Published:Updated:

டெல்டா ப்ளஸ் வைரஸ்: `மூன்றாம் அலை இன்னும் மோசமாக இருக்குமா?' - விளக்கும் மருத்துவர்

COVID-19 vaccination center in Dharmsala
COVID-19 vaccination center in Dharmsala

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் டெல்டா ப்ளஸ் மட்டுமல்ல, அனைத்து வகையான உருமாறிய வைரஸும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்தான்.

இந்தியாவில் இரண்டாம் அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் மீண்டும் உருமாறி டெல்டா ப்ளஸ்ஸாக உருவெடுத்துள்ளது. டெல்டா ப்ளஸ் பல்வேறு நாடுகளில் தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் டெல்டா வகை வைரஸ்களால் சமூகப் பரவல் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்களை இந்த வைரஸ் தாக்கியே தீரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரிட்டன் உள்ளிட்ட 85 நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பரவியுள்ளது.

A health worker administers the Covaxin COVID-19 vaccine
A health worker administers the Covaxin COVID-19 vaccine
AP Photo/Mahesh Kumar A

இந்நிலையில், இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கு 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என்று ஐ.சி.எம்.ஆர் கணித்துள்ளது. டெல்டாவைவிட தீவிரமான டெல்டா ப்ளஸ் பரவும் சூழலில் மூன்றாம் அலையின் தாக்கம் தாமதமாக வாய்ப்புள்ளதா என்று பொது மருத்துவர் பாபு நாராயணனிடம் கேட்டோம்.

``பொதுவாக வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அப்படி உருமாறும் சில வைரஸ்களின் செயல்பாட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாக்குவதில்லை. ஆனால், சில உருமாற்றம் அவற்றின் செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும்போதும் அதைக் கண்டறிவதற்காக Variant of Interest, Variant of Concern, Variant of High Consequence என்று 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது.

உருமாற்றம் நடைபெறும்போது குறிப்பிட்ட எந்த விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும், உருமாற்றம் அடைந்த எந்த வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இதை வைத்துக் கணிப்பார்கள். நோய் தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று கணிக்கக்கூடியது Variant of Interest.

பரவும்தன்மை, தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதை ஓரளவு ஊர்ஜிதப்படுத்த முடியும் என்பது Variant of Concern, கண்டிப்பாகத் தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் கட்டுப்படாது என்பதைக் குறிப்பது Variant of High Consequence. அந்த வகையில் டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸை உலக சுகாதார நிறுவனம் Variant of Concern என்று அறிவித்துள்ளது.

6 - 8 மாதங்களுக்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டால் மூன்றாம் அலையின்போது தாக்கம் சற்றுக் குறையும்.
பொது மருத்துவர் பாபு நாராயணன்

டெல்டா ப்ளஸ்!

இந்தியாவில் 2020 டிசம்பர் மாதம் டெல்டா வைரஸ் பரவத் தொடங்கியது. எப்படி ஆல்பா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதோ அதே போல டெல்டா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது. டெல்டா வைரஸிலிருந்து சிறிய மாற்றத்துடன் உருமாறியிருப்பது டெல்டா ப்ளஸ் வைரஸ். ஆன்டிபாடி காக்டெயில், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உருவாகும் ஆன்டிபாடி, நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு உருவாகும் ஆன்டிபாடி என இந்த மூன்றுக்கும் கட்டுப்படாது என்றும், நோயை உருவாக்குவதில் கூடுதல் திறன் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. இது புதிய வைரஸ் என்பதால் இதைப்பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியாது. இந்த வைரஸைப் பற்றிய கூடுதல் தரவுகளும் இல்லை.

தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து?

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் டெல்டா ப்ளஸ் மட்டுமல்ல, அனைத்து வகையான உருமாறிய வைரஸும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்தான். மேலும், டெல்டா ப்ளஸ்ஸின் பரவும்தன்மை மற்றும் தீவிரம் அதிகரிப்பதாலும், உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறனுக்கு அடங்காமல் இருப்பதாலும் இதன் தாக்கம் அதிகரிக்கும். இந்தப் புதிய வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படாது என்பதால் மாஸ்க் அணிதல், கைகழுவும் பழக்கம், தனிமனித இடைவெளி ஆகிய கோவிட் தொற்றுக்கு எதிரான நடத்தைகளை பின்பற்றியே ஆக வேண்டும். இரண்டாம் அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டதே இதற்குச் சான்று.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Illustration/Peter Hamlin

எனவே, மூன்றாம் அலையின்போது நோயால் பாதிக்கப்படுவோர் இருப்பார்கள். ஆனால், தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நோயைத் தடுப்பதற்கான முக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சமூகப் பரவல் அதிகரிக்கும்?

இரண்டாம் அலையிலும் சமூகப் பரவல் இருந்தது என்றாலும் அதைப்பற்றி அதிகமாகப் பேசவில்லை. மூன்றாம் அலையில் பரவும்தன்மை அதிகமாக இருக்கும் என்பதாலும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விஷயங்களுக்கு கட்டுப்படாது என்பதாலும் சமூகப் பரவல் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

6 - 8 மாதங்களில் 3-வது அலை?

மூன்றாம் அலையைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே கணிப்புதான். ஐ.சி.எம்.ஆர், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட கணித மாடலை வைத்து அதைக் கணக்கிடுகின்றனர். வெவ்வேறு நாடுகளில் மூன்றாம் அலை எப்போது ஏற்பட்டது என்பதன் கணக்கீட்டு அடிப்படையில் இது கணிக்கப்படுகிறது.

பொதுவாக, அமெரிக்காவில் பரவல் தொடங்கிய ஒரு மாதத்தில் மும்பை அல்லது டெல்லியில் பாதிப்பு தொடங்கும். அதிலிருந்து மூன்று முதல் ஆறு வாரங்களுக்குள் சென்னையில் பாதிப்பு ஏற்படும். அதன் அடிப்படையில்தான் ஜூலை மாத இறுதியில் மும்பை, டெல்லியில் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள் சென்னையில் பரவல் அதிகரிக்கும் முதலில் கூறப்பட்டது.

இரண்டாம் அலையே நீடிக்கும்!

பொது மருத்துவர் பாபு நாராயணன்
பொது மருத்துவர் பாபு நாராயணன்

இரண்டாம் அலையில் டெல்டா வைரஸ் பரவியிருக்கும் சூழலில் இரண்டாம் அலையில் ஏற்பட்ட (Peak) என்பது ஒரே நிலையில் இல்லை. அவ்வப்போது வேறு வேறு இடங்களில் சிறிய அளவில் உச்சம் ஏற்பட்டது. மேலும் தற்போது டெல்டா ப்ளஸ் பரவத் தொடங்கியுள்ளதால் இரண்டாம் அலையே தொடர்ந்து நீடிக்கிறது. அதனால் மூன்றாம் அலை சற்று தாமதிக்கலாம் என்று கருதப்படுகிறது.

டெல்டா ப்ளஸ் வைரஸால் மீண்டும் பாதிப்பு சிறிய அளவில் அதிகரிக்கலாம் (Spike) என்றும் கணிக்கின்றனர். எனவே, இவ்வளவு சீக்கிரத்தில் மூன்றாம் அலை தொடர்பான ஒரு நிலையான முடிவுக்கு வருவதும் சாத்தியமில்லை. இவையனைத்துமே கணித ரீதியான கணிப்புகள்தான்.

தடுப்பூசி போட்டால் 3-ம் அலை வராதா?

6-8 மாதங்களுக்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டால் மூன்றாம் அலையின்போது தாக்கம் சற்றுக் குறையும். பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறிப்பிட்ட அளவு குறையும். டெல்டா ப்ளஸ் போன்ற உருமாறும் வைரஸ்கள் தடுப்பூசிக்கு கட்டுப்படவில்லை என்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவு குறையும் என்றும் கூற முடியாது.

A man carries his granddaughter wearing face masks as a precaution against the coronavirus as he arrives to receive the Covaxin COVID-19 vaccine during a special vaccination drive in Hyderabad
A man carries his granddaughter wearing face masks as a precaution against the coronavirus as he arrives to receive the Covaxin COVID-19 vaccine during a special vaccination drive in Hyderabad
AP Photo/Mahesh Kumar A
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

குழந்தைகள் நிலை என்ன?

முதல் இரண்டு அலைகளிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதன் விகிதத்தில் பெரிய அளவு மாறுபாடு இல்லை. அதேபோன்று பிற நாடுகளிலும் மூன்றாம் அலை, நான்காம் அலை என அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த நாடுகளிலும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. மக்கள்தொகையில் 50 - 60% சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளிலும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. எனவே, மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவது சிறிய அளவு அதிகரிக்குமே தவிர, அதிக அளவில் குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்பில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு