புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், புராஸ்ட்டேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிக அளவில் புற்றுநோய் வருகிறது. மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோயான மார்பகப் புற்றுநோயே பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கியமானது. இருப்பினும், சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இப்போது மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பன்னாட்டு மருந்து தயாரிப்பாளரான ரோச் நிறுவனம் இந்தியாவில் புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஊசி மூலம் இரண்டு மோனோகுளோனல் ஆன்டிபாடிகளை இணைத்து, சிகிச்சை நேரத்தை 90% குறைக்கிறது.
புதிய மருந்தான PHESGO என்பது பெர்ஜெட்டா (pertuzumab), ஹெர்செப்டின் (trastuzumab) மற்றும் ஹைலூரோனிடேஸ் ஆகியவற்றின் கலவை. இந்த மருந்து சிகிச்சை செலவை 20 சதவிகிதம் குறைக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை PHESGO மருந்து மேம்படுத்தும். சிகிச்சைக்கான நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு வசதியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும். நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் குறைவான நேரத்தைச் செலவிட்டாலே போதும்” என்று ரோச் பார்மா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வி சிம்ப்சன் இம்மானுவேல் கூறியுள்ளார்.
இந்த மருந்தின் வரவானது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குக் குறைவான தயாரிப்பு மற்றும் நிர்வாக நேரமே தேவைப்படுகிறது.

PHESGO என்கிற இந்த மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முதன்முதலில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதே கோவிட் தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்த 2020 ஜூன் மாதத்தில்தான். பின்னர் 2020 டிசம்பரில் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) அங்கீகாரம் அளித்தது.
இந்தியாவில் இந்த மருந்துக்கான அங்கீகாரம் அக்டோபர் 2021-ல் கிடைத்தது. ஜனவரி 2022-ல் இறக்குமதி உரிமம் வழங்கப்பட்டது.
உலக அளவில், டிசம்பர் 2021 நிலவரப்படி, 17,000 மார்பகப் புற்றுநோயாளிகள் PHESGO மூலம் பயனடைந்துள்ளனர் என்று ரோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) 2021 அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் உலக அளவில் 23 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6.85 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 78 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இது உலகின் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறிவிட்டது.
அதிக வருமானம் உள்ள நாடுகளில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலம் வாழ்வு நீடிக்கப்படுதல் சாத்தியமாகியிருக்கிறது. அந்த நாடுகளில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மார்பகப் புற்றுநோயுடன் உயிர்வாழ்தல் 90% ஆக இருக்கிறது. இந்தியாவில் இது 66% ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 40% வரையும் உள்ளது.

புற்றுநோய் சிகிச்சையானது மிகவும் செலவுமிக்கது; அதிக நேரத்தை விழுங்கக்கூடியது. நோயாளிகள் பல முறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். மற்றும் நீண்ட சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நடைமுறைகள் நோயாளிகள், அவர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய்க்கான புதிய மருந்தானது மாபெரும் மாற்றத்தை உருவாக்கக்கூடும்.
- சஹானா