட்புற மாசுள்ள இடத்தில் வெகுநேரம் இருந்தால், சுவாச சிக்கல்கள் தீவிரமடையத் தொடங்கும். பொதுவாக சுவாச சிக்கல்கள் உள்ளவர்கள் பூட்டிய இடங்களில் வெகுநேரம் இருக்கக்கூடாது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் புகை அதிகமிருக்கும் இடங்களிலும் அதிக நேரம் செலவிடக்கூடாது.
தீர்வாகும் இண்டோர் பிளான்ட்ஸ்

வீட்டில் `ஏர் ப்யூரிஃபையர்' (Air Purifier) பொருத்துவதன் மூலம், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும், உட்புற மாசைத் தடுக்கலாம் எனச் சிலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. உட்புற மாசுபாட்டுக்கான சிறந்த மற்றும் சரியான தீர்வு செடிகள்தான். அனைவரும் இயற்கையின் பக்கம் திரும்புவதும், வீட்டைச் சுற்றி, வீட்டுக்குள் சின்னச் சின்ன செடிகள் வளர்ப்பதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகும். சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள், இண்டோர் பிளான்ட்ஸ் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். பூக்கள் இல்லாத, இலைகள், தண்டு பெரிதாக இருக்கும் செடிகளாகத் தேர்ந்தெடுந்து வளர்க்க வேண்டும்.
மாஸ்க் என்பது நபருக்கு நபர் மாறுபடும். அதனால்தான் எந்தவொரு மாஸ்க்கும் அனைவருக்குமானது என்ற பரிந்துரையோடு இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான மாஸ்க் எதுவென்பதை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்தவும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எந்த வகை மாஸ்கைப் பயன்படுத்தினாலும் அது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் `டிஸ்போஸபிள் மாஸ்க்'காக இருப்பது சிறப்பு. மாஸ்க்கை உபயோகிக்கும்போது படபடப்பு, மூச்சிரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், அடைபட்ட அறைகளிலிருப்பது போன்ற உணர்வு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் மாஸ்க்கைத் தவிர்க்கவும்.

நுரையீரலுக்கு மட்டுமல்ல முழு உடலுக்கும் ஆபத்து!
காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரையில், `சுவாசக் கோளாறுகள் இருப்பவர்கள் மட்டுமல்ல சுவாசிப்பவர்கள் எல்லோருமே கவனமாக இருந்துதான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு நம்மைச் சுற்றியுள்ள காற்று முழுமையாக மாசுபட்டுள்ளது. பலரும், `காற்று மாசுபாடு' என்பது நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தும் என எண்ணுகின்றனர். உண்மையில் மாசான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் மட்டுமன்றி கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம், இதயம், மண்ணீரல் என உடலின் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும்.

சுத்தமற்ற காற்று நம் ரத்தத்தைக்கூட அசுத்தமாக்கிவிடலாம். ஆஸ்துமா தொடங்கி புற்றுநோய் வரையில் பல்வேறு தீவிர பாதிப்புகளுக்கு நம்மை இட்டுச்செல்லும் அளவுக்கு ஆபத்தானது காற்று மாசுபாடு.
கண்கள் பத்திரம்
புகைமூட்டம் அதிகமாகத் தெரிந்தால், அன்றைய தினம் நடைப்பயிற்சி மேற்கொள்வதைக்கூடத் தவிர்ப்பதே நல்லது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கண்களில் வறட்சி அதிகம் ஏற்படலாம். ஆகவே வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் உபயோகிக்கவும். கணினியில் அதிகம் வேலை பார்ப்பவர்கள் கண்களுக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும். தண்ணீர் நிறைய அருந்த வேண்டும். கண் வறட்சி, மூக்கில் ஏதேனும் பிரச்னைகள் போன்றவை தெரியவருபவர்கள் வைட்டமின் டி அளவைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது" என்கிறார் மருத்துவர் கண்ணையன்.