Election bannerElection banner
Published:Updated:

முடி உதிர்வு முதல் பாதவெடிப்பு வரை... இந்த அறிகுறிகளையெல்லாம் சாதாரணமா எடுத்துக்காதீங்க!

Body pain
Body pain

உங்கள் உடல் உணர்த்தும் அறிகுறிகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் நோய் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உடல் உணர்த்தும் எந்த அறிகுறியையும் சாதாரணமாகக் கடந்துவிடாமல், அது என்ன சொல்ல வருகிறது என்பது அறிந்து அலர்ட் ஆவது ஆரோக்கியத்தோடு ஆயுளையும் நீட்டிக்கும். உங்கள் உடல் உணர்த்தும் அறிகுறிகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் நோய் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

திடீரென முடி கொட்டுதல்:

சாதாரண பயோடின் எனும் சத்து குறைபாட்டில் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கொலாஜென் நோய்கள் வரை முடி உதிர்வின் பின்னணியில் பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்

தலைவலி - தலைச்சுற்றல்:

பார்வைக் குறைவு, சைனஸ், மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி முதல் மிக மோசமான ரத்த அழுத்தம், அதீத கொலஸ்ட்ரால் பாதிப்பு, ரத்தச் சர்க்கரை அளவில் மாறுதல்கள், மூளை பாதிப்புகள் என எதுவும் காரணமாக இருக்கலாம்.

தலைச்சுற்றலை சாதாரண அறிகுறியாக நினைத்து அலட்சியம் செய்த பலருக்கு கழுத்து நரம்பு அழுத்த நோய் பாதிப்பு இருக்கக் கூடும். அதை உணரலாமல் வாகனம் ஓட்டும்போது உணர்வறியாமல் தலைசுற்றி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம்.

Hair Care
Hair Care

பார்வை குறைதல் அல்லது கண் வலி:

சாதாரண நோய்த்தொற்று முதல் கண்ணின் லென்ஸ் பாதிப்பு, கண் நரம்புகள், ரத்தக்குழாய் பாதிப்புகள் க்ளகோமா எனும் கண் நீர் அழுத்த நோய் என எதுவாகவும் இருக்கலாம்.

காதுவலி:

காதுகளில் ஏதேனும் வலி, அரிப்பு இருந்தால் உடனே கவனம் செலுத்துவது நல்லது, நாளடைவில் உள்காதுகளில் தொற்று பாதித்து காது கேளாமை கூட வரலாம்.

மூக்கடைப்பு, சுவாச அடைப்பு, தும்மல், இருமல்:

சாதாரண சளி, அலர்ஜிக் ரைனைடிஸ் எனும் ஒவ்வாமை, மூக்குத்தண்டு வளைவு நோய் உட்பட மிகத் தீவிரமான கோவிட் நோய், காசநோய், நேசல் பாலிப் எனும் துவார உள்சதை வீக்கம் எனும் அறுவைசிகிச்சை செய்யக்கூடிய பிரச்னைகள் வரை எதுவாகவும் இருக்கக் கூடும்.

பல்வலி, பல் கூச்சம், பல் வலுவின்மை:

பூச்சிபல், பல் தொற்று பாதிப்பு முதல் சர்க்கரை நோயால் வரும் பற்கள் பாதிப்பு, ஜின்ஜிவைடிஸ் எனும் ஈறு வீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இருக்கலாம்.

தொண்டைவலி:

உணவு விழுங்க இயலாமை என்பது சாதாரண டான்சிலைடிஸ் எனும் டான்சில் வீக்கம் மற்றும் பேரிஞ்சைடிஸ் எனும் உள் தொண்டை சதை வீக்கம் உள்பட மிக பயங்கர தொண்டைப்புற்று, உணவுக்குழாய்ப் புற்று எனப் பல வகையான மோசமான பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

Dr.சஃபி.M.சுலைமான்
Dr.சஃபி.M.சுலைமான்

நெஞ்சு வலி:

நெஞ்சு வலி பல வகைப்படும்

- வலி வரும் இடம்

- வலி தொடரும் இடம்

- வலி பரவும் இடம்

- வலி விடாமல் இருக்கும் இடம் போன்ற பல விஷயங்களைக் கொண்டு அதன் காரணம் அறியலாம்

சாதாரண அல்சர் எனும் வலியில் இருந்து இதய அடைப்பு நோய் வரை நெஞ்சுவலியாக அறிகுறி வெளிப்படலாம், சில வகை நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சலாகவோ , குத்தலாகவோ இருக்கலாம். இது சாதாரண, உணவு செரிமானமின்மை வாயுத்தொல்லை காரணங்களில் இருந்து மிக ஆபத்தான, ஹார்ட் அட்டாக்கின் முதல் அறிகுறியாகவோ, உணவுக் குழாய்ப்புற்று , வயிற்றுப் புற்றுநோயாக இருந்திடவும் வாய்ப்புகள் உண்டு.

