Published:Updated:

Covid Questions: வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா; என் வீட்டு நாய், பூனைகளையும் தாக்குமா?

Dog
News
Dog ( Photo by Hilary Halliwell from Pexels )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அவை உயிரிழந்ததை அடுத்து வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களிடம் கொரோனா பயம் அதிகரித்திருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றுக்கும் கொரோனா தொற்று அபாயம் உள்ளதா?

- அஸ்வின் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்.

``கடந்த வருடத் தகவல்களின் படி ஃபீலைன் (Feline) இனத்தைச் சேர்ந்த பூனை போன்ற உயிரினங்களுக்கு மட்டும்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டின் மத்தியில் நியூயார்க்கின் பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கடுத்து அத்தகைய செய்திகள் இல்லை. சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து சிங்கங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதைக் கேள்விப்படுகிறோம்.

கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்
கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரிய குழுவைச் சேர்ந்தது. அதில் கோவிட் 19 என்பது மனிதர்களைத் தாக்குகிறது. அது பூனை இனங்களையும் பாதிக்கலாம் என்பது சில நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அது வேறெந்த உயிரினங்களையும் பாதித்ததாகத் தகவல்கள் இல்லை.

இது தவிர்த்து நாய்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸும் உண்டு. நாய்கள் அந்தத் தொற்றுக்குள்ளாகும்போது ஒன்றிரண்டு நாள்களுக்கு மட்டும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருக்கும். வயிற்றுப்போக்கில் லேசான ரத்தம் வெளிப்படலாம். இந்த அறிகுறிகள் எல்லாமே தானாகவே சரியாகிவிடும்.

அந்தத் தொற்றுக்கான தடுப்பூசியும் 30 வருடங்களுக்கும் மேலாக புழக்கத்தில் இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா தொற்று அதிகரித்திருக்கிற இந்தக் காலத்தில் நாய் வளர்ப்பவர்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றத்தைப் பார்க்கிறேன். நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதன் மூலம் அதன் பாதங்களின் மூலம் தொற்று அதன் உடலில் நுழைந்து, அதன் மூலம் தனக்கும் தொற்று வருமோ என்ற பயம் மனிதர்களிடம் அதிகரித்திருக்கிறது. கொஞ்சமும் அர்த்தமில்லாத பயம் இது. கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து என் அனுபவத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கோ, பூனைகளுக்கோ தொற்று வந்து நான் பார்த்ததில்லை.

பூனை
பூனை

ஒரே வீட்டில் அத்தனை மனிதர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் அவர்கள் வீட்டிலுள்ள நாய்க்குட்டி முதல் வயதான பூனை வரை எந்த விலங்குக்கும் கொரோனா தொற்று வரவில்லை. தொற்று பாதித்த நபர், வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் வீட்டில் வளர்க்கும் நாயிடமிருந்து ஒதுங்கியிருக்கத் தேவையில்லை.

வீட்டில் யாருக்காவது தொற்று ஏற்பட்ட நிலையில், நாய்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதும் அவற்றுடன் வழக்கமான நெருக்கத்தைக் குறைப்பதும் தேவையற்றது என்பது என் கருத்து. ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரியலாம். உங்கள் செல்லங்களுக்குப் புரியாது. அது அவற்றுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாக்டௌனில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் `போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர்' (Post-Traumatic Stress Disorder) எனும் ஒருவகை மன அழுத்தம் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். கொரோனா பயம் காரணமாக நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வதைப் பலரும் நிறுத்திவிட்டார்கள். அதன் விளைவாகப் பல நாய்களும் எக்கச்சக்கமாக எடை கூடியிருக்கின்றன. நிலைமையைப் புரிந்துகொள்ள முடியாமல் மன அழுத்தம் காரணமாகத் தன் உடலை அடிக்கடியும் அதிகமாகவும் நக்கிக் கொள்வதைப் பார்க்கலாம்.

பூனைகள், நாய்களிடமிருந்து வேறுபட்டவை. நாய்களைப்போல பூனைகள் எப்போதும் மனிதர்களுடன் ஒட்டி உறவாட விரும்பாதவை. தனியே சுற்றித்திரிபவை. ஆனால், இந்த லாக்டௌனில் பூனைகளுக்கும் மன அழுத்தம் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு கொரோனா தொற்று காரணமல்ல. வொர்க் ஃப்ரம் ஹோம், மாறிவிட்ட வாழ்க்கை முறை காரணமாக மனிதர்கள் மன அழுத்தத்தை உணர்வதில்லையா, அது போலத்தான் இதுவும்.

சிங்கம்/ Vandalur Zoo
சிங்கம்/ Vandalur Zoo

பூனை வளர்ப்பவர்களுக்கு மட்டும் ஓர் அட்வைஸ். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பூனைகளிடம் ரொம்பவும் நெருக்கம் காட்ட வேண்டாம். அவை உங்கள் அருகில் இருப்பதைப் பெரிய அளவில் மிஸ் செய்யாது. ஒருவேளை பூனைகளிடம் மூக்கு ஒழுகுதல், தும்மல், சுவாசப் பிரச்னைகள் போன்ற அறிகுறிகளைப் பார்த்தால் உடனே மருத்துவரை அணுகவும். சாதாரண தும்மல் என்றால் பயப்பட வேண்டாம். ஆனால் சாப்பிடவோ, எழுந்திருக்கவோ முடியாத நிலையில் இருந்தால் நிச்சயம் மருத்துவரிடம் தூக்கிச் செல்லுங்கள். இது பூனை வளர்ப்பவர்களுக்கு மட்டும்தான். நாய் உள்ளிட்ட பிற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இந்த விஷயத்தில் கவலை கொள்ள வேண்டாம்.

நாய்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிற கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை. கடந்த வருடம் கொரோனா பரவ ஆரம்பித்ததும் சிலர், இந்தத் தடுப்பூசியைப் பிரபலப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள். `உங்கள் நாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா' என்று பிரசாரம் செய்தார்கள். இந்த கொரோனா வைரஸும், மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸும் வேறு வேறு. தேவையே இல்லாமல் இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி, உங்கள் செல்ல நாயின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம்.

நாய்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய பிரத்யேக பரிசோதனை முறைகள் உள்ளன. பெரும்பாலும் அனுபவத்தின் அடிப்படையிலேயே அறிகுறிகளை வைத்து மருத்துவர்கள் அதைக் கண்டுபிடித்து உறுதிசெய்துவிடுவார்கள். டெஸ்ட் எடுத்து அதன் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் நேரத்தை வீணடிக்காமல் அறிகுறிகளை வைத்துச் சிகிச்சைகளைத் தொடங்கிவிடுவோம்.

Man walking with dog
Man walking with dog
Pixabay

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு இன நாய்களுக்கு தட்பவெப்பநிலை மாறுதல் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். அந்த நாய்களுக்கு மட்டும் அவை இந்தியா வந்த முதல் வருடத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு தேவையில்லை.

சிங்கம், புலி போன்ற பெரிய பூனையினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்குத்தான் இதுவரை மனிதர்களிடமிருந்து தொற்று பரவியதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டில் வளர்க்கும் பூனைகளுக்கு இந்த ஆபத்தில்லை என்பதால் பயம் தேவையில்லை. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பாதிக்கும் அளவுக்கு இந்த வைரஸ் தொற்று வீரியமடையவில்லை என்பதுதான் நிதர்சனம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!