Published:Updated:

`காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி!' - இனியாவது விழித்துக் கொள்வோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Patient at Hospital (Representational Image)
Patient at Hospital (Representational Image) ( Image by Parentingupstream from Pixabay )

வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் இப்படி ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நம்மூர் பகுதியில் காலநிலை நோயாளி குறித்த பதிவுகள் வெளிவர நீண்ட நாள்கள் ஆகாது. மேலாதிக்க நாடுகள் செய்யும் தவறுகள் மற்றும் சுரண்டல்களால் வளரும் நாடுகளும் பாதிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.

`காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி!’

- இந்தச் செய்தியைக் கேட்க எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது?

இனி வரப்போகும் காலங்களில் இப்படியான செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடும் என்பதுதான் பேருண்மை!

நோய்க்கணிப்பாக `காலநிலை மாற்றம்’ என்பதை மருத்துவர் தனது மருத்துவக் குறிப்பேட்டில் பதிவு செய்திருப்பதில் எவ்வளவு புதுமை ஒளிந்து கிடக்கிறது. ஆனால், அந்தப் புதுமை மிகப்பெரும் ஆபத்தை கண்முன் நிறுத்துகிறது.

புற்றுநோயாளி, இதய நோயாளி என்பதைக் கேள்விப்பட்டு வந்த நாம், சமீபமாகப் புதுப்புது நோயாளிகளைச் சந்தித்து வருகிறோம். `கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி…’ எனும் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் நாம் மீளாத சூழலில், இப்போது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி என்பது நமக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டும்.

Climate Change (Representational Image)
Climate Change (Representational Image)
AP Photo/Victor Caivano

ஜூன் மாதத்தில் கடுமையான வெப்ப அலைகள் பசிபிக் கடலோரத்தில் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளைத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த வெப்ப அலைகள் பல நூறு மக்களை மரணிக்கச் செய்தது மட்டுமன்றி, அடுத்த சில மாதங்களுக்கு காற்றின் தரத்தைப் பெருமளவில் மாசுபடுத்தின. இதனால் கனடா நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ஏற்கெனவே உள்ள நீரிழிவு நோய் மற்றும் இதய நோயின் தீவிரம் சமீபமாக அதிகரித்திருப்பதாகவும், உடலின் நீர்த்துவத்தைத் தக்கவைக்க அவர் கடினப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார் மருத்துவர். முக்கிய விஷயமாக ஏற்கெனவே இருந்த ஆஸ்துமா தொந்தரவு, இப்போது அதிதீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டி, காலநிலை மாற்றத்தைக் காரணப்படுத்துகிறார்.

வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் இப்படி ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நம்மூர் பகுதியில் காலநிலை சார்ந்த நோயாளி குறித்த பதிவுகள் வெளிவர நீண்ட நாள்கள் ஆகாது. மேலாதிக்க நாடுகள் செய்யும் இயற்கை சார்ந்த தவறுகள் மற்றும் சுரண்டல்களால் வளரும் நாடுகளும் பாதிப்புகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னர், சில பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வந்த பெருமழைகளும், பெருவெள்ளங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் அடிக்கடி நிகழ்வதைக் கண்கூடாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். வருடம் முழுவதும் கிடைக்க வேண்டிய மழையின் அளவு, சில மணி நேரத்திலேயே கிடைக்கத் தொடங்கிவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழ்நாட்டில் அதிகமான மழைப்பொழிவு என்றால் நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில்தான் இருக்கும். ஆனால், சமீபத்திய இருபது ஆண்டுகளில் கடலூர், சென்னையையொட்டிய பகுதிகளில்தான் அதிக மழைப்பொழிவு. அதுவும் ஒரே நாளில் அதீத மழைப்பொழிவு என மாறிவிட்டதற்குக் காரணம் காலநிலை மாற்றமே!

