Published:Updated:

கொரோனா பாதிப்பு... உலகளவில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உயிரிழப்பு!

போதிய பாதுகாப்பு உபகரணகங்கள் வழங்காததும், பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மீண்டும் உபயோகிக்க வலியுறுத்தப்படுவதும்தான் பாதிப்புகளுக்குக் காரணம் எனப் பல நாடுகளிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவத்தொடங்கியது முதல் இதுவரை உலகெங்கிலும் 600-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

' 'ஹீரோ' என எங்களைப் புகழ வேண்டாம். மாறாக, பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை, இன்னும் தேவைப்படுகிறது என நாங்கள் கூறும்போது அதை நம்புங்கள். உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்' என்று நியூயார்க் நகர செவிலியர் ஒருவர் கூறியிருப்பது, இந்நேரத்தில் கவனம் பெறுகிறது.

பாதுகாப்பு உபகரணங்கள்
பாதுகாப்பு உபகரணங்கள்

உலகளவில் இதுவரை 2,30,000-க்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் 600-க்கும் மேலான செவிலியர்கள் உயிரிழந்திருப்பதும் ICN (The international council of nurses) -ன் பகுப்பாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணகங்கள் வழங்காததும், பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மீண்டும் உபயோகிக்க வலியுறுத்தப்படுவதும்தான் பாதிப்புகளுக்குக் காரணம் எனப் பல நாடுகளிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்த முதல் செவிலியர், டெல்லியில் உள்ள கல்ரா மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த அம்பிகா. `பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மீண்டும் பயன்படுத்த மருத்துவமனை வலியுறுத்தியதாகவும், மாஸ்க்குகளுக்கு கட்டணம் வசூலித்ததாகவும்’ தன் தாய் தன்னிடம் கூறியதாக, அம்பிகாவின் மகள் தெரிவித்தார். ஏற்கெனவே பிறரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்க அஞ்சி, அவை இல்லாமலேயே பல செவிலியர்கள் பணிபுரிந்துவந்த அவலம், அம்பிகாவுடன் பணிபுரிந்த சக செவிலியர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகளவில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் (health-care workers) எண்ணிக்கை குறித்தான முறையான பதிவு எதுவும் இதுவரை இல்லை. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த ஊழியர்களின் எண்ணிக்கை தரவைப் பல நாடுகள் பதிவுசெய்யத் தவறியதன் காரணம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யுமாறு ஐசிஎன் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், செவிலியர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எல்லா நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட்
கோவிட்

ஐசிஎன் தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் கட்டன், ``உலகில் மிக ஆபத்தான பணிகளுள் ஒன்று செவிலியர் பணி. பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சுகாதார மற்றும் பராமரிப்புத் துறை ஊழியர்களின் புள்ளிவிவரத் தரவை ஒவ்வொரு நாட்டிலும் பெற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கவும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்தப் புள்ளிவிவரங்கள் கைகொடுக்கும்" என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு