Published:Updated:

``எங்ககிட்ட இதை மட்டும் செய்யாதீங்க...'' - புற்றுநோயிலிருந்து மீண்டவரின் கோரிக்கை #WorldRoseDay

Breast Cancer Survivor
Breast Cancer Survivor

இந்த நாள் விழிப்புணர்வுக்கு மட்டுமல்ல... புற்றுநோயைத் தடுப்பதற்கும்தான்!

கனடாவைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமி மெலிண்டா ரோஸ். ரத்தப் புற்றுநோய்களிலேயே அரிய வகையான அஸ்கின்ஸ் ட்யூமரால் (Askin’s Tumour) பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவத்தின் உதவியுடன், இரண்டு வாரங்களே இவரைக் காப்பாற்ற முடியும் எனக் கூறியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால், குடும்பத்தினரின் அன்பின் காரணமாக ஏறத்தாழ ஆறு மாதங்கள்வரை உயிருடன் இருந்தாள் சிறுமி மெலிண்டா.

World Rose Day
World Rose Day

இடைப்பட்ட காலத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைப்போன்ற மற்ற நோயாளிகளுக்கு `நோயிலிருந்து மீண்டுவிடுவோம்' என்ற நம்பிக்கை விதையைத் தந்துள்ளார் மெலிண்டா. சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப நபர்கள், நோயாளியை உடனிருந்து பார்த்துக்கொள்ளும் பராமரிப்பவர்கள் (Care Givers) என அனைவரையுமே சந்தித்து, அவர்களுக்கும் நம்பிக்கை வார்த்தைகள் தந்துள்ளார்.

எந்தவொரு நோயாளிக்குமே, உடல்நலனைவிட மனநலன்தான் மிகமிக அவசியமானது. சாதாரண காய்ச்சல், பல் வலி தொடங்கி புற்றுநோய் வரையில் அனைத்து நோய்களுக்குமே இது பொருந்தும். ஏராளமான மருத்துகள், மாத்திரைகள், மருத்துவ வழிமுறைகள் வந்துவிட்ட போதிலும் மனதளவிலான நம்பிக்கைதான் ஒரு புற்றுநோயாளியை முழுவதுமாக குணப்படுத்தும் என்கின்றனர் புற்றுநோயியல் மருத்துவர்கள்.

Breast Cancer
Breast Cancer
Vikatan

இதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக, மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த காஸ்ட்யூம் டிசைனர் சகுந்தலா ராஜசேகரனிடம், அவர் சிகிச்சையிலிருந்த காலத்தில் அவருடன் துணையாய் இருந்து அவரை மீட்டவர்கள் குறித்தும் கேட்டோம். பிரபல திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரனின் மனைவிதான் சகுந்தலா.

"எந்தவொரு நோய்க்குமே, மருந்து மாத்திரைகளெல்லாம் ஐம்பது சதவிகிதம்தான் ஈடுகொடுக்கும். மீதம் ஐம்பது சதவிகிதம், பராமரிப்பவர்களைச் சார்ந்துதான் அமையும். ஒருவர் எவ்வளவு கனிவாக, எவ்வளவு நேர்த்தியாக ஒரு நோயாளியை கவனித்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான், மீண்டுவருதல் அமையும். அந்த வகையில என்னை முறையாகப் பராமரித்து, முழுமையாக மீட்டெடுத்ததில் என் குடும்பத்துக்குப் பெரும்பங்கு உள்ளது.

Breast Cancer Survivor
Breast Cancer Survivor

எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள். அந்த ரெண்டு பேர்தான், எனக்குள்ள இருந்த இந்த வலிமையை எனக்கே உணரவச்சவங்க. மார்பகப்புற்றுநோயிலிருந்து நான் மீண்டு, இந்த வருஷத்தோட வருடங்கள் ஆகுது. பாதிப்பு வந்தப்போ, என் பெரிய பொண்ணு சிந்து, வெளிநாட்டுல படிச்சுட்டு இருந்தா. சின்னவளான நந்திதா, இன்ஜினீயரிங் படிச்சிட்டிருந்தா. சின்னவதான் அதிக நேரம் கூடவே இருக்க வேண்டிய சூழல். பொதுவாவே அம்மாக்கு ஒண்ணுன்னா, பிள்ளைங்களெல்லாம் பதற்றமாகிடுவாங்க. அதுக்கு நந்திதாவும் விதிவிலக்கில்ல. ஆனாலும், தன்னுடைய பதற்றத்தையும் பயத்தையும் வெளியில காட்டிக்கல அவ. காரணம் அவ கஷ்டப்பட்டா, நான் பலவீனமாகிடுவேன்னு நினைச்சுருக்கா. அது சரிதான்னுதான் நானும் நினைக்கிறேன்!

