Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் தட்டுப்பாடு இருக்கிறதா... கள நிலவரம் என்ன?

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்

ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலை என்ன என்று கேட்டு சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதன் விளைவு, கொத்துக் கொத்தாக மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக கோவிட் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்காக வழங்கப்படும் ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் ஆகியவற்றுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்திலும் தட்டுப்பாடு நிலவுவதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

Covid-19 Outbreak
Covid-19 Outbreak
`ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாடு... அதிகரிக்கும் கொரோனா... பரிதவிக்கும் தமிழகம்!

உண்மை நிலவரம் என்ன என்று தெரிந்துகொள்ள இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் ஜெயலாலிடம் பேசினோம், ``ரெம்டெசிவிரைப் பொறுத்தவரை எல்லா இடங்களிலும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது. தட்டுப்பாடு எனச் சொல்வதைவிட மக்களுடைய தேவை அதிகமாக இருக்கிறது என சொல்வது சரியாக இருக்கும். ஆகையால், கொரோனா பாசிட்டிவ் ஆன எல்லோருக்கும் ரெம்டெசிவிரைப் பயன்படுத்தாமல் தேவை உள்ளோருக்கு மட்டும் கொடுங்கள் எனச் சொல்கிறோம்.

ஆனால், எனக்குத் தெரிந்தவரையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் இல்லை. அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது. அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளனர். எனவே அந்தத் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என நம்புகிறோம். அதேபோல ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்ற மாநிலங்களில் அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் இதுவரை நிலைமை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால், இன்று பல இடங்களிலிருந்து, `ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கிறது உதவிசெய்ய முடியுமா?’ என்று எனக்கு போன் வந்தது.

ஐ.எம்.ஏ தேசியத் தலைவர் 
மருத்துவர் ஜெயலால்
ஐ.எம்.ஏ தேசியத் தலைவர் மருத்துவர் ஜெயலால்

இப்படியான சூழலில், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாம் ஆக்ஸிஜன் வழங்கி வருகிறோம். எனவே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்திருப்பது உண்மைதான். ரெம்டெசிவிர்கூட இல்லாமல் சமாளிக்கலாம் ஆனால், ஆக்ஸிஜன் இல்லாமல் சமாளிக்க முடியாது. அதற்காக வெளிநாடுகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. பல இடங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அதேசமயம் நம் மாநிலத்தின் தேவையையும் கருத்தில்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்ஸிஜனை நிறுத்தி அதனை மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தவிர 50,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. இன்னும் ஒருவாரத்துக்கு இதே நிலை தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம். இதைக் கட்டுக்குள் கொண்டுவர லாக்டெளனும் பெரியளவில் தடுப்பூசி போடுவதும்தான் தீர்வு… முன்கூட்டியே அறிவித்து இரண்டு நாள்கள் லாக்டெளன் கொண்டுவரலாம் என்று பிரதமரிடம் ஆலோசனை கூறியுள்ளோம்.” என்றார்.

ஆக்ஸிஜன் நிலை என்ன?

தமிழ்நாடு ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணனிடம் பேசினோம், ``இப்போது 400 மெட்ரிக் டன் தினமும் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கான வசதி இருக்கிறது. வெளி மாநிலத்திலிருந்து தினம்தோறும் 100 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்துகொண்டிருந்தது. அதைத்தான் பயன்படுத்துகிறோம். அதில் ஒருநாளைக்கு 60 சதவிகிதம் தொழிற்சாலைகளுக்கும் 40 சதவிகிதம் மருத்துவமனைகளுக்கும் சென்றுகொண்டிருந்தது. கடந்த சில நாள்களாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததால் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜன் அளவு 40-லிருந்து 55 முதல் 60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கண்ணன்
ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கண்ணன்

ஆனாலும், கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்ததால் தொழிற்சாலைகளுக்கு அனுப்பக் கூடிய ஆக்ஸிஜனை நிறுத்தச் சொல்லியிருக்கிறது அரசு. ஆகையால் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு மட்டுமே கிடைக்கும். இதன் பலன் இன்றிலிருந்தே (23.4.2021) தெரியவரும். ஆகையால் இப்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நீங்கிவிடும். அதுமட்டுமல்லாது ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டால், அந்த ஆலையில் நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். எனவே நிலைமை சிக்கலாகாமல் சமாளித்துவிடலாம்” என்றார் நம்பிக்கையுடன்.

அரசு மருத்துவமனைகளின் நிலை பற்றி தெரிந்துகொள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவிடம் பேசினோம், ``85 சதவிகித கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அதன் இணைப்பு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். அந்த வகையில் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அதன் இணைப்பு மருத்துவமனைகள் 14 என மொத்தம் 50 மருத்துவமனைகளில் போதுமான அளவு ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திலிருந்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 1000 டோஸ் ரெம்டெசிவிர் விநியோகிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கொள்முதல் யூனிட் உள்ளதாலும், போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் கிடைப்பதாலும் தேவைக்கு அதிகமாகவே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தற்போது அனுமதிக்கப்பட்ட கடைசி நோயாளிக்கும் இரண்டும் கிடைப்பதில் சிக்கல் இருக்காது" என்றார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலை என்ன என்று கேட்டு சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், ``அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கு வசதி கடந்த ஆண்டு 395 மெட்ரிக் டன்னிலிருந்து 888 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து மொத்தம் 1167 மெட்ரிக் டன் அளவுக்கு சேமிக்கும் வசதி உள்ளது. தமிழகத்தில் நாளொன்று சிகிச்சைக்காக 240 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. அதற்குப் போதிய அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. வரும் நாள்களில் தேவை அதிகரிக்கலாம் என்பதற்காக அதனைக் கையாள்வதற்காக தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. கோவிட் சிகிச்சையில் உயிர்காக்கும் மருந்துகளான டோசிலிசுமாப், ரெம்டெசிவிர், எனாக்ஸ்பிரின் போன்ற மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கி தாலுகா மருத்துவமனைகள் வரை விநியோகிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்." என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு