Published:Updated:

``யாரைப் பற்றி எழுதினேனோ அந்த மக்களே என்னை எதிர்த்து நின்றார்கள்!'' - எழுத்தாளர் பாமா #LetsRelieveStress

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

`கருக்கு’ நாவல் எனது சொந்த கிராமத்தின் கதை, என்னுடைய கதை, எனது மக்களின் கதை என்றபோதும் அதற்கு எனது கிராமத்துச் சனங்களே எதிர்ப்புத் தெரிவித்தபோது நான் மிகவும் நொந்துபோனேன். எனது சொந்த ஊருக்குள்ளே நான் செல்ல முடியாத துயரம்.

சிலருக்கு எழுத்து ஒரு தவம். சிலருக்கு அதுவே வாழ்க்கை. இதில் எழுத்தாளர் பாமா இரண்டாவது பிரிவு. தன் ஆசையை, வலிகளை, ஏக்கத்தை, புறக்கணிப்பை தன் எழுத்தின் வழியே கடந்தவர். தலித் மக்களின் அவல வாழ்க்கையை இலக்கிய உலகில் பதிவு செய்த முன்னோடி. 1992-ம் வெளியான 'கருக்கு' நாவல் சமூகப் பரப்பில் பெரும் தாக்கத்தையும் விவாதத்தையும் கிளப்பியது.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சர்வதேச கவனம் பெற்றது. `சங்கதி’, ‘வன்மம்’ ஆகிய நாவல்களையும் ‘கிசும்புக்காரன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கும் பாமா, மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதைக் கடந்த விதத்தையும் இங்கே பகிர்கிறார்.

“எனது வாழ்க்கை என்பது, ஏராளமான மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கி வந்திருக்கிறது. பல சந்தர்ப்பங்களில், பல நிகழ்வுகளில், பல வகைகளில் வாழ்க்கை என்னை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிப்போட்டு அலைக்கழித்திருக்கிறது. நீரோடு பயணப்பட்ட கல், நீரோட்டத்தில் அங்குமிங்குமாகப் பயணித்து கூழாங்கல்லாவதைப் போல நான் பக்குவப்பட்டிருக்கிறேன். ஆனால் இடையே எத்தனை சிராய்ப்புகள்... எத்தனை காயங்கள்... எத்தனை ஏமாற்றங்கள்... எத்தனை வலிகள்.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

காலம் என்னும் கருணைமிகு மருத்துவரால் பல துயரங்களை மறக்க முடிந்தது. இன்னும் பலவற்றைக் குறைக்க முடிந்தது. இன்னும் சிலவற்றைச் சுமந்தபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பாரதி போல `இன்று புதியதாய்ப் பிறந்தோம்’ என்று சொல்லிக் கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும், கடந்து வந்த காலத்தைப் பார்க்கும்போது, 'எல்லாமே கடந்து போகும்' என்ற தெளிவு தெரிகிறது. என்னைச் சிதைத்துப் போட்ட விசயங்கள் பல இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.

`கருக்கு’ நாவல் எனது சொந்த கிராமத்தின் கதை, என்னுடைய கதை, எனது மக்களின் கதை என்றபோதும் அதற்கு எனது கிராமத்துச் சனங்களே எதிர்ப்புத் தெரிவித்தபோது நான் மிகவும் நொந்துபோனேன்.
எழுத்தாளர் பாமா

முதலாவதாக, எனது குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள். 1995-ம் ஆண்டில் நிகழ்ந்த எனது தங்கையின் அகால மரணம். அவளது இழப்பைத் தாங்க இயலாமல் அடுத்த வருடத்திலேயே அடுத்தடுத்த நாள்களில் இறந்துபோன எனது பெற்றோரின் இழப்பு, 2013-ம் ஆண்டில் நடந்த எனது தம்பியின் மரணம். இந்தப் பிரிவுகள் தந்த ரணங்களை இன்று வரை சுமந்தபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

இவற்றால் ஏற்பட்ட மன அழுத்தங்களுக்கு மருந்தாகப் பல கவிதைகள், சிறுகதைகள் என்று எழுதியிருந்தாலும் (இவை நான் எனக்கான வலி நிவாரணிகளாக எழுதியவை. பிரசுரிக்கவில்லை.) இந்தப் பிரிவுகள் எனக்குள் உண்டாக்கிய வெறுமையை, துயரத்தை, அழுத்தத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து எழுந்து வர முடியவில்லை. ஆழ்மனத் துயரங்கள் அவ்வப்போது மேலெழும்பி என்னை அவஸ்தைப் படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

கிறிஸ்தவ துறவற மடத்துக்குச் சென்று துறவியாக சில வருடங்கள் இருந்தபின் தொடர்ந்து அதில் இருக்க விருப்பமின்றி வெளியே வந்தேன். அதன்பிறகு நான் எதிர்கொண்ட வாழ்க்கையின் துயரங்கள்... உணவு, உறைவிடம் என எதற்கும் வழியின்றி வேலையின்றித் தவித்து அலைந்த அந்த நாள்கள் எனக்குள் ஏற்படுத்திய மனஅழுத்தம் கொஞ்சநஞ்சமல்ல.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

அப்போது நான் எழுதியதுதான் எனது முதல் நாவலான `கருக்கு’. அந்த நாவல், எனக்குள் புதிய நம்பிக்கையை விதைத்தது. கண்ணீரைக் காயவைத்தது. அதைப் புத்தகமாக்கியபோது அதற்குக் கிடைத்த எதிர்ப்பும் வரவேற்பும் என்னைத் தொடர்ந்து எழுதவைத்தது.

உயர்சாதி ஆணாதிக்கச் சிந்தனையுள்ள நமது சமுதாயத்தில் திருமணமின்றி, குடும்பமின்றி தனியாக ஒரு பெண் வாழ்வதென்பது சாதாரண விஷயமல்ல.
எழுத்தாளர் பாமா

`கருக்கு’ நாவல் எனது சொந்த கிராமத்தின் கதை, என்னுடைய கதை, எனது மக்களின் கதை என்றபோதும் அதற்கு எனது கிராமத்துச் சனங்களே எதிர்ப்புத் தெரிவித்தபோது நான் மிகவும் நொந்துபோனேன். எனது சொந்த ஊருக்குள்ளே நான் செல்ல முடியாத துயரம். இறுதியில் கருக்கைப் புரிந்து கொண்டபின் என்னையும் புரிந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதற்குப் பிறகு எனது எழுத்துக்கு எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதும் அவற்றால் சோர்ந்து போவதில்லை.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

துறவற மடத்திலிருந்து வெளியே வந்து, தனி மனுஷியாகக் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் இந்த வாழ்க்கை சவாலான வாழ்க்கைதான். உயர்சாதி ஆணாதிக்கச் சிந்தனையுள்ள நமது சமுதாயத்தில் திருமணமின்றி, குடும்பமின்றி தனியாக ஒரு பெண் வாழ்வதென்பது சாதாரண விஷயமல்ல. ஏன் இப்படியொரு வாழ்க்கை என்பதற்குப் பலருக்கும் பல இடங்களில் பதில் சொல்லியே சலித்துப்போகும்.

பல்வேறு இடங்களில் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகளை எதிர்கொள்வது எரிச்சலையும், மன உளைச்சலையும், கோபத்தையும், வேதனையையும் உண்டாக்கும். அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் உள்ள சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்காமல் இருக்கும்போது கிடைக்கும் விமர்சனங்களும், கிண்டல்களும், அவதூறான பேச்சுகளும் மனதைநோகச் செய்யும்.

எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

இவை அனைத்தையும் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு எனக்கான வாழ்க்கையை நான் தீர்மானித்து வாழ்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக எதிலும் தலையிடாமல் எனக்கு இருக்கும் எல்லையில்லா சுதந்திரத்தையும் அதேநேரம் எனக்குள்ள சமுதாயப் பொறுப்பையும் நான் அறிந்திருக்கிறேன். அதனால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார் பாமா.

அடுத்த கட்டுரைக்கு