இங்க இருக்க ஒவ்வொரு நோயாளியும், தங்களுடைய வாழ்க்கையோட மிகக் கஷ்டமான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டுட்டு இருக்காங்க!
காஸ்ட்யூம் டிசைனர் சகுந்தலா ராஜசேகரன்

எப்பவும் கூடவே இருப்பதால, நந்திதா கலகலப்பா மட்டும்தான் பேசுவா. அவ பேசப்பேச, எனக்கு மனசெல்லாம் லேசாகிடும். எந்தளவுக்குன்னா... ஒரு மொட்டு பூவா மலர்ந்து போற அளவுக்கு! கீமோதெரபி சிகிச்சைக்கு உட்பட்டபோது ஏற்படற அவ்வளவு பெரிய வலியும், நந்திதா கூட பேசுற அந்த நொடியில காணாமப் போயிடும். எந்தவொரு நோயாளிக்கும், சம்பந்தப்பட்ட பிரச்னையில இருந்து அவங்க மீண்டு வரதுக்கு இப்படியான ஒரு பராமரிப்பாளர் அவங்க கூடவே இருக்கணும்" என்கிறார் அவர்.

Sakundhala Rajendran - Daughters
Sakundhala Rajendran - Daughters

மேலும் பேசியவர், "பெரும்பாலான நேரத்தில், பராமரிப்பவர்கள் சரியா இருப்பாங்க. அதாவது, எந்தச் சூழலிலும் நாம துவண்டு போயிடக் கூடாதுனு நினைப்பாங்க. அதனால, ஒவ்வொரு வார்த்தையிலயும் கவனமா இருப்பாங்க.

ஆனா, நலம் விசாரிக்க வர்ற மக்கள் அப்படியிருக்கமாட்டாங்க.

`என்னங்க இப்படி ஆகிடுச்சே!'

`உங்களுக்கா இப்படி ஆகணும்!'

`நல்லாதானே இருந்தீங்க... என்னாச்சு? எப்படியாச்சு?'

- இப்படியெல்லாம் கேட்டு மனசை நோகடிப்பாங்க. எனக்கும் அப்படியெல்லாம் நடந்திருக்கு. இப்படியானவங்களுக்கெல்லாம் நான் சொல்ல ஆசப்படற விஷயம் ஒண்ணுதான். அது, `நீங்க நலம் விசாரிக்காம இருந்தாலும் பரவாயில்ல. ஆனா, எதிர்ல உள்ளவங்க மனசை நோகடிச்சுடாதீங்க. இங்க இருக்க ஒவ்வொரு நோயாளியும், தங்களுடைய வாழ்க்கையோட மிகக் கஷ்டமான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டுட்டு இருக்காங்க. உடல் ரீதியா மட்டுமல்லங்க... மனரீதியாகவும்தான். ஸோ, நீங்க சொல்ற சின்ன ஐய்யோவும் அவங்களை மனசளவுல பாதாளத்துக்குள்ள தள்ளிடும். அதனால, தயவுசெஞ்சு வார்த்தைகள்ல கவனமா இருங்க" என்றார்.

Sakundhala Rajendran - Daughter
Sakundhala Rajendran - Daughter

ரோஸ் டே என்பது, பராமரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பது மட்டுமல்ல; புற்றுநோயை முன்கூட்டியே தடுப்பதற்கானதும் கூடதான் என்கின்றனர் இதற்காக இயங்கும் ஆர்வலர்கள். அந்த வகையில், புற்றுநோயாளிகளுக்கென தன்னார்வ அமைப்பொன்றை நடத்தி வருகின்றார் சகுந்தலா.

"என்னுடைய அதிகபட்ச ஆசையெல்லாம், கிராமப்புறங்களிலுள்ள பணிபுரியும் பெண்களுக்கு இலவசமாக உடல்நலத்துக்கான முகாம் நடத்த வேண்டும் என்பதுதான். இன்னைக்குச் சூழ்நிலையில, பல பெண்களும் தங்களுடைய உடல்நலனைப்பத்தி யோசிக்கிறதேயில்ல. முதல்ல, அதுக்கு ஒரு தீர்வு காணணும். இப்பொதைய என்னோட பயணம், அதை நோக்கிதான் நகர்ந்துட்டு இருக்குது" என்கிறார்.

Sakundhala Rajendran
Sakundhala Rajendran

நாம் எல்லோருமே சேர்ந்து இயங்கினால் மட்டுமே, இதற்கான தீர்வைக் காண முடியும்! காண்போம்.

அடுத்த கட்டுரைக்கு