இந்தியாவில் கோவிட்- 19 பாதிப்புகளில் சற்று ஏற்ற இறக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மார்ச் 9-ம் தேதி 4,184 ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி 4,194 ஆக உயர்ந்து, மார்ச் 11-ம் தேதி 3,614 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கோவிட் பாதிப்பு 4,29,93,494 என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் பாதிப்பிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் 97.72 சதவிகிதமாகக் காணப்படுகிறது.

கடந்த ஆண்டின் மே, ஜூன் மாதங்களில் இரண்டாம் அலை உச்சத்தைத் தொட்டதைப் போன்று, இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பாதிப்பு ஏற்படுமா, இந்தியாவில் இருக்கும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையின் ஏற்ற இறக்கம் சொல்லும் செய்தி என்ன என்று தொற்றுநோய் மருத்துவர் அப்துல் கஃபூரிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``அதிகரிக்கும் வெறும் 10, 15 நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து கோவிட்-19 தொற்று அதிமாகும் என நம்மால் கணித்துக் கூற முடியாது. இப்படி சிறிய அளவில் எண்களில் மாறுபாடு இருப்பதைத் தொற்று உயர்வு என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. குறைந்தது ஒரு வாரத்துக்காவது நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஓரிரு நாள்களில் தொற்று எண்ணிக்கையில் வரும் மாறுபாடுகளை வைத்து எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது"எனக் கூறுகிறார்.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இன்றைய நிலவரப்படி தென்கொரியா 3,09,769, ரஷ்யா 41,055, ஜப்பான், 55,002 என பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. மேலும் அண்டை நாடான சீனாவின் வடகிழக்குப் பகுதியான சாங்சனில் புதிய வகை கோவிட் தொற்று பரவியுள்ளதால் அங்கே முழு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுதொடர்பாகப் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``சீனாவில் புதிய வகை கோவிட் தொற்று பரவினாலும் தமிழகத்தில் 87% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொற்று பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொது மக்களிடையே மெத்தனம் காணப்படுகிறது.
அண்டை நாடுகள் சிலவற்றில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இரண்டு தவணை தடுப்பூசி அவசியம். எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், கிராமப்புற பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய வயதான நபர்களுக்கு சேவைத்துறைகளின் சார்பில், நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.
``கடந்த மூன்று அலைகளிலும் தொற்று பாதிப்பில் இருந்த ஏற்ற இறக்கங்களுக்கு அவர்களுடைய பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக இருந்தன என்பதை மக்கள் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதல் அலையின் தாக்கம் குறைந்தபோதே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மறந்துவிட்டனர். அதன்பிறகுதான் டெல்டா வகை கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டது.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போதே நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மறந்துவிட்டனர். தடுப்பூசி செலுத்தத் தொடங்கி முதல் நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கமும் சுணக்கமும் இருந்தது. டெல்டாவினால் ஏற்பட்ட இரண்டாம் அலையால் நமக்கு மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. 2021 மார்ச்சில் தொடங்கிய தாக்கம் ஜூனில்தான் குறைந்தது. கடைசியாக உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் பாதிப்பும் ஏற்பட்டது.
தமிழகத்தில் 90% பேருக்கு முதல் தவணையும் 72% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது. 15-18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்கள் ஆகியவையும் செலுத்தி வருகிறோம். இன்று இருக்கும் பெரிய சவால் என்னவென்றால், நோய் தாக்கத்தின் தீவிரத்தின்போது மக்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வளவு வேகமாகக் கடைப்பிடித்து தொற்றைக் குறைக்க உதவினார்களோ அதைவிட வேகமாக அந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு விடுகின்றனர்.

87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருந்தாலும், இன்னும் தடுப்பூசி போடாதவர்களும் உள்ளார்கள். பதினெட்டு வயதுக்கு மேலான 50 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் 1.33 கோடி பேர் உள்ளார்கள். வரும் காலங்களில் உருமாறிய புதிய வகை வரைஸ் பரவல், நோய்த் தாக்கம் அதிகரிப்பு என ஏதாவது ஏற்பட்டால் இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்தாம் நமக்கு கைகொடுக்கும். ஏற்கெனவே ஏற்பட்ட அலைகளிலும் அவைதான் கைகொடுத்தன. எனவே, சோப் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை சரியாகச் செய்வதன் மூலம் அடுத்த அலை தோன்றினால்கூட அதை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்கும். மருத்துவமனை படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், நோயைக் கண்டறியும் ஆய்வகங்கள் என போதுமான வசதிகள் நம்மிடம் உள்ளன. நான்காம் அலை வருமா, வராதா என நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் நான்காம் அலை ஏற்பட்டாலும் நிச்சயம் நம்மால் சமாளிக்க முடியும்.

நம் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ஒமிக்ரான் தாக்கத்தை நம்மால் சமாளிக்க முடிந்தது. சீனா, மலேசியா, ஹாங்காங், ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போதுகூட ஒமிக்ரானின் தாக்கம் உள்ளது. அதிகாரபூர்வ தகவலின்படி சீனாவின் தற்போதைய அலைக்குக்கூட ஒமிக்ரான்தான் காரணம்.
மக்களுக்கு சுகாதாரத்துறை வைக்கும் அன்பான வேண்டுகோள் அவர்கள் ஏறி வந்த ஏணியைப் புறந்தள்ளாமல் அதே வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே. கடந்த காலங்களில் பின்பற்றியதைப் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை விடாமல் பின்பற்ற வேண்டும். உலக அளவில் பொது சுகாதார வல்லுநர்கள் இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றத் தேவையில்லை எனக் கூறும் வரை நாமாக எதையும் கைவிடக் கூடாது" என்றார்.