கொரோனா என்ற வைரஸ் உலகை உலுக்கத் தொடங்கி சுமார் மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் அந்த வைரஸ் பாதிப்புக்கான முழு தீர்வை நம்மால் எட்ட முடியவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், வைரஸும் தன் பங்குக்கு உருமாற்றங்களை நிகழ்த்தி சவால்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், வேப்பமரப் பட்டையின் சாறு மூலமாக கொரோனாவை ஒழிக்கலாம் என்று கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், ``வேப்பமரம் பல நோய்களுக்கு மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வேப்பமரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு காலரா, குடல் மற்றும் வயிறு உள்ளிட்ட பல நோய்களை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது நடத்திய ஆராய்ச்சியில், வேப்பமரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு கொரோனா வைரஸில் காணப்படும் முள்போன்ற ஸ்பைக் புரதங்களைச் செயலிழக்கச் செய்யும் எனவும் `சார்ஸ் கோவி 2' வைரஸ் மற்றும் அதன் புதிய உருமாற்றங்களுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த மருந்தை விலங்குகளுக்குப் பரிசோதித்தபோது கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு வைரஸ் பெருகுவதைத் தடுக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மரிய நாகலின் ஆய்வுக்கூடத்தில் கொரோனா பாதித்தவரின் நுரையீரல் செல்களில் செலுத்தியும் பரிசோதிக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றிப் பேராசிரியர் மரிய நாகல் கூறியபோது, ``கொரோனா பாதிப்பின் தீவிரத்தையும் வைரஸின் வீரியத்தையும் வேம்பு குறைக்கும். மேலும், இதைப் பயன்படுத்தும்போது வெவ்வேறு உருமாற்றங்கள் மனிதர்களைத் தாக்கும்போதும் புதிய சிகிச்சை முறைகளை விஞ்ஞானிகள் கையாள வேண்டியதில்லை என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஆராய்ச்சி பற்றியும் வேம்பின் சிறப்பு பற்றியும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வ சண்முகம் விளக்குகிறார்.
``வேப்பமரத்திலிருக்கும் இலை, பூ, காய், பழம், வேப்பங்கொட்டை, மரப்பட்டை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அம்மை நோய், வைரஸால் ஏற்படக்கூடிய கல்லீரல் பாதிப்புகள், வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை, ஹெச்.ஐ.வி தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் வேப்பமரத்தின் பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன.

வைரஸால் ஏற்படக்கூடிய தும்மல், மூக்கடைப்பு போன்றவற்றுக்கு வேப்பம்பட்டைக் கசாயம் பயனுள்ளதாக இருக்கும். வைரஸ் மட்டுமல்லாமல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நுண்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உள்ளது. நுண்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடுகள் இக்கால ஆய்வுகளால் நிரூபணமாகியிருக்கின்றன.
இதனடிப்படையில், வேப்பம்பட்டையில் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். கம்ப்யூட்டர் மாடலிங் (computer modelling) மூலம், வேப்ப மரப்பட்டைச் சாறு SARS-CoV-2 ஸ்பைக் புரதத்துடன் பல்வேறு இடங்களில் பிணைக்கப்பட்டு, மனித செல்களுக்குள் வைரஸ் நுழைவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. அவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளகூடியதாகவும் அமையும் என்பதில் நமக்குப் பெருமையே. ஆனால், இந்த மருந்துகள் மனித பயன்பாட்டுக்கு வருவதற்கு சில காலங்கள் ஆகலாம். இது போன்ற ஆய்வுகள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழத்தில் அதன் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடிய நிலவேம்பு, நொச்சி உள்ளிட்ட பல மூலிகைகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும் தன்மை இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் கோவிட் பரவலின்போது சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருந்ததை நாம் அறிவோம். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவத் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மீட்டுக்கொடுத்தது வரலாற்றுப் பதிவு. இதில், நிலவேம்புக் குடிநீர், கபசுர குடிநீர், பிரம்மானந்த மாத்திரை, வஜ்ரகண்டி மாத்திரை மற்றும் பூர்ணசந்திரோதயம் போன்ற நுட்பமான உயர்ந்த சித்த மருந்துகள் சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தரமான ஆய்வுகளும் நிகழ்ந்தன. அந்த ஆய்வு முடிவுகள் கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவம் சிறந்த தீர்வாக அமைந்ததை உறுதி செய்தன. ஒவ்வொரு முறையும் புதிய கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் நிகழும்போது விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டியதில்லை. பயன்பாட்டில் உள்ள சித்த மருந்துகளை முறையான வழிகாட்டுதல்களின் மூலம் பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். சித்த மருந்துகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு முடிவுகள் மூலம் அறிவிப்பது நம் கடமை என்பதை கோவிட்-19 பெருந்தொற்று உணர்த்தியிருக்கிறது" என்றார்.