Published:Updated:

ஓமிக்ரானால் ஏன் உயிரிழப்பு குறைவாக இருக்கிறது? புதிய ஆய்வுகள் சொன்ன பதில்!

Representational Image
News
Representational Image ( AP Photo )

ஓமிக்ரான் குறித்து விஞ்ஞானிகள் அச்சப்படக் காரணமே, இது சுமார் 50 முறை உருமாற்றம் அடைந்திருந்ததுதான். இதனால், இதன் வீரியம் தீவிரமாக இருக்கலாம் எனக் கணித்திருந்தனர். ஆனால், தற்போது எலிகளிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் அப்படியில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

ஓமிக்ரான் வேரியன்ட், டெல்டா வேரியன்ட்டைவிடவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், ஏன் இப்படி நடக்கிறது என்பதை விளக்கவில்லை. தற்போது, எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஏன் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது ஓமிக்ரான்?

நம்முடைய சுவாச மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். வாய், மூக்கு, தொண்டை போன்றவை மேல் சுவாச மண்டலம். மூச்சுக்குழல், நுரையீரல் போன்றவை கீழ் சுவாச மண்டலம்.

 • இதில், ஓமிக்ரான் வகை வைரஸானது, கீழ் சுவாச மண்டலமான நுரையீரலில் மிகக்குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. பெர்லின், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் உள்பட அண்மையில் பல இடங்களிலும், எலிகளை வைத்து நடந்த சோதனைகளில் இது உறுதியாகியிருக்கிறது.

 • இதற்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகளுமேகூட, ஓமிக்ரான் டெல்டாவைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது எனக் கூறின. ஆனால், அவை ஏன் அப்படி நடக்கின்றன எனக் கூறவில்லை.

 • மேலும், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் அலை உச்சத்திலிருந்தபோதும், மருத்துவமனையில் சேர்ந்திருந்த நோயாளிகளிடம் ஓமிக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல்கட்டமாக அதிகளவில் இளைஞர்களிடம் மட்டுமே ஓமிக்ரான் பரவியதால் இப்படி நடக்கிறதா அல்லது முந்தைய கொரோனா பாதிப்பினாலோ, தடுப்பூசியினாலோ மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பதால் இப்படி நடக்கிறதா என்பது குறித்து அப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், தற்போது இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் விடைசொல்லியிருக்கின்றன அண்மைய ஆராய்ச்சிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் நுரையீரலில் வலுவிழக்கிறது ஓமிக்ரான்?

ஓமிக்ரான் குறித்து விஞ்ஞானிகள் அச்சப்படக் காரணமே, இது சுமார் 50 முறை உருமாற்றம் அடைந்திருந்ததுதான். இதனால், இதன் வீரியம் தீவிரமாக இருக்கலாம் எனக் கணித்திருந்தனர். ஆனால், தற்போது எலிகளிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் அப்படியில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

 • ஓமிக்ரான் தாக்கிய எலிகளை ஆராய்ச்சி செய்தபோது, அதன் மூக்கு பகுதியில் வைரஸின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், இத்துடன் ஒப்பிடுகையில் நுரையீரல் பகுதியில் 10-ல் ஒருமடங்கு அல்லது அதற்கும் குறைவான அளவே ஓமிக்ரான் வைரஸ் எண்ணிக்கை இருந்திருக்கிறது.

 • பொதுவாக கொரோனா மூக்கு, தொண்டைப் பகுதிகளை பாதித்தால் பிரச்னையில்லை. விரைவில் குணமடைந்துவிடலாம். ஆனால், வைரஸ் நுரையீரலை அடையும்பட்சத்தில் அது நம்மை உயிரிழப்பு வரை கொண்டுசெல்லலாம். ஓமிக்ரான் விஷயத்தில் அது நடக்கவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 • ``பெரும்பாலான நுரையீரல் செல்கள் TMPRSS2 என்ற புரதத்தைக் கொண்டிருக்கும். இதற்கு முந்தைய கொரோனா வேரியன்ட்கள் நுரையீரலுக்குள் நுழைந்தபோது, இந்தப் புரதம்தான், கொரோனா வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவி செய்திருக்கிறது. ஆனால் ஓமிக்ரானை, இது அப்படி அனுமதிக்கவில்லை. எனவேதான், நுரையீரல் பகுதியில் ஓமிக்ரானால் பல்கிப்பெருக முடியவில்லை என்கிறார்” கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி ரவீந்திர குப்தா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்படியெனில் இனி அச்சப்பட வேண்டாம்தானே?

அப்படி சொல்லிவிட முடியாது. ஏனெனில், இந்த ஆராய்ச்சிகள் ஏன் ஓமிக்ரான் நுரையீரலை விட்டுவைக்கிறது என்பதற்கு மட்டுமே விடைசொல்லியிருக்கின்றன. இதுவும்கூட முதல்கட்ட ஆய்வுகள்தான். இதைத் தொடர்ந்து குரங்குகள் மற்றும் மனிதர்களிடமும் ஆய்வு நடத்தியபின்புதான் 100% ஒரு முடிவுக்கு வரமுடியும். இதுபோக,

 • ஏன் ஓமிக்ரான் இவ்வளவு வேகமாகப் பரவுகிறது?

 • காற்றில் ஓமிக்ரானால் எந்தளவு திறம்பட பரவ முடிகிறது?

 • 50 முறை உருமாறிய ஓமிக்ரானுக்கு, வேறு ஏதேனும் ஆபத்தான குணங்கள் இருக்கின்றனவா?

உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இன்னும் விடை தெரியவில்லை.

முதன்முதலாக ஓமிக்ரான் வேரியன்ட் உறுதிசெய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவில், புதிய கொரோனா அலை உச்சம்தொட்டு, தற்போது அங்கு தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. விளைவாக அங்கு இரவு நேர ஊரடங்கு தளர்வுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அலையில், டெல்டாவை விடவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்திருப்பதையும் அந்நாடு உறுதி செய்திருக்கிறது. இவையெல்லாம் நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்திகள்.

 • ஆனால், இந்தியாவில் இப்போதுதான் கொரோனா எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இனிதான் இதன் தாக்கத்தையே நாம் உணரப்போகிறோம். எனவே, நாம் மிகவும் உஷாராகத்தான் இருக்கவேண்டும்.

 • ஏற்கெனவே பார்த்ததுபோல, ஓமிக்ரான் மேல் சுவாச மண்டலமான வாய், மூக்கு, தொண்டையைத்தான் அதிகம் பாதிக்கிறது. அங்கிருந்து விரைவாகப் பரவவும் செய்கிறது. எனவே, நம்மிடமிருந்து பிறருக்கு கொரோனா பரவாமல் இருக்கவும், பிறரிடமிருந்து நமக்குப் பரவாமல் இருக்கவும் மாஸ்க் என்னும் ஆயுதம் நமக்கு மிக முக்கியம்.

 • முந்தைய கொரோனா பாதிப்புகளிலிருந்து உருவான ஆன்டிபாடிகள்கூட, ஓமிக்ரானைத் தடுப்பதில்லை என்பதால், தடுப்பூசிகளும் மிக முக்கியம்.

எனவே, இந்தியாவிலும் ஓமிக்ரான் அலை ஓயும் வரை, அலர்ட் ஆக இருக்கவேண்டியது அவசியம்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!