இதில் எவ்வளவு பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன என்பதை இயற்கை சார்ந்த அறிக்கைகள் பட்டியலிடுகின்றன. பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்… உணவு உற்பத்தியில் பெருமளவு தேக்கம் உண்டாகும்… பல நாடுகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுகளின் எண்ணிக்கை பெருகும் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

Climate Change (Representational Image)
Climate Change (Representational Image)
Photo by Andrea Schettino from Pexels
"காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?

`துவாலு’ எனும் ஒரு தீவு நாட்டின் அமைச்சர், கடலில் நின்றுகொண்டு காலநிலை மாற்றம் குறித்து உரையாற்றிய காணொளி தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது, பனிப்பாறை உருகுதல் போன்ற காலநிலை மாற்றங்களால் தங்களுடையதைப் போன்ற சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அவர் பதிவு செய்கிறார்.

உண்மைதான்… சில தீவுகள் கடலில் மூழ்கும், கடலோரத்தில் மக்கள் வாழ் நிலப்பரப்புகளுக்குள் கடல்நீர் தேங்கும், பல கடலோர நகரங்களில் வாழ முடியாத சூழல் ஏற்படும். அப்போது காலநிலை அகதிகள் பெருமளவில் உருவெடுப்பார்கள். பல்வேறு இடங்களுக்கு குடிபெயரும் சூழல் உண்டாகும். நோய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இப்போது அறிவிக்கப்பட்ட காலநிலை நோயாளி போல, பல காலநிலை நோயாளிகளை மருத்துவ உலகம் சுட்டிக்காட்டும். ஆபத்தான காலகட்டமாக அதை நாம் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலநிலை சார்ந்த நோய்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. நமது நாட்டின் தலைநகரத்தையே எடுத்துக்கொள்வோம். சாலைகளில் நடமாட முடியாத அளவுக்குப் புகைமூட்டம் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதிக அளவு காற்று மாசு காரணமாக புதிதாக நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் மனித சமுதாயத்தில் தலைதூக்கினால், அவற்றையும் ஏறக்குறைய காலநிலை மாற்றம் சார்ந்த நோய்களாகவே எண்ண முடியும். சுற்றுச்சூழல் மாசால் ஏற்பட்ட பிரச்னை எனும் பிரிவில் வைத்துக்கொள்ளலாம், அவ்வளவே வித்தியாசம்.

இப்போதாவது நாம் விழித்துக்கொள்ளவில்லை எனில் இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல பல்வேறு புதுப்புது நோய்கள் உருவெடுக்கும். பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் கொரோனா போன்ற தொற்றுநோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். எங்கோ ஹைபர்னேஷனில் இருந்த வைரஸ்களும் பாக்டீரியாக்களும் துள்ளிக்குதித்து மனிதர்களையும் விலங்கினங்களையும் தாக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும். ஃபேன்டசி திரைப்படங்களில் பார்த்த கிருமித் தாக்குதல் காட்சிகள் எல்லாம், நமது அன்றாட வாழ்க்கையில் அரங்கேறினால், வாழத் தகாத பகுதியாக பூமி மாறக்கூடும் அல்லவா!

காலநிலை மாற்றம் | Climate Change
காலநிலை மாற்றம் | Climate Change
Robert S. Donovan
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? | Doubt of Common Man

அடுத்த நூறாண்டுகளில் பல்வேறு பேரிடர்களை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என்று சொல்லிவந்த உலக அமைப்புகள், இப்போது `Human extinction is difficult’ எனும் பதத்தைப் பேசத் தொடங்கிவிட்டன. அதாவது, மனித குலத்துக்கே பாதிப்புகள் ஏற்படலாம் என அனுமானிக்கத் தொடங்கிவிட்டன. நம்மிடையே வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள், பல இயற்கைப் பேரிடர்களால் இந்தப் பூமியை விட்டு மறைந்த வரலாற்றுக் குறிப்புகளை நாம் அறிந்திருப்போம். அந்த வரலாறு மனித சமுதாயத்திலும் பதிவாகிவிடக் கூடாது என்பதே இயற்கை ஆர்வலர்களின் கவலை!

மனிதர்களாகிய நாம் இயற்கையை சீரழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறோம். `இது மனிதர்களுக்கான பூமி அல்ல… அனைத்து உயிரினங்களுக்குமான பூமி…’ என்பதையே மறந்துவிட்டோம். இந்த மறதி, பெரும் மக்கள்தொகையைப் பாதிக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் இப்போதைய பெரும் சூழல் பிரச்சனை!

மழைக்காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட தண்ணீர் பிரச்னை ஒரு தொடர் சங்கிலி! அடர்ந்த வனங்கள் அழிக்கப்பட்டதால் அலைக்கழிக்கபட்ட பெரும் யானைக் கூட்டங்களின் வாழ்விடப் பிரச்னை கூட்டுச்சங்கிலி! காடழிப்பால் காணாமல் போன பறவையினங்களையும் விலங்கினங்களையும், மரவகைகளையும் பட்டியிலிட்டால் நேரம் போதாது. எப்போது மாறப்போகிறது சமூகம்!

ஒரு புறம் பெருமழைகள் பாதிப்புகளை ஏற்படுத்த, மறுபுறம் கடுமையான வறட்சி, சூழலியல் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும். பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், உடல்நலம் சார்ந்த பாதிப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும். இரவும் பகலும் தவறாமல் சுழல்வதைப் போல, பெருவெள்ளமும் கடும் வறட்சியும் இடைவிடாது மனித இனத்துக்கு பெரும் சவாலாகத் திகழும்!

Air Pollution
Air Pollution
காலநிலை மாற்றத்தால் இந்தியப் பருவமழையில் ஏற்படும் அதீத மாற்றங்கள்; எதிர்காலத்தின் நிலை என்ன?

ஒவ்வொரு தனி மனிதருக்கும் சூழல் சார்ந்த பொறுப்பு இருக்கிறது… அக்கறையும் தேவைப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் நமக்கு ஏதும் பிரச்னை இல்லை… யாருக்கோ எங்கோதான் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தால், எதிர்பாராத கொரோனா போன்ற நோய்கள் எங்கிருந்தோ வந்து நம்மைத் தாக்கத் தொடங்கும்.

காலநிலை சார்ந்து எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா… ஆனால், அந்த அதிர்ச்சியைத் தாங்கித்தான் ஆக வேண்டும். மரங்களை அதிகமாக நடுவது… சூழல் காடுகளை ஆங்காங்கே உருவாக்குவது… நீர் நிலைகளைப் பராமரிப்பது… வாகனப் போக்குவரத்தை முடிந்தவரையில் குறைப்பது… என எண்ணற்ற பணிகள் நம்முன்னே காத்துக்கிடக்கின்றன. தனி மனிதராகவோ, ஒரு குழுவாகவோ இந்தப் பணிகளை எடுத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஒவ்வொரு பருவத்துக்குமான பயிர்கள்… தானியங்கள்… கனிகள் என இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால், நுகர்ச்சிப் பேராசை காரணமாக எல்லாம் எல்லா காலத்திலும் கிடைக்கும்படி இயற்கையை வதக்கி கருக்கி விட்டோம். வளர்ச்சி தேவைதான்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

ஆனால், சமச்சீரற்ற வளர்ச்சி பக்க விளைவுகளையே உருவாக்கும். இயற்கையோடு இயைந்துதான் நமது வளர்ச்சி அமைய வேண்டும். இயற்கைக்கு முரணாகப் பெறப்படும் வளர்ச்சி ஸ்டீராய்டு மருந்துகள் போல மற்றோர் அழிவை ஏற்படுத்தியே தீரும். சிந்திப்போம்!

வங்காரி மாத்தாய் போன்ற பசுமைப் பெண்மணிகள் வாழ்ந்த சென்ற பூமி இது. சூழலுக்காகக் குரல் கொடுத்த கிரேட்டா துன்பெர்க் ஆகட்டும், ஆங்காங்கே காடுகளை உருவாக்கும் தனி மனிதர்கள் ஆகட்டும் நமக்கான எடுத்துக்காட்டுகள்! சூழல் காக்கும் மனிதர்களாக உருமாற இப்போதிருந்தே முயற்சி செய்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு