Published:Updated:

கெஜ்ரிவாலின் `சிங்கப்பூர் ட்வீட்': மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா?

Arvind Kejriwal
Arvind Kejriwal ( Photo: Twitter / ArvindKejriwal )

இந்த சர்ச்சை தொடர்பாக மருத்துவ ரீதியான விளக்கத்தை, சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

``சிங்கப்பூரில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த அந்த B1617.2 என்கிற கொரோனா வைரஸ் இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதோடு, குழந்தைகளை மோசமாகத் தாக்கவும் வாய்ப்புள்ளாது. எனவே, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவையை ரத்து செய்ய வேண்டும்" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விபியன் பாலகிருஷ்ணன், ``அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் பேச வேண்டும். சிங்கப்பூரில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என்று எதுவும் இல்லை" என்று ட்வீட் செய்திருக்கிறார். மேலும், தற்போது பரவி வரும் உருமாறிய B1617.2 வைரஸானது, இந்தியாவில் கண்டறியப்பட்டது, பிறகு சிங்கப்பூரில் பரவியது என்பது குறித்த பதிவையும் இணைத்துள்ளார்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

இதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்‌ஷி, ``இது குறித்து இந்திய அரசிடம் எடுத்துரைத்து இருக்கிறோம். சர்வதேச விதிகள்படி முதலமைச்சருக்கு கொரோனா நோய்ப்பரவல் பற்றி பேச அதிகாரம் கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவாலின் அக்கருத்து இந்திய அரசின் குரல் அல்ல" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த சர்ச்சை தொடர்பாக மருத்துவ ரீதியான விளக்கத்தை, சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

``அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கும் B1617.2 கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உருமாற்றம் அடைந்தது. ஒரு வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறதோ அதன்படி அதன் உருமாற்றமும் நிகழும். இந்தியா, பிரேசில், கலிஃபோர்னியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகெங்கிலும் பரவி வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட B1617.2 கொரோனா வைரஸை எந்த அடிப்படையில் சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்தது என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. அது சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த வைரஸ் என்பதற்கு எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லாத நிலையில் இது முற்றிலும் தவறான கருத்து.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand
``கொரோனா சிகிச்சையை நிறுத்தச் சொல்லி மிரட்டுறாங்க!” - முன்னாள் தலைமைச் செயலாளர் மீது பகீர் புகார்

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த B1617.2 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதை அடுத்து, இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 112 நாள்களிலிருந்து குறைப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. உண்மையில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றவர்கள் மூலம்தான் சிங்கப்பூரில் இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும். இது உலகம் முழுவதுமே மிக வேகமாகப் பரவி வருகிறது. அப்படியிருக்க அதைத் தலைகீழாகச் சொல்வது ஏற்புடையதல்ல” என்கிறார்.

``இந்தியாவில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருக்கிறதா? அப்படியிருக்கும் நிலையில் குழந்தைகளை அது அதிக அளவில் பாதிக்குமா?'' என்று மருத்துவரிடம் கேட்டதற்கு, ``மூன்றாவது அலை உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதில் குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தியாவில் முதல் அலையைப் பொறுத்தவரை 90% பேர் கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்தனர். மீதம் 10% பேரில் 7% பேர் மிதமான கொரோனா நோயாளிகளாகவும், 3% பேர் தீவிர கொரோனா நோயாளிகளாகவும் இருந்தனர்.

இதுவே இரண்டாம் அலையில், கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 80% ஆகக் குறைந்திருக்கிறது. மேலும் மிதமான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17% ஆக உயர்ந்திருக்கிறது. இச்சூழலில் கடந்த அலையைவிட இந்த அலையில் அதிகம் பேருக்கு அறிகுறிகள் தெரிவதனால் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவேதான் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது கணக்கில் வர ஆரம்பித்திருக்கிறது.

மூன்றாவது அலையில் முதியவர்கள், நடுத்தர வயதினரைப்போல குழந்தைகளும் கணிசமான அளவில் பாதிப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், குழந்தைகள் மோசமான அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதில் அறிவியல் உண்மை இல்லை.

டாக்டர் 
ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

கெஜ்ரிவால் சொல்வது மருத்துவ ரீதியாக ஏற்புடையதல்ல என்றாலும் அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் மாஸ்க் தொடங்கி ஐ.சி.யு வரை எல்லாமே வேறானது. அப்படியிருக்க வருமுன் அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. கடந்த ஏப்ரல் மாதமே மும்பையில் 12,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவர்களில் பத்தில் ஒரு குழந்தைக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது குறிப்பிட வேண்டியது. இந்நிலை மோசமடையும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகளை வளப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

இந்தியாவை அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற எந்த வளர்ந்த நாடுகளுடனும் ஒப்பிட முடியாது. மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டுக்கும் அவற்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசு மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர பெரும் அச்சத்துக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை" என்கிறார் ஃபரூக் அப்துல்லா.

அடுத்த கட்டுரைக்கு