Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசிக்கே கட்டுப்படாத வைரஸ், மாஸ்க் அணிவதால் மட்டும் நெருங்காமலிருக்குமா?

A man with mask (representational image) ( Image by Julián Amé from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: தடுப்பூசிக்கே கட்டுப்படாத வைரஸ், மாஸ்க் அணிவதால் மட்டும் நெருங்காமலிருக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
A man with mask (representational image) ( Image by Julián Amé from Pixabay )

கொரோனா பரவ ஆரம்பித்தபோது தொட்டால் பரவும் என்று தினமும் எல்லாவற்றையும் சானிட்டைஸ் செய்யப் பழகினோம். இப்போது அது தேவையில்லை என்கிறார்கள். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுகிறது. தடுப்பூசிக்கே கட்டுப்படாத வைரஸ், மாஸ்க் அணிவதால் மட்டும் நெருங்காமலிருக்குமா?

- ரமணா (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து விழாக்காலத்தை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். மக்கள் ஒன்றுகூடும்படியான நிகழ்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுப்பரவலும் அதிகரித்து வருகிறது. தட்டம்மை வைரஸை போலவே இந்த வைரஸும் எளிதாக, வேகமாகக் காற்றின் மூலம் பரவுகிறது என்று தெரிய வந்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸை அடுத்து புத்தாண்டுக் கொண்டாட்டம் விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்நிலையில் அவர்கள் வலியுறுத்துவது சரியான மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியத்தை. அதாவது, டபுள் லேயர்டு மாஸ்க்கை முறையாக அணிவதோடு, இரண்டு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.

இந்த இரண்டையும் செய்தால்தான் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். கோவிட் பரவ ஆரம்பித்த புதிதில் அது எச்சில் மற்றும் சுவாச நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் என்று நம்பப்பட்டது.

இப்போது அது காற்றின் மூலம் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்றுள்ள ஒரு நபர், ஓரிடத்திலிருந்து நகர்ந்த பிறகும் சில மணி நேரத்துக்கு அந்த இடத்தில் காற்றில் வைரஸ் தொற்று இருக்கும், அது மற்றவர்களுக்கும் தொற்றும் என்பது அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது. காற்றின் மூலம் பரவும் தொற்று என்பதால் அடிக்கடி கைகளைக் கழுவவதும், இடங்களைச் சுத்தப்படுத்துவதும் தொற்றிலிருந்து காக்கும் உறுதியான வழிமுறைகள் இல்லை என்றும் புரிகிறது. எனவே, தொற்று ஏற்படாமல் தடுக்க முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தடுப்பூசி போட்டுக்கொள்வதும் மட்டுமே உறுதியான தீர்வுகள் என்று தெரிய வந்திருக்கிறது.

COVID-19 patient/ Representation Image
COVID-19 patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பதால் தடுப்பூசிகளால் தொற்றுக்கு எதிரான 100 சதவிகித பாதுகாப்பைத் தர முடியுமா என்றால் இல்லை. தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதிலிருந்து மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியால் ஏற்பட்ட எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கும். சாதாரண வைரஸ் தொற்றுக்கெதிரான ஆற்றலே குறையும் என்ற நிலையில், ஒமிக்ரான் போன்ற உருமாறிய வைரஸுக்கு எதிரான ஆற்றல் நிச்சயம் குறையும். அதே நேரம், தடுப்பூசியால் ஏற்பட்ட ஆற்றல் முற்றிலும் போய்விடுமா என்றால் இல்லை. எனவே இதுவரை தடுப்பூசியே போடாதவர்கள் இனியும் தாமதிக்காமல் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸையும் போட்டுக்கொள்ள வேண்டும். மிகவிரைவில் நமக்கும் மூன்றாவது தவணை பூஸ்டர் டோஸ் அனுமதிக்கப்படும்.

தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகே அதன் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இந்நிலையில் நமக்கு உறுதியாகத் தெரிந்த பாதுகாப்பு என்றால் மாஸ்க் அணிவது. சரியான மாஸ்க்கை முறையாகவும் முழுநேரமும் அணிய வேண்டியது மிக முக்கியம். மாஸ்க் அணிவதில் பெரும்பாலானோருக்கும் ஒருவித அலட்சியம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது.

எது சரியான மாஸ்க், அதைச் சரியாக அணிவது எப்படி என்பதை விளக்கும் வீடியோக்களும் செய்திகளும் உலகசுகாதார நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றன. மூக்கையும் வாயையும் மூடியபடி மாஸ்க் அணிய வேண்டும். பேசும்போது மாஸ்க்கை இறக்குவது தவறு. வீட்டில் வயதானவர்கள், அதிக ரிஸ்க் பிரிவில் உள்ளோர், குழந்தைகள் இருந்தால், உடனிருப்போர் வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் அணிவது பாதுகாப்பானது. ஹோட்டல், திருமண மண்டபம், குளிரூட்டப்பட்ட இடங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இடங்களிலும் மாஸ்க் மட்டுமே பாதுகாப்பளிக்கும்.

Indians wearing face masks
Indians wearing face masks
AP Photo/Channi Anand

தேவைப்பட்டால் என்95 மாஸ்க் அணியலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். அந்த இடத்தில் இருக்கும் நேரம்வரை இதை மறக்கக் கூடாது. நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் எளிய வழியும் இதுதான். இதன் மூலம் நமக்கும் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவாமலும் காக்க முடியும். எனவே, எக்காரணம் கொண்டும் மாஸ்க் அணிவதை நிறுத்திவிடாதீர்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?