Published:Updated:

Doctor Vikatan: டை அடித்தால் சருமம் கறுத்துப்போகுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 38. இளவயதிலேயே தலை நரைக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த 8 வருடங்களாகத் தலைக்கு டை அடிக்கிறேன். திடீரென என் முகம் முழுவதும் ஆங்காங்கே கருமைநிற திட்டுகள் வருகின்றன. டை அடிப்பதால்தான் அப்படி வருகிறது என்றும் டை அடிப்பதை நிறுத்துமாறும் டாக்டர் சொல்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, திடீரென அலர்ஜி வருமா? டை அடிப்பதைத் தவிர்க்க முடியாத நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு சொல்வீர்களா?

- ரஞ்சித் (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``பெரும்பாலான ஹேர் டைகளில் அமோனியா, பெராக்ஸைடு, டோலுயின் 2, 5, பாரா பெனிலின் டயாமின் மற்றும் ரெஸ்கார்சினால் உள்ளிட்ட ஆபத்தான பல ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அவை கலந்த ஹேர் டை உபயோகிக்கும்போது சருமத்தில் எரிச்சல், ஆங்காங்கே கருந்திட்டுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயலிழப்பு, சுவாசக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட பல பாதிப்புகள் வரக்கூடும். டை அலர்ஜி என்பது நீங்கள் உபயோகிக்கத் தொடங்கிய முதல்நாளே வர வேண்டும் என்றில்லை. உங்களுக்கு வந்ததுபோல பல வருடங்கள் கழித்தும் வரலாம். முதல் வேலையாக உங்கள் ஹேர் டை ரசாயனக் கலப்புள்ளதாக இருந்தால் அதை உபயோகிப்பதை நிறுத்துங்கள். கெமிக்கல் கலப்பில்லாத இயற்கையான ஹேர் டை பிராண்டுகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

Doctor Vikatan: நீரிழிவு நோயால் பசியின்மை பிரச்னை வருமா? இதற்கென்ன தீர்வு?

மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றைக் கேட்டறிந்து வாங்கிப் பயன்படுத்துங்கள். மிக முக்கியமாக பிபிடி ஃப்ரீ மற்றும் அமோனியா ஃப்ரீ (PPD free, Ammonia free) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் டையை உபயோகிக்கவும்.

இளவயதிலிருந்தே நரை பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். டையை மாற்றுவது ஒரு புறமிருந்தாலும், நரைக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறிய வேண்டும். வைட்டமின் பற்றாக்குறை இருந்தாலும் கூந்தல் நரைக்கலாம். சரும மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் மேற்கொண்டு அதை உறுதிப்படுத்துங்கள். அவர் உங்களுக்கு கால்சியம் பாந்தோனேட் அடங்கிய வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். அதன் மூலம் நரை பிரச்னை மேலும் தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

Hair dye
Hair dye
Pixabay
Doctor Vikatan: இளம் வயதிலேயே வழுக்கைப் பிரச்னை; தீர்வே கிடையாதா?

டை அலர்ஜியால் உங்களுக்கு சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையைப் போக்க நீங்களாக எந்த சுய மருத்துவமும் செய்யாதீர்கள். ஸ்க்ரப் உபயோகிப்பது, கருமையைப் போக்கும் க்ரீம் உபயோகிப்பது போன்றவற்றை முயல வேண்டாம். க்யூ ஸ்விட்ச்டு என்டி-யாக் லேசர் (Q switched Nd- YAG laser) என்றொரு நவீன சிகிச்சைமுறை உள்ளது. கருந்திட்டுகளைப் போக்கக்கூடியது இது. சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு