Published:Updated:

சர்க்கரை நோய்... குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #WorldDiabetesDay

சர்க்கரைநோய்... ஆண்கள், பெண்கள், குடும்பம் தெளிவுபெறவேண்டிய 10 விஷயங்கள்...

உலக சர்க்கரை நோய் தினம்

1980-ம் ஆண்டில் 10.8 கோடியாக இருந்த பாதிப்பு, 2014-ம் ஆண்டில் 42.2 கோடியாக அதிகரித்தது. நாம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சில லட்சமோ கோடியோ அதிகரித்திருக்கும். சர்க்கரை நோயைப் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் இவை. இந்த நோயால் மட்டும் 2016-ம் ஆண்டில் 10,60,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

உலக அளவில் உயிரிழப்புகளுக்கான 7-வது முக்கியக் காரணமாக சர்க்கரை நோய் இருக்கிறது. இந்தியாவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்க்கரை நோய் என்பது உடலின் ஏதோ ஒரு பகுதியை மட்டும் பாதிப்பது கிடையாது. பல்வேறு வகையான நோய்களுக்கான வாசலாக அது இருக்கிறது. மேலும், ஒருவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டால், அவரது பரம்பரையே சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. அதனால்தான் மொத்த மருத்துவ உலகமும் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

அஷ்வின் கருப்பன்
அதன் ஒருபகுதியாக, ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.
சர்க்கரை நோயும் குடும்பமும்!
2019-ம் ஆண்டு, சர்க்கரை நோய் தினத்துக்கான கருத்துரு `சர்க்கரைநோயும் குடும்பமும்' என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக்கொண்டு சர்க்கரை நோயாளிகளின் குடும்பத்தினருக்காக, முக்கியமான 10 ஆலோசனைகளை அளிக்கிறார், சர்க்கரைநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

1
சர்க்கரை நோயும் குடும்பமும்

அப்பா - மகன், அம்மா - மகள்!

பெற்றோரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு நோய் தாக்குவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் உள்ளது. பெற்றோரில் இருவருக்கும் சர்க்கரைநோய் இருந்தால், குழந்தைகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதமாக அதிகரிக்கும். குறிப்பாக, அப்பாவுக்கு சர்க்கரைநோய் இருந்தால் மகனுக்கும், அம்மாவுக்கு இருந்தால் மகளுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2
சர்க்கரை நோய்

மனஅழுத்தம் அலர்ட்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த ஆதரவை அளிக்க வேண்டும். குறிப்பாக, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் வீட்டிலுள்ளவர்கள் பாசிட்டிவாகப் பேசி, அவர்களின் எதிர்மறை சிந்தனைகளைப் போக்க வேண்டும்.

3
சர்க்கரை

கட்டுப்பாடு மிக கவனம்!

வீட்டில் சர்க்கரை நோயாளிகள் இருந்தால், அவர்களின் சாப்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றில் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கேக் வெட்டும்போது, சர்க்கரை நோயாளிகளிடம், 'பரவாயில்லை... இன்னைக்கு ஒருநாள் கேக் சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாது!' என்பது போல பேசி, அவர்களின் கட்டுப்பாட்டைத் தகர்க்கக்கூடாது. அவர்கள், நோயை நிர்வகிக்கப் போதுமான ஆதரவை அளிக்க வேண்டும்.

4
சர்க்கரை நோய்

பழக்கவழக்கம் டு அன்றாட செயல்!

பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால், குழந்தைகளைச் சிறிய வயது முதலே ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றுக்குப் பழக்க வேண்டும். இதுபோன்ற பழக்கவழக்கங்களைப் பல் துலக்குவது, குளிப்பது போன்ற அவர்களின் அன்றாடச் செயல்களாக மாற்றிவிட வேண்டும். அப்போதுதான் அவற்றை இயல்பாகச் செய்யவும், தவறாமல் செய்யவும் குழந்தைகள் பழகுவார்கள். இத்தகைய பழக்கங்களை வழக்கமாக்கும்போது, 25 வயதில் சர்க்கரை நோய் பாதிக்கும் வாய்ப்பு இருந்தால், அதை 50 வயதுக்கு தள்ளிப்போட முடியும். சிலருக்கு வராமல் தடுக்கவும் முடியும்.

5
சர்க்கரை நோய்

பெண்களுக்கே அதிகம்!

பிரசவத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றம், மெனோபாஸ் நிலையை அடைந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் உடல்பருமன் ஆகியவற்றால், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக அளவில் சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக, கர்ப்ப கால சர்க்கரைநோய் (Gestational Diabetes) பத்து பெண்களில் மூன்று நான்கு பேரைப் பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 - 7 கிலோ எடை அதிகரிப்பது சாதாரணமானது. அதற்கு மேல் எடை அதிகரித்தால், அவை தேவையற்ற கொழுப்புதான்.

6
ஆண்

ஆண்களுக்கு மது, புகையே எதிரி!

டைப் 3 சர்க்கரை நோய் எதுவென்று தெரியுமா? முதியவர்களுக்கு ஓர் அலர்ட்! #InternationalAlzheimersDay

ஆண்களைப் பொறுத்தவரை, ஹார்மோன் மாற்றங்கள் பெரிய அளவில் நடைபெறுவதில்லை. குடும்பப் பின்னணி, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இவைதான் சர்க்கரை நோய் பாதிப்பதற்கான முக்கியக் காரணமாக உள்ளது.

7
குழந்தையின்மை

குழந்தையின்மை எச்சரிக்கை!

சர்க்கரை நோய் குழந்தையின்மை பிரச்னைக்கும் வழிவகுக்கும். எனவே, சிறுவயதிலேயே சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள், டைப் 1 சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால், திருமணத்துக்குப் பிறகு ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு கருச்சிதைவு போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

8
மனஅழுத்தம்

மனஅழுத்தமும் காரணம்!

மனஅழுத்தமும் சர்க்கரை நோய் பாதிப்பதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை, அலுவலகத்தில் இரவு நேர ஷிஃப்ட்டில் பணியாற்றுவது, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டு, வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது, தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதற்கு வழிவகுத்து உடல்பருமனை உண்டாக்குகிறது. உடல்பருமன், சர்க்கரை நோயை வரவழைக்கும்.

9
சர்க்கரைநோய்

18 வயது முதலே பரிசோதனை!

சர்க்கரை நோய் பாதிப்புள்ள குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும் நபருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால், 18 வயது முதலே அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அதுபோன்றவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறையும், அறிகுறிகள் தென்படவில்லை என்றால் 20 வயதுக்கு மேல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கட்டாயம் ரத்தப் பரிசோதனை செய்து சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். குடும்பப் பின்னணி இல்லாதவர்களும் 20 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

10
சர்க்கரை நோய்

ஆண்டுக்கொருமுறை பரிசோதனை அவசியம்!

உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்... நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

குடும்பப் பின்னணி இருப்பவர்கள், ஓராண்டுக்கு ஒருமுறை Glucose Tolerance Test என்ற பரிசோதனையைச் செய்ய வேண்டும். முதலில், வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். அதற்குப் பிறகு, அந்த நபருக்கு 75 கிராம் அல்லது 100 கிராம் இனிப்புக் கரைசல் சாப்பிட கொடுக்கப்படும். அதன்பிறகு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இடைவெளியில் பரிசோதனைகள் செய்யப்படும். இதன்மூலம் சர்க்கரை நோய் பாதிப்பதற்கு முந்தைய நிலையிலேயே அதைக் கண்டறிந்து, வராமல் தடுக்க முடியும்.