Published:Updated:

கோவிட்-19 பரிசோதனை நெகட்டிவ் வந்தாலும் நோய்த் தொற்று இருக்கலாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் ஆர்.டி- பி.சி.ஆர் பரிசோதனையுடன் சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

கொஞ்ச காலமாக பாசிட்டிவ், நெகட்டிவ் என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்தான் உலகமே உருண்டு கொண்டிருக்கிறது. `அவருக்குப் பாசிட்டிவ்வாம் தெரியுமா', `இவருக்கு நல்லவேள நெகட்டிவ்தான்' என்பதில்தான் நமது செல்போன் உரையாடல்கள் தொடங்கி முடிகின்றன. கோவிட்-19 பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் பதற்றப்படுவதும் பயப்படுவதும், நெகட்டிவ் என்று வந்துவிட்டால் சற்று ஆசுவாசப்படுவதுமாக இருக்கிறோம்.

ஆனால், `ஒருவருக்கு இரண்டு, மூன்று முறை ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தால்கூட கொரோனா தொற்று இருக்கலாம். அவர்களால் மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப முடியும்' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

Swab test
Swab test

டெல்லியிலுள்ள மௌலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவே வந்துள்ளது. இருப்பினும் திடீரென்று உயிரிழந்துள்ளார் அந்த மருத்துவர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 80 வயதுப் பெண்ணுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத் திறணறல் உள்ளிட்ட கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவே வந்துள்ளது.

``ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் இரண்டு மூன்று முறை நெகட்டிவ் வந்தவர்களுக்குக்கூட மூன்றாம் நான்காம் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வரும். நெகட்டிவ் முடிவு வந்தாலும் அறிகுறிகளை வைத்து நோயாளிக்குச் சிகிச்சையளிக்கிறோம்.

மேலும் கொரோனா பாதிப்பை உறுதி செய்வதற்கு ஆன்டிபாடி பரிசோதனை செய்தும் பார்க்கிறோம்" என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் விஜய் குஜ்ஜார்.

காய்ச்சலுடன் 10 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களில் 8 - 9 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கலாம்.
தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சன்

ஏன் தவறுகிறது?

நெகட்டிவ் முடிவு வந்தவர்களுக்கும் நோய்த் தொற்றுவதற்கான காரணங்கள் என்ன என்று தொற்றுநோய் மருத்துவர் என். சுதர்சனிடம் கேட்டோம்:

``ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை 70 முதல் 80 சதவிகிதம் துல்லியமான முடிவைக் கொடுக்கும். அப்படியானால் 20 முதல் 30 சதவிகிதம் தவறான முடிவுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவர் கொரோனா வைரஸுக்கு வெளிப்பட்ட (Expose) பிறகு, 5 முதல் 7 நாள்களுக்கு அறிகுறிகளற்று இருப்பார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகள் தென்படத் தொங்கும்.

அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளுக்குப் பிறகு பரிசோதனை செய்து பார்த்தால் சரியான முடிவு கிடைக்கக்கூடும். மூன்று நாள்களுக்கு முன்னால் பார்க்கும்போது 70 சதவிகிதம் மட்டுமே துல்லியமான முடிவுகள் கிடைக்கும்.

Infectious disease dr.N.Sudharsan
Infectious disease dr.N.Sudharsan

தொழில்நுட்ப பிரச்னை

வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒரு சில நாள்களுக்கு மூக்குப் பகுதியில்தான் தொற்றியிருக்கும். அதற்குப் பிறகுதான் மூக்கிலிருந்து நுரையீரல் பகுதிக்கு இறங்கும். பரிசோதனையின்போது மூக்கில் சரியான இடத்தில் சளி மாதிரியை எடுக்கவில்லை என்றாலும் நெகட்டிவ் முடிவுகளே காட்டும். ஆர்.டி.பி.சி.ஆர் என்பது உணர்திறனை (Sensitivity) வைத்து வைரஸ் தொற்றைக் கண்டறியக்கூடிய பரிசோதனை.

வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்று அதிகமாக பெருகவில்லை, மூக்கு, தொண்டைப் பகுதியில் குறைவான அளவே வைரஸ் இருப்பது போன்ற காரணங்களாலும் தவறான முடிவுகள் கிடைக்கும்.

சி.டி.ஸ்கேன் அவசியம்!

கோவிட்-19 அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையுடன் நெஞ்சகப் பகுதியை சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியதும் அவசியம். அறிகுறிகள் தென்பட்டு மூன்று நாள்கள் ஆகவில்லை என்றால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு முன்பே சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

நுரையீரலில் தொற்று எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை வைத்து கோவிட்-19 ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும்

CT Scan
CT Scan

தற்போது காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் ஆகிய அறிகுறிகளுடன் அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் காய்ச்சலுடன் 10 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களில் 8 முதல் 9 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்க வாய்ப்புள்ளது.

அதனால் அனைத்து காய்ச்சல் நோயாளிகளுமே இந்த நேரத்தில் கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்துதல்

இப்போதிருக்கும் சூழலில் அடுத்த சில மாதங்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டாலே அந்த நபர் உடனே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத வேறு வகை காய்ச்சல் என்றாலும் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லதுதான்.

Isolation
Isolation
கோவிட்-19 இறப்புகளைக் குறைக்கும் காசநோய் தடுப்பூசி - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு!

இருமல், சளி உள்ளிட்ட எந்த கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டாலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் தொற்று ஏற்பட்ட 10 நாள்களுக்கு தொற்றைப் பரப்ப முடியும். அதனால் 14 நாள்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்டதும் மருத்துவரை அணுகுவது நல்லது" என்றார்.

நெகட்டிவ் முடிவு வந்தாலும் அலட்சியப்படுத்தக் கூடாது சற்று கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் செய்தி.

அடுத்த கட்டுரைக்கு