முதுகுவலி:

முதுகு வலி பெரும்பாலும் நம் வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கும், முதுகுத்தண்டில் வலி, தண்டுவட பக்கவாட்டில் வலி என ஆங்காங்கே வலி இருந்தாலும், முதுகில் ஏற்படும் சிலவகை வலி இதயம் சம்பந்தமாகவோ, நுரையீரல் பாதிப்பாகவோகூட இருக்கலாம்.

இடுப்புவலி:

இதுவும் முதுகுவலி போலவேதான் நம் அன்றாட வேலைகள் சார்ந்தே இருக்கும். ஆனால், இடுப்பின் பக்கவாட்டில் அல்லது இடுப்புக்கும் தோள்பட்டைக்கும் இடையில் வரும் வலி சிறுநீரக பாதிப்பு , சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

வயிற்று வலி:

வலிகளில் மிக முக்கியமானது இது. வயிற்றுப்பகுதி மருத்துவ ரீதியாக 9 பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாகத்தில் வரும் வலியை ஒவ்வோர் உள் உறுப்பை அடையாளம் கண்டு காரணம் அறிந்திட இயலும், சாதாரண அல்சர் முதல் மிக தீவிரமான அவசர அறுவைசிகிச்சை தேவைப்படும் குடல் துவாரம், அப்பெண்டிக்ஸ் வரை இப்படித்தான் தீர்மானிக்கப் படுகின்றன.

Stomach (Representational Image)
Stomach (Representational Image)
Image by Darko Djurin from Pixabay

வயிற்று வலி, பொதுவாக அதனுடன் சேர்ந்துவரும் இதர அறிகுறிகளான, வயிற்று உப்புசம், வாயு கழிதல், ஏப்பம், ஜீரணமின்மை, சிறுநீர் நிறம் மாறுதல், சிறுநீர் கழிக்கையில் வலி, வாந்தி , காய்ச்சல், குளிர், மலச்சிக்கல், பேதி போன்றவற்றைக் கொண்டே காரணம் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

மறைவிட பாதிப்புகள்:

இருபாலினத்துக்கும் வரும் பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்புகளை, அவற்றின் அறிகுறிகளை அலட்சியம் செய்வது மாபெரும் தவறாகும்.

தொடை மற்றும் இடுக்குப் பகுதிகள்

தொடையில் வலி, வீக்கம் இருத்தல் பொதுவாக நெறிகட்டி எனச் சொல்வோம் மறைவிட புண்கள், அடிவயிற்று நோய்கள், சிறுநீர் தொற்று காரணமாக இது வரலாம்.

தொடை இடுக்குகளில் வரும் அரிப்பு, சருமத் தொற்றுநோய், பூஞ்சை பாதிப்பு போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். சுத்தமில்லாத உள்ளாடை, அந்தரங்க சுகாதாரம் பேணாமை போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்புகளை அலட்சியம் செய்தால் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

 foot
foot
freepik

கால்களில் நரம்புச்சுருட்டுல்:

இதை வெரிகோஸ் வெயின்ஸ் என்போம். ரத்த நாளங்களில் இருக்கும் வால்வுகள். செயலின்மையால் ஏற்படுவதுதான் இது. அதிக நேரம் நிற்பவர்களுக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. சரியான மருத்துவம் எடுக்கத் தவறினால் அந்தப் பகுதி வீக்கமடையலாம். சருமம் பாதிக்கப்படலாம், வலியுடனான வீக்கம் தோன்றி நம்மை கஷ்டப்படுத்தலாம்.

பாத பாதிப்புகள்:

பாதங்கள் நம் நோய்களுடைய பல அடையாளங்களைக் காட்டக்கூடியவை.

பாதத்தில் வரும் நிற மாற்றம், வலி, உணர்ச்சிக் குறைதல், வெடிப்பு முதல் புண்கள் வரை அனைத்துக்கும் பலவகையான நோய்க் காரணிகள் இருக்க வாய்ப்பிருப்பதை உணர வேண்டும். எதையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு