Election bannerElection banner
Published:Updated:

`முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்

Mask
Mask ( AP Illustration/Peter Hamlin )

முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸ் முடிந்த 14 நாள்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

`கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ்’ என்ற செய்தி மீண்டும் தடுப்பூசி குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, `மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குகின்றனர்’ என்று சமூக ஊடகங்களில் பரவிய தகவல் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், இந்தச் செய்தி அந்தக் குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

மருத்துவர் அஷ்வின் கருப்பன்
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனாவுக்கு எதிராகத் தற்போதுள்ள தடுப்பூசி செயலாற்றுகிறது; தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று சொல்லப்படும் நிலையில், இதுபோன்ற குழப்பங்கள் ஏன்? தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன? ஆகியவை குறித்து தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் மக்களிடம் அச்சம் பரவுகிறதே?”

``கொரோனா தடுப்பூசி இரு கட்டங்களாகப் போடப்படுகிறது. முதல் டோஸ் போட்ட பிறகு, 28 நாள்கள் கழித்துதான் இரண்டாவது டோஸ் போடப்படுகிறது. இரண்டு டோஸ்கள் போடப்பட்ட பிறகு, 14 நாள்கள் கழித்துதான் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஜனவரி 16-ம் தேதிதான் நாம் முதல் டோஸ் போட ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் இரண்டாவது டோஸேஜுக்கே நாம் செல்லவில்லை. முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸ் முடிந்த 14 நாள்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆகையால், முதல் டோஸ் போட்டதுமே ஒருவருக்கு கொரோனா வராது என நினைப்பது தவறானது. இரண்டாவது டோஸ் போட்டு 14 நாள்கள் வரையான 45 நாள்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா தாக்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது. எனவே, தடுப்பூசி போட்டிருந்தாலும்கூட அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குத் தனிமனித இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.”

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்; ஆனால் காரணம் அனபிலாக்ஸிஸ் அல்ல... மருத்துவ விளக்கம்!

``கொரோனா வைரஸ் வேகமாக உருமாற்றம் அடையும் சூழலில் தற்போது உள்ள தடுப்பூசி எந்தளவுக்குப் பலன் அளிக்கும்?”

``வைரஸ் என்றாலே உருமாற்றம் இருக்கத்தான் செய்யும். தற்போது உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு நம் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான வல்லமை தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு இருக்கிறது. எனவே, பயப்படத் தேவையில்லை.”

``ஆனால், மருத்துவர்கள் சிலரே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

``இந்தத் தடுப்பூசி கொரோனாவை குணமாக்கும், அதனால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதற்கான புள்ளிவிவரங்கள் இல்லை என்ற காரணத்தை முன்வைத்துதான் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்குகின்றனர். ஆனால், இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்கான புள்ளி விவரங்களும் இருக்கின்றன. ஆனால், அந்தப் புள்ளி விவரங்களை வெளியிடுவதற்கு இன்னும் நிறைய எண்ணிக்கையிலான பரிசோதனைகள் அவசியமாகின்றன.

இந்தத் தடுப்பூசி நான்காம்கட்ட பரிசோதனையை இன்னும் நிறைவு செய்யவில்லை. மூன்றாம் கட்ட பரிசோதனையில்தான் இருக்கிறது. நான்காம் கட்ட பரிசோதனையில் லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு அதிலிருந்து தடுப்பூசியின் செயல்திறன் குறித்த புள்ளி விபரங்களைச் சேகரிப்பார்களென்றால் மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஆயிரம் பேருக்கு போட்டு புள்ளி விபரங்களைச் சேகரிப்பார்கள்.

அதுவே, இரண்டாம் கட்ட பரிசோதனையில் 200, 300 பேருக்கு போட்டு புள்ளிவிபரம் சேகரிப்பார்கள். இரண்டாம் கட்ட பரிசோதனையில் குறைவான பரிசோதனையில் கிடைத்த புள்ளி விபரங்களை வைத்துதான் இப்போது தடுப்பூசியின் செயல் திறன் குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அறிவியல்பூர்வமான ஆய்வுகளின்படி இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனக்குத் தெரிந்த எல்லா மருத்துவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒருசிலர் போட மறுக்கிறார்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. ஏனெனில், இது மக்களின் நலன் சார்ந்த விஷயம். எல்லோரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.”

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin

``எல்லோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அவசியம் என்ன?”

``இப்போது நாம் கொரோனாவுடன் வாழ்வதற்குத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம். கொரோனாவை நாம் முற்றிலுமாக ஒழிக்கவில்லையெனில், அது நம்மைவிட்டுப் போகாது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமாக உருமாற்றம் செய்துகொண்டே இருக்கும். ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுமாதம் கழித்து எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். எனவே, முதல் ஆறு மாத காலத்தில் யார் யாருக்கெல்லாம் கொரோனா வந்ததோ அவர்களுக்கெல்லாம் இரண்டாவது அலையில் கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஒரு வைரஸ் உருமாறி இரண்டாவது முறை தாக்கும்போது, அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். எனவேதான் தடுப்பூசி அவசியமாகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா தாக்குவதற்கான வாய்ப்புகள் குறையும். அதையும் மீறி கொரோனா தாக்கினாலும் அதன் தீவிரத் தன்மை குறையும். 60 முதல் 70 சதவிகித மக்கள் தடுப்பூசியால் பாதுகாக்கப்படும்போது ஹெர்டு இம்யூனிட்டி அதிகமாகி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து நம்மால் வெற்றிபெற முடியும்.

அதைச் செய்யவில்லையெனில், இந்தக் கொரோனா நம்மை விட்டுப் போகவே போகாது. முகக் கவசம், கை கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகிய நடைமுறைகளை வாழ்நாள் முழுவதும் நாம் செய்ய வேண்டிவரும். எனவே, தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு