வயதானால் சருமம் சுருங்குகிறது. தலைமுடி நரைக்கிறது. அதேபோல பார்வையிலும் முதுமைக்கான பிரச்னைகள் ஆரம்பமாகும்.
நம் கண்களை கேமராவாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதிலுள்ள ரோல் போன்றது விழித்திரை. அதன் மையப்பகுதிக்குப் பெயர்தான் மேகுலா. அதன் வழியாகத்தான் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், எழுதுகிறோம். முதுமையின் காரணமாக அந்தப் பகுதியில் வரும் பிரச்னையை ஏஜ் ரிலேட்டடு மேகுலர் டீஜெனரேஷன் (Age-related macular degeneration (AMD)) என்கிறோம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை வயதானவர்கள் பார்வையிழப்பதற்குப் பிரதான காரணம் இந்த `ஏஜ் ரிலேட்டடு மேகுலர் டீஜெனரேஷன்' பிரச்னைதான். அதுவே, இந்தியாவில் வயதானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக இருக்கிறது கேட்டராக்ட் எனப்படும் கண்புரை.
இந்தியாவில் முன்பெல்லாம் முதியவர்கள், பார்வையில் பிரச்னைகள் வந்தாலோ, பார்வை தெரியாமல் போனாலோ அது வயதானதன் அறிகுறி என அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இன்று பார்வை சிகிச்சைகள் நவீனமாகியிருக்கின்றன. விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. அதனால் பார்வையில் ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களை அணுகும் முதியவர்களிடம் ஏஜ் ரிலேட்டடு மேகுலர் டீஜெனரேஷன் பிரச்னையும் இருப்பதைக் கண்டறிகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அறிகுறிகள் எப்படியிருக்கும்?
நேர்க்கோடுகள் வளைந்ததுபோல தெரியும். காட்சிகளின் நடுவில் கரும்புள்ளிகள் போல தெரியும். ஒரு கட்டத்தில் நடுப்பார்வையே தெரியாமல் போகலாம். மிக அரிதாக, சிலருக்கு அந்தக் கரும்புள்ளிகள் வெடித்து, கண்களுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பார்வை தெரியாமல் போகலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎப்படிக் கண்டுபிடிப்பது?
முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி' என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம் கை நரம்பில் டை போன்ற திரவத்தை உள்செலுத்தி டெஸ்ட் செய்யப்படும். இப்போது டை இல்லாத ஆஞ்சியோகிராபி என்கிற நவீன டெஸ்ட் வந்துவிட்டது. அதன் பெயர் Optical coherence tomography angiography (OCT-A). இந்த நவீன டெஸ்ட்டின் மூலம் விழித்திரையை நான்காகப் பிரித்து அதன் எந்தப் பகுதியில் பிரச்னை இருக்கிறது என்று கண்டுபிடித்து சிகிச்சை செய்யப்படும்.
ஏஜ் ரிலேட்டடு மேகுலர் டீஜெனரேஷன் பிரச்னையில் `டிரை டைப்' மற்றும் `வெட் டைப்' என இரண்டு உண்டு.
`டிரை டைப்' என்பது வயதாவதால் ஏற்படுகிற வறட்சி. அதைக் குணப்படுத்த வழிகளே இல்லை. ஏதேனும் மருந்தை ஊசி வழியே செலுத்தி சரிசெய்ய முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் முடிவுகள் வந்தபாடில்லை. இந்தப் பிரச்னைக்கு வைட்டமின் சப்ளிமென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். அதனால்தான் சிறுவயதிலிருந்தே கலர்ஃபுல்லான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், பாதாம், வால்நட் போன்றவற்றைச் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.
அடுத்தது `வெட் டைப்'. இதில்தான் விழித்திரைக்குள் படலம்போல உருவாகி, அதிலிருந்து தண்ணீரும், ரத்தமும் கசிந்து, விழித்திரை வீங்கி, அதனால் பார்வைத் திறன் குறையும். கேமரா லென்சில் தண்ணீர் இருந்தால் அதன் வழியே பார்க்கிற காட்சிகள் தெளிவாகத் தெரியாதில்லையா, அதுபோலத்தான் இதுவும். இதைச் சரிப்படுத்த அந்தக் காலத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் சற்று சிக்கலானவையாக இருந்தன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்போது நவீன மருத்துவத்தில் கண்ணுக்குள் மருந்தை ஊசி வழியே செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை வந்திருக்கிறது. இந்த மருந்து விழித்திரைக்குள் ஊடுருவி வேலை செய்யும். பாதிப்பு சரியாகும் வரை இந்த ஊசியை மாதந்தோறும் போட வேண்டியிருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்காமல்விட்டால் பார்வையைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிலருக்கு இந்தப் பிரச்னை இரண்டு கண்களிலும் இருக்கும்.அரிதாகச் சிலருக்கு பாதிப்புள்ள பகுதி வெடித்து கண்கள் முழுவதும் ரத்தம் கசிந்தால், விட்ரெக்டமி எனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
இந்தப் பிரச்னை இருக்கலாம் என சந்தேகம் வந்தால் கண் மருத்துவரை அணுகுங்கள். ஆம்ஸ்லெர்ஸ் சார்ட் ( Amsler's Chart ) பயன்படுத்தி பார்வைத் திறனைப் பரிசோதிக்கும் முறையை உங்கள் விழித்திரை மருத்துவர் கற்றுத் தருவார். மருத்துவர் தரும் அட்டையை சுவரிலோ, ஃப்ரிட்ஜ் டோரிலோ ஒட்டவைத்து ஒரு கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு நீங்களே டெஸ்ட் செய்துகொள்ளலாம். அதில் சந்தேகம் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.''
- பார்ப்போம்
- ராஜலட்சுமி

``எவ்வளவு நேரம் டிவி பார்க்கலாம்? குழந்தைகள் எவ்வளவு நேரம் பார்க்கலாம்?"
- அப்துல் ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)
``கூடியவரையில் ஸ்கிரீன் டைமை குறைத்துக்கொள்வதுதான் நல்லது. அதில் டிவியும் அடக்கம். இன்றைய சூழலில் வொர்க் ஃப்ரம் ஹோம், ஸ்டடி ஃப்ரம் ஹோம் என நாள் முழுக்க கம்ப்யூட்டர் மற்றும் செல்போனை பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் பலரும். அதன்பிறகு, மறுபடி டிவி-யில் ஐக்கியமாவது அவ்வளவு சரியானதல்ல. முடிந்தவரை டிவி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதுதான் கண்களுக்கு ஆரோக்கியம். அதே மாதிரி 2 முதல் 3 அடிகள் தள்ளி உட்கார்ந்து பார்ப்பதும் அவசியம்."
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.