Election bannerElection banner
Published:Updated:

தடுப்பூசிகளால் அரிதாக நடக்கும் ரத்தம் உறைதல் விளைவு... ஏன் ஏற்படுகிறது? #ExpertExplains

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo / Bikas Das )

ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது?

கடந்த சில நாள்களாக மக்களிடையே பெருகிவரும் அச்சம், கோவிட் தடுப்பூசியால் மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த உறைவு ஏற்படுமா என்பதுதான். காரணம், அது தொடர்பான ஊடகச் செய்திகள். உலகில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். உலகின் முன்னணி மருத்துவ நிறுவனங்களான ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் எனப் பல நிறுவனங்கள் அவர்களுடைய இணை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடனோ, தம் மருத்துவ ஆய்வகத்தின் உதவியுடனோ தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் நலனுக்காகச் சந்தைப்படுத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான அணுகுமுறை கொண்டு தடுப்பூசியை வடிவமைத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனாவுக்கான தடுப்புசிகள் 3 வகையாகத் தற்போது வழங்கப்படுகின்றன.

1. mRNA எனப்படும் கொரோனா வைரஸின் மரபணு பிரித்தறியும் தொழில்நுட்பம் வாயிலாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் முறை.

2. வெக்டார் எனும் அணுகுமுறை. இதுதான் பல நிறுவனங்கள் உபயோகிக்கும் முறை. அதாவது, வேற்று இன (மனிதக் குரங்கு) செல்களில் உருவகப்படுத்திய செயலிழக்கச் செய்த அடினோ வைரஸுக்குள் கொரோனா மரபணுவைப் புகுத்தி, அதை நம் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நம் செல்களை இந்த கொரோனா நோய்க்கு எதிராகப் பாதுகாக்க வைக்கும் முறை.

3. செயலிழக்கப்பட்ட முழுமையான வைரஸை நம் உடலுக்குள் செலுத்தி, அதன் வாயிலாக முழுமையான நோய் பாதுகாவல் தேட முயல்வது.

இதில் mRNA வழியாக நமக்குப் பாதுகாவல் தேடுபவை, ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். மாடர்னா தடுப்பூசியை அமெரிக்க வாழ் மக்களுக்கென அந்நாட்டு அரசு இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியையும் கேட்டுப் பெற்றிருக்கிறது.

அடுத்ததாக ஃபைஸர் தடுப்பூசி, mRNA வழியாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் ஆன்டிபாடி அணுக்களை உருவாக்கும் முறையில் செயல்படுகிறது. ஆனால், நம் நாட்டின் தட்பவெட்பம் இந்த ஊசிக்கான - 60 டிகிரி குளிர் பிணைப்பைக் கொடுக்க இயலாது என்பதால் நம்மால் ஃபைஸர் தடுப்பூசியைத் தாராளமாகவும் தைரியமாகவும் பெற்று உபயோக்க இயலாமல் இருக்கிறது.

சரி... ரத்தம் உறைதல் விஷயத்துக்கு வருவோம். அடினோ வைரஸ் எனும் வெக்டார் மூலம் உருவாகும் கீழ்க்காணும் ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. அதில் இந்தியாவில் தற்சமயம் உபயோகிக்கும் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி சுமார் 39 பேருக்கு இந்தப் பாதிப்பை பிரேசில் நாடு உட்பட பல இடங்களில் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

அதே நேரம் இந்தியாவில் இதுபோன்ற எந்தப் பாதிப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. சில நாள்களாகப் பேசுபொருளாக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியின் தடுப்பூசி என்பது கொரோனா தடுப்பூசி வகைகளிலேயே வித்தியாசமானது.

ஆம், நான் முன்னர் கூறியதுபோல் இதுவும் வெக்டார் வகை தடுப்பூசி என்றாலும், இந்தத் தடுப்பூசியை ஒருமுறை நம் உடலில் செலுத்திக்கொண்டால் போதும், அடுத்த தவணை தேவையில்லை. ஒரு தவணையில் கிடைக்கும் ஒரே கொரோனா தடுப்பூசி இது மட்டுமே. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 9 நாள்களில் இருந்து, 28 நாள்களுக்குள் நோய் பாதுகாவல் முழுமை பெறுகிறது. உலகம் முழுவதும் இதுவரை 69 லட்சம் பேருக்கு இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாக இடப்பட்டுள்ளது. அவர்கள் யாவரும் ஒரே தவணையுடன் உரிய பாதுகாப்பை அடைந்து இருக்கின்றனர்.

ஆனால் அதில் 6 பேருக்கு, அதாவது 69 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டும் ரத்தம் உறைந்துபோய் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் இறந்ததும், மற்றொருவர் கவலைக்கிடமாக இருப்பதும் அறியப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 4 பேருக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என்றே தகவல்கள் சொல்கின்றன.

அதென்ன ரத்தம் உறைதல்?

நம் உடலில் ரத்தக்குழாய்களில் பரிமாற்றம் நடைபெறும் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் எனப் பல வகை அணுக்கள் உள்ளன. ஒவ்வோர் அணுவுக்கும் வெவ்வேறு பணிகள் உண்டு. இதில் நாம் தட்டணுக்கள் பற்றி அறிய வேண்டியது அவசியம். இதை ஆங்கிலத்தில் பிளேட்லெட்ஸ் (Platelets) எனச் சொல்கிறோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

நம் உடலில் ஏதேனும் சிராய்ப்போ, காயமோ ஏற்படுமாயின் அதில் ஏற்படும் ரத்தக்கசிவு சில மணித்துளிகளில் காய்ந்து உலர்ந்து உறைந்து போகிறதல்லவா, இதற்கான காரணம் இந்தத் தட்டணுக்கள்தான். இந்தத் தட்டணுக்கள், தாம் சார்ந்த மனிதனுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து ஏற்படுமானால், ரத்தப்போக்கை நிறுத்தி, அவரது உயிரைப் பிழைக்க வைத்திட உடனே தம்மை ஒன்றுசேர்த்து, ரத்தக்குழாய் சுவர்களில் ஒட்டிப்பிடித்து, தம் சகாக்களை உடன் அழைத்து, அந்த ரத்தக்கசிவை குறைக்கவும், அங்கே ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்தி, அதன் ஓட்டத்தை தாமதப்படுத்தவும் செய்கின்றன. இதே விஷயம்தான் இங்கே நம் உடலின் தவறான புரிந்துணர்வால் மாறுபடுகிறது.

அதாவது, இவ்வகையான சில தடுப்பூசிகள் நம் உடலில் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி செல்களை உருவாக்குகின்றன. ஆனால், நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சில நேரம் அடுத்த செல்களை போன்ற வடிவமைப்பில் இருக்கக்கூடும். அவ்வாறு இருக்கும் ஒற்றை வகை செல்களுக்கு எதிராக நம் உடல் எதிர்வினைகளை பாகுபாடில்லாது காட்டும். இதைப் பொதுவாக Autoimmune Phenomenon எனச் சொல்வோம். அவ்வகை செயல்பாடுதான் இந்தத் தடுப்பூசியால் வெகு சிலருக்குச் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

நம் தட்டணுக்களில் இருக்கும் Platelet 4 Receptors எனப்படும் பகுதிக்குள் இவ்வகை தடுப்பூசி உருவாக்கிய ஆன்டிபாடிகள் வந்து சேர்ந்து நம் தட்டணுக்கள் செயல்பாட்டைத் தவறுதலாகத் தூண்டலாம், அந்தப் பிறழ்வான தூண்டுதல் வெகு சிலருக்கு மட்டும் மிக பயங்கரமாக இருக்கலாம். அந்தத் தூண்டுதல் நான் முன்னர் கூறியதுபோல தட்டணுக்களை ஒன்றுசேரச் செய்து, உடல் பரிமாற்றத்தில் இருக்கும் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, மெதுவாக ரத்த உறைதலைத் தூண்டலாம். இதனால் நம் உடல் பாகத்தில் முக்கிய உறுப்புகளில் ரத்தம் சென்று சேர இயலாது அல்லது உறைந்த ரத்தமாக (Thrombosis) சென்றடைந்து அந்தந்த உறுப்பைச் செயலிழக்கச் செய்யும் (Embolus induced infarction).

COVID-19 Vaccines
COVID-19 Vaccines
AP Illustration/Peter Hamlin
நடிகர் விவேக் திடீர் மரணம்... தடுப்பூசி சர்ச்சை... உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

இதன் கூடவே, தட்டணுக்களின் இந்தச் செயல்பாட்டால், உடலில் இருக்கும் தட்டணுக்களில் பெரும்பாலானவை ஒருசேர இருக்கையில் உடலில் ஓடிக்கொண்டு இருக்கும் மீதமுள்ள ரத்தத்தில் குறைவாகக் காணப்படலாம் (Immune Thrombocytopenia). இதுபோன்ற தட்டணுக்கள் குறைபாட்டைத்தான் டெங்கு காய்ச்சலிலும் நாம் காண நேர்கிறது. அது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பினால் ஏற்படும் தட்டணுக்கள் செயல் குறைபாடு, எனவே, இந்தத் தட்டணுக்கள் தட்டுப்பாட்டால் நம் உடலில் அவசியமான ரத்தம் உறைதல் தன்மை இழந்து ஆங்காங்கே ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, இந்த வெக்டார் அணுகு தடுப்பூசிகளால் வெகு சிலருக்கு ரத்த உறைதல் மற்றும் ( VIPIT - Vaccine Induced Prothrombotic Immune Thrombocytopenia) எனப்படும் நிலையும் Activation of PAF 4 leading to Platelet Aggregation and Thrombosis எனப்படும் நிலையும் வரலாம். அதாவது, தட்டணுக்கள் உட்சுவரில் உள்ள தட்டணுக்கள் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் செல்களைத் தூண்டும் ஆன்டிபாடிக்களை இவ்வகை ஊசிகள் உருவாக்கலாம் எனப்படுகிறது.

இதனால் CVT - Central Venous Thrombosis எனப்படும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் வரும் உறைபடிதல் பாதிப்பு சிலருக்கும், இன்னும் சிலருக்கு Peripheral Venous Thrombosis எனப்படும் உடல் உறுப்புகளுக்கான ரத்தக்குழாய்கள் உறைபடிதல் பாதிப்பும் ஏற்படட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

இந்தப் பாதிப்பை அறிகுறிகளைக் கொண்டு எப்படி அறியலாம்?

இவ்வகை வெக்டார் அணுகு தடுப்பூசிகள் போடப்பட்டு 5 நாள்களில் இருந்து 3 வாரங்களுக்குள்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஊசியால் ஆன்டிபாடி எனும் நோய் பாதுகாவல் அணுக்கள் உருவாகும். எனவே, வெக்டார் வகை தடுப்பூசி இடப்பட்ட அனைவரும் இந்த நாள்களில், மூக்கில் ரத்தக்கசிவு, பற்களில் ரத்தக்கசிவு, காரணமற்ற உடல் சிராய்ப்புகள், உடலில் சிவப்பு புள்ளிகள், தீராத கால்வலி, குடைச்சல், தீராத தலைவலி, கண்வலி, பார்வை குறைதல் என ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் உள்ள மொத்த ரத்த அணுக்கள் அளவு, தட்டணுக்கள் அளவு, தட்டணுக்கள் செயல்திறன் ஆய்வு, Platelet Factor 4 antibodies எனும் சிறப்புப் பரிசோதனை, ரத்தம் கசியும் நேர கணக்கு, ரத்தம் உறைதல் நேர கணக்கு, கால்களுக்கான ரத்த ஓட்டம் அறியும் Peripheral Arteriovenous Doppler போன்று தேவைப்படும் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் பாதிக்கப்பட்ட நபரை உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம்.

டாக்டர் .சஃபி,M. சுலைமான்
டாக்டர் .சஃபி,M. சுலைமான்

அதே நேரத்தில் தடுப்பூசியால் வரும் இந்த ரத்தம் உறைதல் பாதிப்புகள் போலவே நிஜமான கோவிட்-19 நோயிலும் நாங்கள் கண்டதுண்டு. தடுப்பூசியால் 4 முதல் 6 சதவிகிதம் இதுபோன்ற VIPIT நோய்கள் வரும் என எண்ணும் நமக்குத் தெரிய வேண்டிய முக்கியமான விஷயம், கொரானா தொற்று, தீவிர (WILD COVID19 DISEASE) நோயாக மாறினால் 19% முதல் 22% வரை இதே பாதிப்பால் நோயாளிகள் இறக்கலாம் என்பதுதான். மேலும், நோய் பாதித்து வரும் இந்த ரத்த உறைதல் விளைவில் இருந்து பல உயிர்களைக் காக்க முடியாமலும் போகிறது என்பதே மருத்துவ உண்மை. எனவே, நோய் பாதித்து வரும் இவ்வகை ரத்தம் உறைதல்தான் மிக ஆபத்தானதுமாகும். எனவே நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதே சிறந்த தற்காப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு