Election bannerElection banner
Published:Updated:

COVID19: இந்தியாவை வதைக்கும் இரண்டாம் அலை... மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க முடியுமா?

Corona Pandemic
Corona Pandemic ( Pixabay )

மக்கள் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் மூன்றாம் அலை வருவதைத் தடுக்க முடியும். இஸ்ரேலில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்கள். இனி அங்கு அலை ஏற்படாது.

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பரவிக்கொண்டிருக்கிறது என்று தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். பெருந்தொற்று விஷயத்தில் அலை என்பது என்ன, அலையின் எண்ணிக்கை இரண்டு, மூன்று என்று கணக்கிடப்படுவது எப்படி, அலையின் தீவிரம் குறையுமா எனப் பல சந்தேகங்கள் எழுகின்றன.

இதற்கான பதில்களை அளிக்கிறார் மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்.

COVID-19
COVID-19
AP Photo / Rafiq Maqbool

முதல் அலை, இரண்டாம் அலை என எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

இதை ஒரு கிராஃப் ஆகப் பார்க்கவேண்டும். எக்ஸ் ஆக்ஸிசில் தேதியையும் ஒய் ஆக்ஸிசில் தொற்றின் எண்ணிக்கையும் குறித்து வைத்தால், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு புள்ளி கிடைக்கும். அதனை இணைத்துப் பார்த்தால் ஏற்ற இறக்கத்துடன் அலை போன்ற அமைப்பு கிடைக்கும். பாதிப்பின் தீவிரம் ஓரளவுக்கு சீரான கோட்டில் அமைந்த பிறகு கீழே இறங்கி, மீண்டும் மேலே போனால் அதுதான் இரண்டாம் அலை. சென்ற முறை அதிகபட்சமாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு தொற்று பாதித்தது. ஆனால் தற்போது நான்கு லட்சத்தைத் தொட்டுள்ளது. இன்னும் இரண்டாம் அலையின் உச்சத்திற்குப் போகவில்லை. இப்போதே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கோவிட் பரவலில் மட்டும்தான் முதல் அலை, இரண்டாம் அலை என்பது உண்டா?

100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ஃப்ளூ 1917 முதல் 1919 வரை உலகம் முழுவதும் பரவியது. முதல் உலகப் போருக்குப் பிறகு பரவிய மிகப்பெரிய தொற்று அது. அந்தக் காய்ச்சல் உலகம் முழுவதும் மூன்று அலை வரை பரவியது. முதல் அலையில் முக்கியமான நகரங்களும் இரண்டாம் அலையில் சின்ன சின்ன ஊர்களும் மூன்றாம் அலையில் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. ஸ்பானிஷ் ஃப்ளூ வந்தபோது இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விவரம் உள்ளது. கொரோனாவில் உலக அளவில் பார்க்கும்போது இது நான்காம் அலை. இந்தியாவுக்கு இது இரண்டாம் அலை. தமிழ்நாட்டில் தற்போது இரண்டாம் அலையின் தொடக்கத்தில்தான் உள்ளோம். டெல்லி இரண்டாம் அலையின் உச்சத்துக்குப் போய்விட்டது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Manish Swarup

இந்தியாவில் இரண்டாம் அலையின் தீவிரம் எப்படியிருக்கும்?

இதை அவ்வளவு எளிதாக முன்கூட்டியே கணிக்க முடியாது. நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்துதான் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் விழித்துக்கொண்டு முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் செலுத்தினால், வீழ்ச்சி பெரியளவில் இருக்காது. இல்லையென்றால் பாதிப்பு அதிகம் ஏற்படும். இன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை முன்கூட்டியே கணிக்க முடியாது.

தீவிரத்தைக் கட்டுப்படுத்த என்ன உத்தியைக் உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் தனித்தனியே அறைகளும் இரண்டு கழிப்பறைகளும் இருப்பதில்லை. எனவே சமூக ஏற்பாடு செய்யலாம். கல்லூரி விடுதிகளை கேர் சென்டர்களாக மாற்றலாம். முக்கியமாக நாம் கருத்தில்கொள்ள வேண்டியது, தொற்று உள்ளவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மனதளவிலும் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரளாவில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் முகாம்களை சிறப்பாக நடத்துவதால் நோய்த்தொற்று உள்ளவர்கள் நம்பிக்கையுடன் அங்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். தொற்று உள்ளவர்கள் வீட்டிலேயே இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவும். ஏனென்றால் நமது கட்டமைப்பு அப்படி. வீடுகளில் கொத்துக்கொத்தாகப் பரவும்போது சமூக அளவில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Isolation
Isolation
கோவிட் 19: எப்படி படுத்தால் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்கலாம்? நிபுணரின் விரிவான வழிகாட்டல்!

இந்தியாவில் மூன்றாம் அலைக்கு வாய்ப்புள்ளதா?

நாம் கையாளும் விதத்தைப் பொறுத்துதான் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும். நியூஸிலாந்து, கியூபா போன்ற நாடுகளில் இரண்டாம் அலையே வரவில்லை. தினமும் சில நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தினமும் தொற்று பரவும் அலை கிடையாது. தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம் ஜனவரி, பிப்ரவரியில் இங்கே தொற்றின் பரவல் இருந்தது. ஆனால் அலை என்று நாம் சொல்லவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் குறைவாகவே இருந்தது. அதுபோல அங்கேயும் அந்த எண்ணிக்கை இருக்கும். ஆனால் அலையாக மாறவில்லை. அந்த நாடுகளில் சமூக, அரசியல் அமைப்புகள் பின்பற்றிய முறை சரியாக இருந்தது. தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி ஒரு கட்டுக்குள் வைத்திருந்தனர். எனவே நாமும் இரண்டாம் அலையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்டுக்குள் வைத்தால் மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்கலாம்.

முதன்முதலில் கோவிட் பரவிய சீனாவில் இரண்டாம் அலை ஏற்பட்டதா?

முதல் அலையின்போதே சீனா தீவிரமாகச் செயல்பட்டு தற்காத்துக் கொண்டது. எனவே சீனாவில் இரண்டாம் அலை வரவில்லை. கியூபா, வியட்நாம், நியூஸிலாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வரவில்லை.

Covid-19 Outbreak
Covid-19 Outbreak
COVID19: இரண்டு மாஸ்க் அணிவது அவசியமான ஒன்றா? - விளக்கும் மருத்துவர்

இந்தியாவில் 3-ம் அலை வரக்கூடும் என்பதால் தடுப்பூசியின் 2-வது டோஸைத் தள்ளிப் போட வேண்டும் என்று கருத்து உள்ளதே?

அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. மக்கள் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் மூன்றாம் அலை வருவதைத் தடுக்க முடியும். இஸ்ரேலில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்கள். இனி அங்கு அலை ஏற்படாது. சிறிய சலனம்தான் இருக்கும். இங்கிலாந்திலும் ஓரளவிற்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் அங்கேயும் வர வாய்ப்பில்லை. எனவே நாம் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அடுத்த அலையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு