அமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?- ஓர் அலசல்! #DoubtOfCommonMan

அமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?- ஓர் அலசல்! #DoubtOfCommonMan
`அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வருகின்றன. சமீபத்தில்கூட ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்த ஒருவர், அமெரிக்காவில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி படித்தேன். அமெரிக்காவின் என்னதான் நடக்கிறது..? ஏன் தற்கொலை அதிகமாகிறது' என்று விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த்தன் என்கிற வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது!

ஜூன் 15, 2019. அமெரிக்காவில் உதவி தொலைபேசி 911-க்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 10 மற்றும் 14 வயது சிறுவர்கள் இரண்டு பேரும் 32 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடக்கின்றனர். அருகில் ஒரு ஆண், தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடக்கிறார். பன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை... இவைதான் புத்திக் கூர்மையான, திறமையான இந்திய இளைஞர்களை அமெரிக்காவை நோக்கி ஈர்க்கிறது.
விசாரணையில் இறந்தது அயோவாவில் வசிக்கும் ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகர் சுன்கரா (44) என்பதும், தன் மனைவி லாவண்யாவையும் இரண்டு மகன்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இவர்களின் விபரீத முடிவு, அமெரிக்க இந்தியர்களை அதிரவைத்துள்ளது.
பன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை...
சந்திரசேகரைப் போல பலர் இளம் இந்தியர்கள் விரக்தி, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் தவிக்கிறார்கள். நிச்சயமில்லாத எதிர்காலம், கடன் சுமை, ட்ரம்ப் அரசின் புதிய குடியேற்றக் கொள்கைகள் அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை... இவைதான் புத்திக் கூர்மையான, திறமையான இந்திய இளைஞர்களை அமெரிக்காவை நோக்கி ஈர்க்கிறது. இதற்காக உறவுகள், கலாசாரம், பழக்கவழக்கங்கள். வாழ்வியல் முறைகள். என பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்கிறார்கள். சிலநேரம் உயிரைக்கூட இழக்க நேரிடுகிறது.
மாறிவரும் சமுதாயச் சூழலால், உலகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. உலகின் ஹாப்பினெஸ் இன்டெக்ஸில் முன்னணியில் இருக்கும் பூடானில் தற்கொலை விகிதம் ஒரு லட்சத்துக்கு 11.7 பேர். ஆனால் வன்முறை, உள்நாட்டுப் போர், தீவிரவாதத்தால் சீரழிந்துள்ள நாடுகளான ஆப்கானிஸ்தான், (5.5) இராக் (3) சிரியாவில் (2.7) தற்கொலை எண்ணிக்கை மிகவும் குறைவு. மிகச்சிறிய நாடுகளான கரீபியன் தீவுகள், பஹாமாஸ், ஜமைக்கா, க்ரேனடா, பாரபடாஸ், ஆன்டிகுவா நாடுகள் தற்கொலை மிகவும் அரிதான ஒன்று.

அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவை கானல் நீராக்கி, எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கியதில், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சமீபத்தில், ஹெச்1-பி விசா பெறுவதும் அதை நீட்டிப்பதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதும் நிலைமையை மோசமாகியுள்ளது.
முன்னர் ஹெச்1 பி விசாவில் பணிபுரிபவர்கள், விசா அனுமதிக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ட்ரம்பின் புதிய குடியேற்ற விதிகள் அந்த வாய்ப்பை அரிதாக்கிவிட்டன. விசாவை 20 நாள்களுக்குக்கூட குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, விசா காலம் நீட்டிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது 20 லட்சம் பேர் விசாவுக்காகக் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழல், எந்த வெளிநாட்டினருக்கும் சாதகமாக இல்லை.
இவர்களில் பெரும்பாலோனோர் உயர் படிப்பு படித்த, அனுபவம் மிக்க மருத்துவர்கள், ஐ.டி பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள். அனைவருமே அரசுக்கு முறையாக வரி கட்டுபவர்கள். அதிகளவு அமெரிக்காவில் முதலீடு செய்பவர்கள். இவர்களது சேவை மிகவும் அவசியமாக இருந்தும்கூட, அமெரிக்கா அவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்க தாமதிக்கிறது. விசாவுக்கு காத்திருக்கும் காலம் 70 ஆண்டுகள்கூட ஆகலாம் என்கின்றனர், சிலர்.
தற்போதைய சூழலில் நீண்டகாலம் காத்திருப்பது நல்லதல்ல. காத்திருக்கும் நேரத்தில் வேலை பறிபோனால், அவர்களது வாழ்க்கை தலைகீழாகும். அவர்கள் தங்கள் வீடு, கார் என அனைத்தையும் விற்க நேரிடும். 30 நாள்களுக்குள் அமெரிக்காவைவிட்டு வெளியேற்றப்படுவர்.

காத்திருக்கும் காலகட்டத்தில், அவர்களது குழந்தைகளுக்கு 21 வயதாகிவிட்டால், உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். விசா நீட்டிப்புக்கு ஒருவர் மூன்று முறைதான் விண்ணப்பிக்க முடியும். துரதிருஷ்டவசமாக மூன்றாவது முறையாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நாட்டைவிட்டு துரத்தப்படுவோமா என்பது தெரியாமல் குழப்பத்தால் பலர் மரண வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழல், எந்த வெளிநாட்டினருக்கும் சாதகமாக இல்லை. பாதுகாப்புவாதத்தை முன் வைக்கும் ட்ரம்ப் நிர்வாகம், இதுவரை 37 சதவிகித குடியேற்ற விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வரை நிராகரிப்பு மூன்று சதவிகிதம் மட்டுமே.

அமெரிக்கர்களிடையே வளர்ந்துவரும் குடியேறிகளுக்கு எதிரான மனோபாவம் இந்தியர்களைப் பாதித்துள்ளது. உணவகங்கள், பூங்காக்களில் `இந்தியாவுக்கு திரும்பிப்போ' என்ற வாசகம் இந்தியர்களை வரவேற்கிறது. பிரச்னையின் தீவிரத்துக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது வெளிநாட்டினர் மட்டுமல்ல, அமெரிக்கர்களும்தான். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். சமீபத்தில், மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் கேட் ஸ்பேட் தற்கொலை செய்துகொண்டது டிசைனர் உலகை உலுக்கியது. அவரது தற்கொலைக்குக் காரணம் மனச்சோர்வு, கவலை என்று தெரிவிக்கப்பட்டது. தற்கொலை ஒரு தேசிய பிரச்னையாக அமெரிக்காவை ஆட்டுவிக்கிறது. ஆனாலும், கறுப்பின மக்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதில்லை.

மன உளைச்சல். பதற்றம், சோர்வு, மனஅழுத்தம் என தற்கொலைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை, பொருளாதாரச் சரிவுதான் பெரும்பாலும் மக்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. `பொருளாதாரம் பலவீனமடையும்போது தற்கொலைகள் கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த 1932-ம் ஆண்டு மாபெரும் பொருளாதார மந்த நிலை (The Great Depression) ஏற்பட்டபோது தற்கொலை ஒரு லட்சம் பேருக்கு 22.1 என்ற விகிதத்தை தொட்டது. 20 ஆண்டுகளாகத்தான் தற்கொலை அதிகமாகியிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு 45,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். இன்று தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 21.5 பேர்.
இளைஞர்களின் தற்கொலைக்கு இரு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று போதைப்பொருள்; மற்றொன்று சோஷியல் மீடியா. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான இந்த தலைமுறையின் அதீதமான நெருக்கம், போதை மருந்தைவிட கொடியது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு தவிர்க்கமுடியாத அளவு அதிகரித்துள்ளதால், வளரிளம் பருவத்தினர், இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிடும் விதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது அவர்களைத் தனிமைப்படுத்துகிறது, மனதளவில் சோர்வையும் பதற்றத்தையும் அடையச்செய்கிறது. டிஜிட்டல் மீடியாவுடனான தீவிர ஈடுபாடு, மன ஆரோக்கியத்துக்கு உதவும் செயல்பாடுகளான தூக்கம் மற்றும் குடும்பம், நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்றவற்றைக் குறைத்துவிட்டது. மன உளைச்சலின் முதல் படி, சமூகத்திலிருந்து தனிமைப்படுவது. கவலையும் பதற்றமும் அவர்களை மிகச் சுலபமாக தாக்குகின்றன.

`இவர்கள்மீது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும். மனச்சோர்வு ஒரு நாள்பட்ட நிலை, வெறித்தனம், எரிச்சல், சோகம் ஆகியவற்றுக்குப்பிறகுதான் இந்த நிலை ஏற்படுகிறது, ஆனால் யார் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் சிக்கல்' என்கிறார் அமெரிக்க உளவியலாளர் லிசா டாமர்.
பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறும்போது, மனஅழுத்தம் அதிகரிக்கிறது. தோல்வியால் தாங்கும் சக்தி இழந்து, விரக்தி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து தற்கொலையில் முடிகிறது. `தங்கள் குழந்தைகள் மனச்சோர்வுடன் இருக்கிறார்களா என்று அவர்களிடம் கேட்க பெற்றோர் தயங்கக் கூடாது. அப்படிக் கேட்பதால் அவர்கள் நிச்சயமாகத் துவண்டுவிட மாட்டார்கள். அதனால் கேட்கத் தயங்கவேண்டாம்' என்கிறார் லிசா.
தற்கொலை சுகாதாரப்பிரச்னை மட்டுமல்ல. ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட.
வளர்ச்சியடைந்த நாடுகளைப்போல, நம்நாட்டிலும் வளர்ச்சியடைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில்தான் தற்கொலைகள் அதிகம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள், விவாகரத்து, கணவனை இழப்பது, தனிமை, குடும்ப வன்முறை, ஆண்களுடன் மோதல் போன்றவை பெண்களின் தற்கொலைக்குக் காரணங்கள். திருமணமான பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தனிமை, தளர்ச்சி, செயல்பட இயலாமை மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு சுமை என்ற உணர்வு போன்றவை வயதானவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன.

மனநலன் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, அதுகுறித்து மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஒரு மிகப்பெரிய குறை. வசதி வாய்ப்புகளும் நம்நாட்டில் மிகவும் குறைவு. இந்தியாவில் 5,000 மனநல மருத்துவர்கள், 20,000 மருத்துவ உளவியலாளர்கள் இருக்கின்றனர். மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. தற்கொலை சுகாதாரப் பிரச்னை மட்டுமல்ல. ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட.

மனதில் உறுதியுடன், கோடிக்கணக்கான பணத்துக்கு அப்பால் ஒரு வாழ்வு இருக்கிறது என்று நம்புபவர்கள், நாடு திரும்புகிறார்கள். நம்பிக்கை இழந்து நிலைகுலைந்தவர்கள் விபரீத முடிவை எடுக்கிறார்கள்.