Published:Updated:

மாதவிடாய் சுழற்சியைப் பாதித்த லாக்டௌன்... காரணங்கள், தீர்வு!

மாதவிடாய் (Representational Image)
மாதவிடாய் (Representational Image)

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டௌனால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால் பல பெண்கள் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படுகின்றனர்.

கோவிட்-19 பெருந்தொற்று, மனிதர்களிடையே நேரடியாக மட்டுமன்றி மறைமுகமாகவும் சில தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது, பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு. பெண்களின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு மாதவிடாய்க்கு உள்ளது. சீரற்ற மாதவிடாயை பெண்களின் உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மைக்கான அறிகுறியாகக் கொள்ளலாம்.

Periods
Periods

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டௌனால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால் பல பெண்கள் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படுகின்றனர். இன்னும் சிலருக்கு ஒரு மாதத்திலேயே இரண்டு முறை மாதவிடாய் காலம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் என்னென்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன? மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ரம்யா ஜெயராமிடம் கேட்டோம்.

```லாக்டௌன் காலத்தில் பெண்களுக்கு உடல் இயக்கம் குறைந்துவிட்டதே இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணம். மேலும், வீட்டிலேயே இருப்பதால் நொறுக்குத்தீனி, கலோரி அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் உடல் எடையும் அதிகரிக்கிறது.

Obesity
Obesity

ஹார்மோன் கோளாறு!

35 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதற்கு LH (Luteinizing Hormone) மற்றும் FSH (Follicle-Stimulating Hormone) ஆகிய ஹார்மோன்கள் காரணமாக இருக்கின்றன. நமது உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும்போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது மாதவிடாய் சுழற்சிக்குத் தேவையான FSH ஹார்மோன் சுரப்பைக் குறைத்து, LH ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இதனால் உடல் சமநிலை பாதிக்கப்பட்டு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்.

மற்றொரு முக்கிய ஹார்மோனான தைராய்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களினால் எளிதாகப் பாதிக்கப்படும். உடல் எடை அதிகரிக்கும்போது தைராய்டு சுரப்பி தூண்டப்பட்டு ஹார்மோன் உற்பத்தியில் சமநிலையைப் பாதிக்கும். உடல் பருமனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic ovary syndrome - PCOS)' எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாகும். இதன் காரணமாகவும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை ஏற்படுகிறது.

உடல் இயக்கம், தூக்கம், உணவுமுறை, மனநிலை ஆகிய நான்கையும் சரியாக நிர்வகித்தால் மாதவிடாய் சுழற்சி நிச்சயம் சீராகும்.
மகப்பேறு மருத்துவர் ரம்யா ஜெயராம்

அடிவயிற்றில் கொழுப்பு சேரும்போது இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதாவது, உணவிலிருக்கும் கார்போஹைட்ரேட் குளூக்கோஸாக மாறும்போது அதன் அளவை இன்சுலின் கட்டுக்குள் வைக்கும் வேலையைச் செய்யும். உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது அதைச் சமநிலைப்படுத்துவதற்காக இன்சுலின் அதிகம் சுரந்து இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் உருவாகும்.

அதன் காரணமாக இன்சுலினின் வழக்கமான பணி பாதிக்கப்படும். இதனால் LH, FSH ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். விளைவாக முகப்பருக்கள் (Acne), ஆண்களைப்போல அடர் ரோமம் வளர்தல், வழுக்கைத் தலை பிரச்னை ஆகியவையும் ஏற்படலாம்.

மனஅழுத்தம் கவனம்!

லாக்டௌன் காலத்தில் உணவுப்பழக்கம், உறக்கம், உடல் இயக்கம் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. வெளியில் சென்று ரிலாக்ஸ் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாததாலும், வேலையின் அழுத்தம், வேலையிழத்தல், வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டே அலுவலகப் பணிகளைக் கவனித்தல் போன்ற பிரச்னைகளாலும் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு, ஹார்மோன்களின் சமநிலையைப் பாதித்து சீரற்ற மாதவிடாயை ஏற்படுத்தலாம்.

ஹார்மோன்கள் சமநிலையற்ற நிலை பொதுவாக 20 முதல் 35 வயதுடையவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால், லாக்டௌன் காலத்தில் 20 வயதுக்குக் கீழ் உள்ள இளம்பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

Dr.Ramya Jayaram
Dr.Ramya Jayaram

அடிக்கடி மாதவிடாய்?

கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

தீர்வு என்ன?

லாக்டௌன் காலத்தில் உடல், மனம் இரண்டையும் நலமாக வைத்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடிக்கடி வெந்நீர் அருந்துதல், குறிப்பிட்ட இடைவெளியில் ஆவி பிடித்தல் எல்லாம் உடல்நலனை மேம்படுத்த உதவும். புரதச்சத்து, காய்கறிகள் அதிகம் சேர்க்கும் உணவுமுறைக்கு மாற வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளைவிட உடற்பயிற்சியின் மூலம் எரிக்கும் கலோரிகளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். ஓரிடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Healthy Lifestyle
Healthy Lifestyle
லாக்டௌன்... குக்கீஸ் மாவு  பிசினஸில் கலக்கும் இளம்பெண்!

உடல், மன நல ஆரோக்கியத்துக்கு 7 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவு அதிக நேரம் விழித்திருக்கும்போது பசியெடுக்கும் என்பதால் இரவு நேரத்தில் சாப்பிடத் தோன்றும். இது உடல் எடையை அதிகரிக்கும். உடல் இயக்கம், தூக்கம், உணவுமுறை, மனநிலை ஆகிய நான்கையும் சரியாக நிர்வகித்தால் மாதவிடாய் சுழற்சி நிச்சயம் சீராகும்" என்றார்.

லாக்டௌன் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்பிய பெண்களும் இருக்கின்றனர். என்றாலும், அப்படி மாறியவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களைவிட மிகவும் குறைவு. லாக்டௌனை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு