Published:Updated:

`தடுப்பூசிக்குப் பிந்தைய தொற்றுகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்; ஏனெனில்..!' - மருத்துவரின் அனுபவ பகிர்வு

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டவர்களிலும் ஒரு சில மரணங்களைக் கேள்விப்படுகிறோம். இது மனதில் விரக்தியை ஏற்படுத்துகிறதே என்று பல நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எனது விடை...

தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டவர்களிலும் ஒரு சில மரணங்களைக் கேள்விப்படுகிறோம். இது மனதில் விரக்தியை ஏற்படுத்துகிறதே என்று பல நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எனது விடை...

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய கோவிட் தடுப்பூசிகளில் செய்யப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வுகளில், தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்ட மக்களிடையே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் எண்ணிக்கையையும் கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களும் ஏற்படவில்லை.

தடுப்பூசி
தடுப்பூசி

ஆயினும் பல கோடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது தடுப்பூசிகள் போடப்பட்ட மக்களுள் அறிகுறிகளற்ற கொரோனா ஏற்படலாம். அவர்களுக்கு சாதாரண (mild) தொற்று ஏற்படலாம். மிக மிகக் குறைவான மக்களுக்கு மிதமான சிகிச்சை தேவைப்படும் தொற்று ஏற்படலாம். அரிதினும் அரிதாக மரணங்களும் நேரலாம்.

ஆயினும், தடுப்பூசி போடப்படாத மக்களுள் ஏற்படும் கொரோனா மரணங்களைவிட மிக மிகக் குறைவான அளவிலேயே தடுப்பூசி பெற்றவர்களிடையே மரணங்கள் நிகழ்கின்றன. நான் கொரோனா முன்கள மருத்துவராகக் கடந்த ஒரு வாரம் பணிபுரிந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 100 நோயாளிகளின் வரலாறுகளை (Case history) நேரடியாகப் படித்திருக்கிறேன்.

அதிலிருந்து நான் கற்றவை...

தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றிருந்தால்கூட அவருக்கு நோய் சாதாரண நிலையில் இருந்து மிதமான நிலைக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

மிதமான மற்றும் தீவிர நோய்த்தன்மைக்குள்ளானவர்கள் யாரும் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. இது என்னளவில் நான் கண்டவை.

இன்னும், கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் என் நண்பர்களின் கூற்று யாதெனில், அரிதினும் அரிதாகவே தடுப்பூசி பெற்றவர்கள் ஐசியு நிலையை அடைகிறார்கள் என்பதே.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

நடப்பது போர்ச்சூழல். இதில் ராணுவ வீரர்கள் தங்களை காத்துக்கொள்ள குண்டு துளைக்காத கவச உடை வழங்கப்படுகிறது. ஆனால் அந்த உடை இருப்பதாலேயே அவர் மரணமடைய மாட்டார் என்று கூற முடியாது. ஆயினும் அவர் மரணமடையும் வாய்ப்பை அந்த உடை வெகுவாகக் குறைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அவர் அந்த கவச உடையுடன் கூடவே கையில் எதிரியை வீழ்த்த துப்பாக்கி, எப்போதும் எதிரி கண்ணில் சிக்காமல் இருக்கும் யுக்தி போன்றவற்றைக் கடைப்பிடித்தால்தான் பிழைப்பார்.

அதுபோலவே, தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிர தொற்று நிலையை அடையும் வாய்ப்பையும் உயிரிழக்கும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100% பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது, நம்பவும் கூடாது.

இரு சக்கர வாகனத்தில் செல்வோர், ஹெல்மெட் அணிய வேண்டும். கூடவே சாலை விதிகளை மதித்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடப்பக்க ஓரத்தில் வண்டியை செலுத்த வேண்டும். அதிலும் செல்போன் பேசாமல் ஓட்ட வேண்டும். வேகம் குறைவாக ஓட்ட வேண்டும். இத்தனையும் கூட்டாகச் செய்யும்போது அவர் விபத்துக்குள்ளாகாமல் பயணிக்கலாம்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

அதே போன்றுதான் கொரோனா நோய்க்கு எதிராக நமது யுக்திகள் செயல்படுகின்றன. எனவே, இந்த யுக்திகளால் போர்க்களத்தில் காக்கப்படும் உயிர்கள்தான் நமக்கு முக்கியம்.

இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். ஆனால், எந்தப் பக்கம் இழப்புகள் ஜாஸ்தி என்பதைக் கணக்கிட்டால் தடுப்பூசி போடப்படாத மக்கள் தொகையில் மிக அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

நீங்கள் நோய்த் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள விரும்பினால் உங்களுக்கான தடுப்பூசியை உடனே பெறுங்கள். இன்ன பிற கொரோனா தடுப்பு நடவடிக்கைளையும் சேர்த்துக் கடைப்பிடியுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு