Published:Updated:

நம்புங்க நானும் உடற்பயிற்சி செய்கிறேன்! - வாசகியின் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

சமீபத்தில், என் டைரியில் குறித்து வைக்க வேண்டிய அந்த நாள் வந்தது. மகளுடன் விளையாட மொட்டை மாடி போனபோது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் மகள் என்னைப் பார்த்து 'எனக்கு ஒரு தொப்பைதான் இருக்கு, உனக்கு மட்டும் ஏம்மா ரெண்டு தொப்பை இருக்கு' - என்று கேட்டபோதுகூட நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. கணவர் கிண்டலடிக்கும்போதும் லைட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். (என் பெருந்தன்மைய இதிலிருந்து நீங்க தெரிஞ்சிக்கலாம்).

Representational Image
Representational Image

ஆனால் சமீபத்தில், என் டைரியில் குறித்து வைக்க வேண்டிய அந்த நாள் வந்தது. மகளுடன் விளையாட மொட்டை மாடி போனபோது, அடுத்த தெருவில் வசிக்கும் வயதான பெண்மணி (அடிக்கடி மொட்டை மாடியில் பார்த்து சிநேகம்), 'எத்தனை மாசம்மா ஆகுது' என்று கேட்ட அந்த நொடி முடிவு செய்தேன், இனிமேல் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் செய்தே ஆக வேண்டும் என்று.

நான் உடற்பயிற்சி செய்தேனா, இல்லையா என்பதைவிட நான் குண்டாவதற்குக் காரணம் யார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் கொஞ்சம் குண்டாக இருப்பதற்கு நான் காரணமே இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள்தான் காரணம். எப்படி என்று தெரிந்துகொள்ள மேலே (கீழே?) படியுங்கள்.

Representational Image
Representational Image

நான், கணவர் மற்றும் ஒரு மகள் அடங்கிய கூட்டுக் குடும்பம் எங்களுடையது. அதனால் வீட்டு வேலைக்கே நேரம் சரியாக இருக்கும். என் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட கணவர், மதிய சாப்பாட்டை வெளியில் பார்த்துக்கொள்வார் (இதுக்கும், என் சமையலின் கைவண்ணத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்லங்க).

வேலை அதிகம் என்பதால், வீட்டு வேலையில் உதவ ஒரு maid இருக்கிறார்கள். என் வீட்டில் ஒருவர் என்றே அவரை சொல்லுவேன். அவர்கள் என்னை ஒரு வேலைக்கூட செய்ய விடமாட்டார்கள். துடைப்பது, துவைப்பது, கழுவுவது என எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுவார். இரண்டு, மூன்று குழந்தைகளைக்கூட ஈசியாக வளர்த்துவிடலாம். ஆனால், ஒரு குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். அதனால் மேலே சொன்ன maidடே, சாயங்காலம் இரண்டு மணி நேரம் மகளைப் பார்த்துக்கொள்ள வந்துவிடுவார்கள்.

Representational Image
Representational Image

நான் இப்படி நாள் முழுக்க கஷ்டப்படுகிறேன் என்று என் மகள், அவள் பங்குக்கு, அவளுக்காகச் செய்த, high-fatty-foodsஐ, அவள் சாப்பிடாமல், எனக்காக விட்டுக் கொடுத்திடுவாள்.

இப்படி அனைவரும் எனக்காகப் பரிவாக இருக்கும்போது, அந்த சந்தோஷத்தில்தான் எனக்கு வெயிட் போடுகிறதென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

அப்படியும் சில நேரம் வாக்கிங் போகலாம் என்று முடிவெடுப்பேன். அப்போதெல்லாம் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்டாகும். அந்த நேரத்தை வீணடிக்காமல், வீட்டுக்குள்ளேயோ, மொட்டை மாடியிலோ வாக்கிங் செய்வேன். ஆனால், என் மகளும் என்கூடவே வேகமாக நடப்பாள். அவளே எலும்பும் தோலுமாக இருப்பாள், இன்னும் நடந்து, அதனால் இன்னும் ஒல்லி ஆகிவிட்டாள் என்றால்? (எப்படியெல்லாம் யோசிக்கிறேன் பாருங்க!) ஐயோடா! வேணவே வேண்டாம் என்று நான் நடப்பதையே நிறுத்திவிட்டேன்.

Representational Image
Representational Image

எனக்கு நேரத்தை வீணடிக்கப் பிடிக்காது. எதற்காக உடற்பயிற்சிக்கென்று நேரத்தை செலவு செய்ய வேண்டும், அதுவும் வீட்டு வேலையே எக்ஸர்சைஸாக இருக்கும்போது?

* காலையில் எழுந்துகொள்ளும்போதே, அலாரத்தை (தலகாணிக்குக் கொஞ்சம் மேலேயே வெச்சாலும், எப்படியோ அது தானா நகர்ந்து தூரப் போய்டுது.), படுத்தபடியே கையால் துழாவி, தேடி கண்டுப்பிடித்து நிறுத்துகிறேன். - இது தோள்களுக்குப் பயிற்சி.

* அப்பா, மகள் இரண்டு பேரும் குனிய மாட்டார்கள். எதையாவது கீழே போட்டு எடுத்து கொடுக்கச் சொல்லுவார்கள். - இது இடுப்புக்குப் பயிற்சி.

Representational Image
Representational Image

* மகள் பின்னால் pediasure எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். - இது காலுக்குப் பயிற்சி

* மகளை கீழே உட்கார்ந்து சாப்பிட வைக்க வேண்டும், வீட்டுப் பாடம் செய்ய வைக்க வேண்டும் - இது முதுகெலும்புக்குப் பயிற்சி.

Representational Image
Representational Image

இப்படி வீட்டு வேலையையே(?!) எக்ஸர்சைஸ்தானே, தனியாக எதற்காகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

என்ன, என்னோட முடிவு சரிதானே?

- சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு