Election bannerElection banner
Published:Updated:

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

Vaccine
Vaccine

தடுப்பூசிக்குப் பிறகு நமக்கு பாதிப்பு வராது என்றோ நம்மிடமிருந்து பிறருக்குப் பரவாது என்றோ நினைத்துவிட வேண்டாம். அதே நேரத்தில் இரண்டாவது டோஸை தவிர்ப்பது மிகத் தவறு.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எப்படி மீண்டும் தொற்று ஏற்படுகிறது?

இந்தக் கேள்வி அங்கும் இங்கும் பரவலாகப் பேசப்பட்டதுதான். இப்போது உ.பி முன்னாள் முதல்வர் இதே கேள்வியைக் கேட்டதும் அரசியல் உலகமும் மருத்துவத் துறையோடு சேர்ந்து பரபரப்பாகியிருக்கிறது.

தடுப்பூசிகளின் அடிப்படையைப் புரிந்துகொண்டால் மட்டுமே இதற்கான தெளிவை நாம் பெற முடியும். கோவிட் தடுப்பூசி மட்டுமல்ல; நாம் குழந்தைப் பருவத்திலிருந்து செலுத்திக் கொள்ளும் பல தடுப்பூசிகள் முழுமையாகச் செயல்பட `பூஸ்டர்' என்கிற இரண்டாவது டோஸ் ஊசி மிக அவசியம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, மணல்வாரி ஆகிய நோய்களிலிருந்து பாதுகாக்கும் எம்.எம்.ஆர். தடுப்பூசியை ஓர் உதாரணமாகப் பார்ப்போம். இந்த ஊசியை முதல்முறை செலுத்திக் கொண்டவர்களில் ஏறத்தாழ 40 சதவிகிதத்தினர் அந்த மூன்று வைரஸ்களில் இருந்தும் முழுமையாகத் தப்பிவிட முடியாது. இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும், ஒரே ஒரு முறை செலுத்திக் கொண்டவர்களுக்கு தட்டம்மை தாக்கும் அபாய அளவு அதிகம். இந்தத் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ளாதவர்கள் பலர் வாழும் பகுதிகளில் தட்டம்மை நோய்த் தொற்று அதிகம் பரவியது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath, File

தடுப்பூசி என்ன செய்கிறது?

நோய் எதிர்ப்பு ஆற்றல் நிகழ்வின்போது நம் உடல் புதியதொரு செயல்பாட்டுக்குத் தயார் ஆக வேண்டும். அதற்கு இரண்டாவது டோஸ் மிக அவசியம். தடுப்பூசியை நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் முதல்முறை எதிர்கொள்ளும்போது, இரண்டு வகை வெள்ளை அணுக்களை உருவாக்குகிறது. பிளாஸ்மா-பி எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் செல்கள் முதல் வகை. இது உடல் முழுக்கப் பரவியிருந்தாலும்கூட விரைவாகக் குறைந்துவிடக்கூடும். இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ளும்போதுதான் இதன் நீடித்து உழைக்கும் திறன் அதிகரிக்கிறது.

டி-செல்கள் என்கிற இரண்டாவது வகை வெள்ளை அணுக்கள் குறிப்பிட்ட வகை கிருமிகளை அறிந்து, அவற்றை அழிப்பதற்காகவே தடுப்பூசி மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் சிலவகை டி-செல்கள், நோய்க் கிருமி புலப்படாவிட்டால் பல்லாண்டு காலத்துக்கும் வாழும். நோய் எதிர்ப்பாற்றலை தொடர்ந்து அளிக்கும்.

இரண்டாவது டோஸ் செலுத்தும் வரை இதுபோன்ற செல்கள் அதிகமாக உருவாகாது. இந்த நீடித்த எதிர்ப்பாற்றலை அளிக்கும் இரண்டாம் நிலை பணியைத் தூண்டுவதற்காகவே பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது. இரண்டாம் டோஸ் செலுத்திக் கொண்ட பிறகே டி செல்களின் பெருக்கம் அதிகரிக்கும். சிறப்பாகச் செயல்பட நோய் எதிர்ப்பு அணுக்கள் நம் உடலில் பல்கிப் பெருகி வாழத் தொடங்கும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைவிட, ஒரே ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக்கொள்வது லேசான பலனைத்தான் அளிக்கும். இரண்டாம் டோஸ் செலுத்திக் கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Altaf Qadri

இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போதுமானதாக இருக்காது. அதோடு மேற்சொன்ன செல்கள் உருவாகவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொண்டாலும்கூட, முதல் இரண்டு வாரங்களுக்கு நாம் தடுப்பூசிக்கு முந்தைய நிலையில்தான் இருப்போம். தடுப்பூசிக்குப் பிறகும் சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தடுப்பூசிக்குப் பிறகு நமக்கு பாதிப்பு வராது என்றோ நம்மிடமிருந்து பிறருக்குப் பரவாது என்றோ நினைத்துவிட வேண்டாம். அதே நேரத்தில் இரண்டாவது டோஸை தவிர்ப்பது மிகத் தவறு.

உதாரணமாக... கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 42 நாள்களுக்குப் பிறகுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிபாடி தோன்றும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. தடுப்பூசிக்குப் பிறகு முகக்கவசம், தனிமனித இடைவெளி, கைகழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைத் தவிர்க்கக் கூடாது.

``சில மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால் தீவிரமான பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். இரண்டாம் டோஸ் தடுப்பூசி காரணமாகவே பாதிப்பின் வீரியம் குறைந்திருக்கிறது" என்கிறார் இதேபோல பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Rafiq Maqbool
கேரளாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை அறிவித்த சுகாதாரத்துறை... தமிழகத்தில் நிலை என்ன?

தடுப்பூசிக்குப் பிந்தைய நோய்த்தொற்றுக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. கோவாக்ஸின் தடுப்பூசியில் 80 சதவிகித செயல்திறன் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது... இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட பிறகும் கோவிட் பாதிப்பு உருவாக 20 சதவிகித வாய்ப்பு உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நான்கு வார இடைவெளியில் செலுத்திக்கொண்டால் சற்றே குறைவான செயல்திறனும், எட்டு வார இடைவெளியில் செலுத்திக்கொண்டால் அதிக செயல்திறனும் கிடைக்கிறது என்று தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆகவே, இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவின் தீவிரம் நிச்சயம் குறைவாகவே இருக்கும். உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். இவர்களை லேசான அல்லது அறிகுறி இல்லாத கொரோனா தாக்கக்கூடும். ஆகவே, தடுப்பூசிக்குப் பிறகும் பாதுகாப்பு விஷயங்களில் கவனம் தேவை. இன்னொரு விஷயம்... இந்தத் தடுப்பூசிகள் இப்போதைய மதிப்பீட்டின் படி ஓராண்டு காலத்துக்கு மேலாக பாதுகாப்பு அளிக்கும்.

தொடரும் ஆய்வு முடிவுகள் நமக்கு மகிழ்ச்சியான செய்திகளை அளிக்கும் என நம்புவோம்!

- எஸ்.சங்கீதா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு