Published:Updated:

Doctor Vikatan: விளையாடும்போது கிழிந்த மூட்டு ஜவ்வு; என் கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்புமா?

Knee Pain (Representational Image)
News
Knee Pain (Representational Image) ( Image by Angelo Esslinger from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

எனக்கு இரு முட்டிகளிலும் கிரிக்கெட் விளையாடியதால் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது இரு மூட்டுகளிலும் ஜவ்வு கிழிந்திருப்பதாகச் சொன்னார்கள். மினிஸ்கஸ் டேர் என்றார்கள். வீட்டில் எனக்கு ஆபரேஷன் செய்ய பயப்படுகிறார்கள். என் அம்மாவும் 20 வருடங்களாக வாதப் பிரச்னையால் நடக்கமுடியாமல் இருக்கிறார். என்னால் வேகமாக ஓட முடியவில்லை. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? நான் மீண்டும் விளையாட முடியுமா?

- அர்ஜுன் (விகடன் இணையத்திலிருந்து)

அப்பாஜி கிருஷ்ணன்
அப்பாஜி கிருஷ்ணன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் அப்பாஜி கிருஷ்ணன்.

``இந்தப் பிரச்னையை `ஸ்போர்ட்ஸ் இன்ஜுரி' என்போம். அதாவது விளையாட்டுத்துறையில் ஈடுபடுவோருக்கு அடிபடுவதால் உண்டாகும் காயங்கள். விளையாட்டுத்துறையில் ஈடுபடுவோருக்குப் பெரும்பாலும் கணுக்கால் மூட்டுகளில்தான் அடிபடும். அடுத்தது தோள்பட்டைகள். முழங்கால்களிலும் ஏசிஎல், அதாவது ஆன்டீரியல் க்ரூஷியேட் லிகமென்ட் (Anterior Cruciate Ligament ) எனும் பகுதியிலும், மெனிஸ்கஸ் (Meniscus) எனும் பகுதியிலும்தான் பாதிப்பு ஏற்படும். தொடை எலும்பின் முடிவு வட்டமாக இருக்கும். கால் எலும்பின் ஆரம்பம் தட்டையாக இருக்கும். இந்த இரண்டையும் சமமாக மாற்றும்படி 'C' வடிவில் இருக்கும் பகுதியே மெனிஸ்கஸ். அதாவது அரைவட்ட நிலவு வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு முழங்காலிலும் இது போன்று இரண்டு மெனிஸ்கஸ் இருக்கும். உடலிலுள்ள குறுத்தெலும்புகளுக்கும் தசைநார்களுக்கும் ரத்த ஓட்டம் இருக்காது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த நிலையில் இவற்றுக்கு டிஃப்யூஷன் முறையில் உணவு கிடைக்கும். அதாவது இதன் முனையிலுள்ள ரத்த நாளங்களிலிருந்து தனக்கான சத்தை உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழும். இவையெல்லாம் ரத்த ஓட்டம் இல்லாமல் உயிருடன் இருக்கும் திசுக்கள். உங்களுக்கு இந்த மெனிஸ்கஸ் பகுதி கிழிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது சரியாக வேண்டுமென்றால் அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தேவை. டிஃப்யூஷன் முறையும் உங்களுக்கு அறுபட்டுப் போயிருக்கும். அதனால் காயம் ஆறாது. எனவே அறுவை சிகிச்சை தேவைப்படும். அதை இரண்டு விதங்களில் மேற்கொள்வோம்.

Surgery
Surgery
Photo by Piron Guillaume on Unsplash

கிழிந்த பகுதி சிறியதாக இருந்தால் அதை வெட்டி எடுத்து விடுவோம். மெனிஸ்கஸை வெட்டியெடுக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு `மெனிஸ்செக்டமி' (Meniscectomy) என்று பெயர். வலி இருக்காது. மீண்டும் விளையாட ஆரம்பிக்கலாம். ஓடலாம். அதுவே பாதிக்கப்பட்ட நபரின் வயது குறைவு, கிழிந்த பகுதி பெரியது என்றால் அதை ரிப்பேர் செய்யலாம். தோல் காலணிகளையெல்லாம் உள்பக்கமாகத் தைப்பதுபோல இதில் தைக்கப்படும். சிறிய டியூபை மூட்டுக்குள் விட்டுச் செய்யப்படும் ஆர்த்ரோஸ்கோப்பி என்ற முறையில் இது சரிசெய்யப்படும். இதில் காயம் சீக்கிரம் ஆறிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேனா சைஸில் உள்ள கேமராவை டியூப் வழியே மூட்டுக்குள் விட்டுச் செய்யப்படும் இந்த ஆர்த்ரோஸ்கோப்பி அறுவைசிகிச்சையை, ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள்தான் செய்ய வேண்டும். பெரும்பாலும் ஒரே நாளில் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அதன் பிறகு உடலுக்கான பயிற்சிகளைச் செய்து, மூட்டுகளைப் பலப்படுத்த வேண்டும். 10 முதல் 12 வாரங்களில் மீண்டும் விளையாடப் போகலாம். `ரிட்டர்ன் டு ஸ்போர்ட்ஸ்' என்பதுதான் இதன் இலக்கே.

Surgery (Representational Image)
Surgery (Representational Image)
Photo by JAFAR AHMED on Unsplash

உங்கள் அம்மாவின் பிரச்னையும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையும் வேறு வேறு. உங்கள் அம்மாவுக்கு வந்திருப்பது வாத நோய். நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், வெளியிலிருந்து நம் உடலுக்குள் நுழையும் அந்நியத்தன்மைகளை எதிர்த்து உடலைக் காப்பவை. ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்களுக்கு இப்படி நிகழாது. நம் திசுக்களுக்கு எதிராகவே இந்த வெள்ளை அணுக்கள் செயல்படும். உங்கள் அம்மாவுக்கு அவரின் மூட்டுகளிலுள்ள குறுத்தெலும்புகளையே திசுக்கள் சாப்பிட்டுவிடும். அதுதான் வாதநோய், அதாவது மருத்துவத்தில் இந்தப் பிரச்னையை `ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ்' என்று குறிப்பிடுவோம். ஆளையே முடக்கிவிடும் பாதிப்பு இது.

இதற்கு மருந்துகள் மட்டுமே தீர்வு. நம் திசுக்களே குறுத்தெலும்புகளைச் சாப்பிடாமலிருக்கும்படி நோய் எதிர்ப்புத்திறனை சற்று குறைக்க வேண்டியிருக்கும். அதற்கான மருந்துகளைப் பரிந்துரைப்போம். தேவைப்பட்டால் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்படும். இந்த முடக்கத்தால் மூட்டு முழுக்க தேய்ந்துபோய், கால்களே வளைந்துவிட்டால் அந்த நிலையில் அறுவை சிகிச்சை தேவைப்படும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?