Published:Updated:

வால்வ் வைத்த மாஸ்க் ஆபத்தானது... ஏன்? - தொற்றுநோயியல் மருத்துவர் விளக்கம்

வால்வ் மாஸ்க்
வால்வ் மாஸ்க்

வால்வ் மாஸ்க் அணிந்திருப்பவர் ஒருவேளை அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளராக இருந்தால், அடுத்தவருக்கு மிகச்சுலபமாக கொரோனாவை பரப்பி விடுவார். எப்படி?

மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம், மாஸ்க்கை எப்படி அணிய வேண்டும், மாஸ்க்கை எவ்வளவு நேரம் அணிய வேண்டும், மூடிய அறைகளுக்குள்ளும் மாஸ்க் ஏன் கட்டாயம் என்பன உள்ளிட்ட தகவல்களை இதுவரை பல தடவை பேசியுள்ளோம். அணிபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிற என் 95 மாஸ்க், மற்றவர்களுக்குப் பாதுகாப்பற்றது எனத் தற்போது உலகம் முழுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவை பொது இயக்குநர் வால்வ் வைத்த என் 95 மாஸ்க்கை அணிவதற்குத் தடைவிதித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மாஸ்க்
மாஸ்க்

என் 95 மாஸ்க்கில் இருக்கிற வால்வ் ஒருவழி திறப்புப்பாதைக் கொண்டது. வால்வ் வைத்த மாஸ்க்கை அணியும்போது, அதை அணிந்துகொண்டிருப்பவர்கள் வேண்டுமானால் வடிகட்டப்பட்ட சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். ஆனால், அவர்கள் சுவாசித்த காற்றை வெளியே விடும்போது, வால்வானது திறந்து, அசுத்தமான காற்றை அப்படியே வெளியேற்றும். தவிர, வால்வில் இருக்கிற சிறுதுளைகளின் வழியாக அந்த அசுத்த காற்று வெளியேறும்போது மிகவும் வேகமாக வெளியேறும். வால்வ் மாஸ்க்கை அணிந்திருப்பவர் ஒருவேளை அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளராக இருந்தால், அடுத்தவருக்கு மிகச்சுலபமாக கொரோனாவை பரப்பிவிடுவார். வால்வ் வைக்கப்பட்ட என் 95 மாஸ்க்குகள் காற்று மாசுபாட்டில் இருந்து வேண்டுமானால் நம்மைக் காப்பாற்றுமே தவிர, கொரோனா தொற்றிலிருந்து அல்ல...

மக்கள் அதிகமாகப் புழங்குகிற மருத்துவமனைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில், அலுவலகங்களில் வால்வ் வைத்த மாஸ்க் அணிவது முழுக்க முழுக்க பாதுகாப்பற்றது.

காட்டன் மாஸ்க்
காட்டன் மாஸ்க்

கொரோனா தொற்று நமக்கு ஏற்படாமல் இருக்கவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் நாம் அணிகிற மாஸ்க்கில் மூன்று தரக்கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். 95.2 சதவிகிதம் வைரஸ்களை வடிகட்டுகிற அளவுக்கு அவை தரமானவையாக இருக்க வேண்டும். மூச்சுவிடுவதற்கு செளகர்யமான மெட்டீரியலில் மாஸ்க் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தொளதொளவென்று இல்லாமல் முகத்தில் பதிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மாஸ்க் அணிந்தும் பயனில்லை.

நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தரப்பில் மாஸ்க் குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் ஒன்றில், பொதுமக்கள், மூக்கையும் வாயையும் நன்கு மூடுகிற வகையில் துணியால் செய்த மாஸ்க்கை அணிந்தாலே போதுமானது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில்தான் வால்வ் வைத்த என் 95 மாஸ்க் குறித்த பாதுகாப்பின்மை குறித்து தற்போது உலகமெங்கும் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொற்று நோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியம் பேசுகையில், ``கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதுதான் மாஸ்க்கின் முக்கியமான பணி. அதையே என் 95 மாஸ்க் செய்யவில்லை என்பதுதான் உண்மை. வால்வ் வைத்த மாஸ்க் காற்று மாசுபாட்டிலிருந்து நம் நுரையீரலைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே பயன்படும்.

தொற்று நோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியம்
தொற்று நோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியம்

இது தெரியாமல் பொதுமக்கள் எல்லோரும் வால்வ் வைத்த மாஸ்க்கை அணிந்துகொண்டிருந்தால் தொற்று இன்னும் வீரியமாகப் பரவும். வால்வ் வைத்த மாஸ்க் சுவாசிப்பதற்கு செளகர்யமாக இருப்பதால் பலரும் இதைப் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் உடனே வால்வ் வைத்த மாஸ்க் அணிவதை நிறுத்த வேண்டும். வால்வ் வைக்காத எந்த வகை மாஸ்க் செளகர்யமாக இருக்கிறதோ அதை அணிந்துகொள்ளலாம். ஒரு தொற்று நோய் மருத்துவராகச் சொல்ல வேண்டுமென்றால், மூன்றடுக்கு கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க், வால்வ் வைத்த என் 95 மாஸ்க்கைவிட பாதுகாப்பானது. ஆனால், இதை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்ட காட்டன் மாஸ்க்கும் எல்லோருக்கும் பாதுகாப்பானது. இதைத் துவைத்தும் பயன்படுத்தலாம். மற்றபடி அரசு அறிவுறுத்தியிருப்பதைப் போலவே துவைத்துப் பயன்படுத்துகிற மாஸ்க்கை குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் மாற்றி மாற்றி அணியக் கூடாது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு