Published:Updated:

கொரோனா: `பொது இடங்களில் ஆவி பிடித்தல் ஆபத்திலேயே முடியும்!' - எச்சரிக்கும் மருத்துவர்

பொது இடங்களில் ஆவி பிடித்தல் முகாம்
பொது இடங்களில் ஆவி பிடித்தல் முகாம்

நம்மில் பலரும் நமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மேல் சுவாசப்பாதை சளியால் அடைபட்டு இருக்கும்போது மூக்கின் மூலம் மூச்சுவிட கஷ்டப்படுவோம்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவிபிடிப்பது சரியா?

ஆவி பிடிப்பது எப்போது பலன் தரும் ?

இதுவரை எதற்கு நாம் ஆவி பிடித்தலைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம்?

பதில்களைப் பார்க்கலாம்.

நம்மில் பலரும் நமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மேல் சுவாசப்பாதை சளியால் அடைபட்டு இருக்கும்போது மூக்கின் மூலம் மூச்சுவிட கஷ்டப்படுவோம்.

Steam Inhalation
Steam Inhalation
Photo: IStock

அந்த நிலையில் மூக்கில் உள்ள சளியை ஓரளவுக்கு மேல் நீக்கி மூச்சுவிட இயலாது. அப்போது மேல் சுவாசப்பாதைத் தொற்று நிலையில் (UPPER RESPIRATORY TRACT INFECTION), வீட்டில் அம்மாக்கள் நன்றாகத் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மூலிகை தைலங்கள்/ ஈக்வலிப்டஸ் தைலம் போன்றவற்றைப் போட்டு வேது பிடிக்கக் கூறுவார்கள். மூக்கடைப்பு சரியாகும்.

அதேபோல, `சைனஸ்' எனும், முகத்தில் உள்ள காற்றறைகளின் வாயில்களில் அடைப்பு ஏற்பட்டால், அவற்றில் சளி சேர்ந்து அடைத்துக்கொள்ளும். அந்த நிலையை சைனசைடிஸ் (Sinusitis) என்போம். இந்த நிலையிலும் நீராவியை மூக்கின் வழி பிடிப்பது அந்த அடைப்புகளை ஓரளவு சரிசெய்து தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கவல்லது. எனவே காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள்கூட அதைப் பரிந்துரைப்பார்கள்.

எனவே, வேது பிடித்தல்/ஆவிபிடித்தல் போன்றவற்றை சைனசைடிஸ் மற்றும் மேல் சுவாசப்பாதைத் தொற்றுகளில் அறிகுறிகள் சரியாவதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 தொற்று கண்ட நபர்களுக்கு மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் ஒரு சில நாள்களுக்கு மட்டுமே தென்படுகின்றன.

இந்த நாள்களில் அவரவர் விருப்பப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மூக்கடைப்பை சரிசெய்யும் நோக்கத்தில் அந்த அறிகுறியை சரிசெய்வதற்காக வேது பிடிக்கின்றனர்.

ஆனால் அதையே, கொரோனா வைரஸை இந்த வேது பிடிப்பதால் கொன்று விட முடியும் என்று நம்பி வீட்டிலேயே வேது மட்டும் பிடித்துக்கொண்டு அறிகுறிகளை துச்சம் செய்து காலத்தை தாழ்த்தினால்... அது தவறு.

பொது இடங்களில் ஆவி பிடித்தல் முகாம்
பொது இடங்களில் ஆவி பிடித்தல் முகாம்

ஏனென்றால், ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ, மேல் நாசியிலோ, பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும்.

மேலும் நோய்த்தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றுவதையும் வேது பிடிப்பதால் நிறுத்த முடியாது.

இன்னும் சொல்லப்போனால் சாதாரண கொரோனா (MILD) நிலையில் இருந்து நோய்த்தொற்று மிதமான கொரோனா நிலைக்குச் (MODERATE) செல்லுமானால், நோயாளியின் நுரையீரலில் `நிமோனியா' ஏற்பட ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் மென்மேலும் சூடு அதிகமான நீரையோ, எண்ணெய்கள் கலந்த நீரையோ வைத்து வேது பிடிப்பது என்பது, ஏற்கெனவே கொரோனா நிமோனியாவால் வெந்த நுரையீரலில் வேலைப் பாய்ச்சுவதுபோல அமைந்துவிடக்கூடும்.

கொரோனா நோய்த்தொற்று நிலைவில் நடப்பது என்ன?

நுரையீரலில் அதீத உள்காயங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் காற்றை உள்வாங்கி ரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் செய்யும் நிலையை இழக்கும்.

இதில் உள்காயங்கள் மிகுந்து இருக்கும் நிலையில் சூடான காற்று அந்தக் காயங்களில் படுவது என்பது ஆபத்தான பக்கவிளைவுகளை, மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளர்களுக்கு உருவாக்கி விடக்கூடும்.

எனவே மக்களே... தயவுசெய்து ஆவிபிடித்தல்/வேது பிடித்தலை கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கொண்டு முக்கியமான நேரத்தை வீட்டிலேயே கடத்தி, ஆபத்தான நிலையை அடைந்த பின் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆகாதீர்கள்.

facial Steam - representational image
facial Steam - representational image

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவிபிடிப்பதே அறிவியல்பூர்வமாக நோய்த்தொற்று முற்றுவதைத் தடுப்பதில் பலனளிக்காது எனும்போது, இந்த ஆவிபிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில், ஒரே ஆவிபிடிக்கும் இயந்திரம் மூலம் மேற்கொள்கிறார்கள். இது கொரோனா தொற்று மிகவும் வீறுகொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

அந்த இயந்திரத்தை ஒரு கொரோனா நோயாளி பயன்படுத்தினால் அதற்கடுத்தபடியாகப் பயன்படுத்தும் பலருக்கும் தொற்று பரவும் நிலை உருவாகும்.

மேலும் வேது பிடித்ததும் தும்மல் இருமல் வரும். அப்போது தொற்றடைந்த ஒருவர் தும்முவது மூலம் அந்த இடத்தில் நோயைப் பரப்புவார். எனவே, இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற விசயங்களை பொதுவெளியில் செய்வது மிகவும் தவறு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய் முற்றுவதை ஆவிபிடிப்பதால் தவிர்க்க இயலாது. இன்னும் அதீத வெப்பமான காற்றால் சுவாசப்பாதையில் காயம் ஏற்படலாம். கொதிக்கும் தண்ணீர் ஊற்றி தீக்காயங்கள் அதிகம் ஏற்படலாம்.

மூக்கடைப்பை சரிசெய்வது தவிர வேறு எந்தப் பெரிய நன்மையையும், இந்தக் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஆவிபிடித்தல் செய்யும் என்று ஒருபோதும் நம்பாதீர்கள்.

Dr. ஃபரூக் அப்துல்லா
Dr. ஃபரூக் அப்துல்லா

நிமோனியா தொற்று அடைந்த நிலையில் ஒருவர் ஆவிபிடிப்பது அவருக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமையலாம். இப்படி வேது பிடித்துக்கொண்டு அது நம்மைக் காக்கும் என்று நம்பி, முக்கியமான நேரத்தை வீட்டில் கழித்துவிட்டு, அதிதீவிர மூச்சுத்திணறல் நிலையை அடைந்த பின் மருத்துவமனைக்குச் சென்றால் மரணம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

இத்தகைய அறிவியல்பூர்வ, ஆதாரமற்ற செய்திகளை நம்பி பொது இடங்களில் தொற்றுப்பரவலை அதிகரிக்கும் ஆவிபிடிக்கும் செயல்களைத் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்

இத்தகைய ஆவிபிடிக்கும் இயந்திரங்களை நிறுவி, மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் தன்னார்வலர்கள் பலர் களம் இறங்கியிருந்தாலும், இதனால் நோய் அதிகமாகப் பரவும் வாய்ப்பே அதிகமாக இருப்பதால், தயவுகூர்ந்து இதை உடனே நிறுத்திவிட்டு, வேறு வகையான பெருந்தொற்று கால உதவிகளை மக்களுக்குச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்!

அடுத்த கட்டுரைக்கு