Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் யூரினரி இன்ஃபெக்ஷன்; தாம்பத்ய உறவுதான் காரணமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 35. திருமணத்துக்கு முன்பு எனக்கு ஒருமுறைகூட யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததில்லை. திருமணமான பிறகு மாதம் ஒருமுறை இன்ஃபெக்ஷனால் அவதிப்படுகிறேன். கணவருக்கு நீரிழிவு இருக்கிறது. அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். அது உண்மையா? வேலைக்குச் செல்லும் எனக்கு அடிக்கடி இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. நிரந்தர தீர்வு சொல்வீர்களா?

- அம்பிகா (விகடன் இணையட்திலிருந்து)

 மருத்துவர் நிவேதிதா
மருத்துவர் நிவேதிதா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

``யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்ப்பாதைத் தொற்று இந்த வயதுப் பெண்களிடம் இப்போது மிகவும் பரவலாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தொற்று ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று தாம்பத்திய உறவு. உங்கள் கணவருக்கு நீரிழிவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீரிழிவு இருப்பவர்கள் இதுபோன்ற இன்ஃபெக்ஷன்களுக்கு எளிதில் இலக்காவார்கள். ஆனால், அவர்களுக்கு இன்ஃபெக்ஷன் இருப்பதை உணரவே பல நாள்கள் ஆகும். அறிகுறிகள் ஏதுமில்லை என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்துக்கொள்வார்கள். எனவே, உங்கள் கணவருக்கு நீரிழிவு இருப்பதால் நீங்கள் அவருக்கும் சேர்த்தே யூரின் ரொட்டீன் மற்றும் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்ப்பது அவசியம். ஒருவேளை அதில் இருவருக்குமோ, ஒருவருக்கு மட்டுமோ பிரச்னை இருப்பது உறுதியானால் அதற்கேற்ப சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற நீரிழிவும் இதற்கு ஒரு காரணம் என்பதால் உங்கள் கணவரின் ரத்தச் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதியுங்கள்.

நீங்கள் வேலைக்குச் செல்வதால் அங்குள்ள கழிவறை சுகாதாரமும் கவனிக்கப்பட வேண்டும். சுத்தமாக இல்லாத நிலையில் அதைப் பயன்படுத்தினாலும் அல்லது அது சுத்தமில்லாத காரணத்தால் நீங்கள் கழிவறை உபயோகிப்பதைத் தவிர்த்து சிறுநீரை நீண்ட நேரம் அடக்கினாலும்கூட உங்களுக்கு அடிக்கடி இந்தத் தொற்று வரலாம்.

Doctor Vikatan: மாதம்தோறும் அதிக ப்ளீடிங்; கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வா?

வெள்ளைப் போக்கு அதிகமிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்னைக்கும் யூரினரி இன்ஃபெக்ஷனுக்கும்கூட நெருங்கிய தொடர்புண்டு. சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மலச்சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியை மருத்துவர்கள் தவறாமல் கேட்பார்கள்.

காரணத்தைக் கண்டறிந்தால் தீர்வும் எளிதாகும். சரியான நேரத்துக்கு சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க பயந்துகொண்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதும் தவறு. கழிவறை சுகாதாரத்தைப் பின்பற்றுவது, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை அவசியம்.

சிறுநீர்ப்பாதைத் தொற்று பாதிப்புக்கு க்ரான்பெர்ரி பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரையைப் பரிந்துரைப்பதுண்டு. க்ரான்பெர்ரி ஜூஸுக்கு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, வாய்ப்பு இருப்பவர்கள் க்ரான்பெர்ரி பழமோ, ஜூஸோ கிடைத்தால் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Sora Shimazaki from Pexels
Doctor Vikatan: குழந்தை பெற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகும் வடியாத வயிறு; குறைக்க வழிகள் உண்டா?

குழந்தைக்கான திட்டமில்லை என்பவர்கள், தாம்பத்திய உறவுக்கு முன்பும், உறவு முடிந்த உடனேயும் சிறுநீரை வெளியேற்றி விடுவது பாதுகாப்பானது. சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதாலும் யூரினரி இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பு உண்டு. அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாத நிலையில், மனைவிக்கு சிறுநீர்ப்பாதை தொற்று வராமலிருக்க கணவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவான அறிவுரை ஒன்றைச் சொல்வதுண்டு. மூன்று நாள்களுக்கொரு முறை சுயமாக விந்தணுக்களை வெளியேற்றச் சொல்வோம். நீண்டநாள்கள் தேங்கியிருக்கும் நிலையில் தாம்பத்திய உறவில் விந்தணுக்களை வெளியேற்றும்போது அதன் காரணமாகவும் மனைவிக்கு சிறுநீர்ப்பாதை தொற்று வரக்கூடும் என்பதே காரணம்.

எனவே, அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷனை எதிர்கொள்கிற பெண்கள் அது தனக்கு மட்டுமேயான பிரச்னை என நினைக்காமல், கணவரின் பிரச்னையாகவும் இருக்கலாம் என்று யோசித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு