Published:Updated:

`தொடர் வாசிப்பின் வழி நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து!’ - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா #LetsRelieveStress

கிராபியென் ப்ளாக்
கா.முரளி

கிட்டத்தட்ட ஒரு வருடமாய் மனம் பேதலித்து இருந்தவளை என் நண்பனாக இருந்து கணவர் பவாதான் தேற்றிக்கொண்டு வந்திருக்கிறார். நிதர்சனத்தை உணர்த்தி என்னை மீட்டிருக்கிறார். `என்னைக் கொடுத்து சிபியை மீட்டுத் தரட்டுமா' என ஒருநாள் கேட்டபோது பவாவை இறுகக் கட்டிக்கொண்டு அழுதேன்.

எழுத்தாளர்  கே. வி. ஷைலஜா
எழுத்தாளர் கே. வி. ஷைலஜா ( கா.முரளி )

இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு என்பது சவாலான பணி. அசல் படைப்பாளியின் மனநிலையை அப்படியே மற்றொரு மொழியிலுள்ள வாசகனுக்கு கடத்துவது சாதாரணமானதல்ல. மிகுந்த மொழி வளமும் அசல் படைப்பை உள்வாங்கி, சிறப்பாக வெளிப்படுத்தும் எழுத்துநடையும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதைத் தமிழ் இலக்கியத்தில் சாத்தியப்படுத்தியவர் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா.

எழுத்தாளர்  கே. வி. ஷைலஜா
எழுத்தாளர் கே. வி. ஷைலஜா
கா.முரளி

`சிதம்பர நினைவுகள்’ மொழிபெயர்ப்பு அதற்கு ஓர் உதாரணம். `மூன்றாம் பிறை’, `சூர்ப்பனகை’, `இறுதி யாத்திரை’, `கதை கேட்கும் சுவர்கள்’ எனத் தொடர்ந்து மலையாள இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர், பதிப்பாளர் என பன்முகமாகவும் இயங்கி வருபவர். தன்னுடைய வாழ்க்கையிலும் இலக்கியப் பணயத்திலும் தனக்கு மனஅழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும் அதை எதிர்கொண்ட விதத்தையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

இயற்கை இப்படியொரு அற்புத மகனை எனக்குக் கொடுத்தது, ஏன் எடுத்துக்கொண்டது என நிதானிக்க முடியாத நாளில் ஒரு விபத்தில் அவன் எங்களைத் தவிக்க விட்டுப் போய்விட்டான். அடுத்த நொடியை யோசிக்க முடியாமல் நாங்கள் உதிர்ந்து கிடந்த அந்தப் பொழுதுகள் யாரும் அனுபவிக்கக் கூடாதது.
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா.

``என்னுடைய ஏழு வயதில் பள்ளிக்கூடம் போகும் நாள்களை கலவரப்படுத்திய நினைவுகள் அவை. வீட்டிலிருந்து எப்போதும் உற்சாகமில்லாமல்தான் பள்ளிக்குக் கிளம்புவேன். பள்ளியொன்றும் அவ்வளவு சந்தோஷத்தை எனக்குக் கொடுத்ததில்லை. நான் செல்லும் வழியில் அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரி இருக்கும். அதன் எதிரில் துப்புரவுப் பணியாளர்களின் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பே மிகப் பெரிய அரச மர நிழலில்தான் இருக்கும். அதன் நிழலில் எப்போதும் சில பெண்கள் தன் கணவனையோ, பிள்ளையையோ, அப்பாவையோ, அம்மாவையோ பறிகொடுத்த துக்கத்தில் தரை மண்ணை இரைத்து துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருப்பதை பார்த்தபடியேதான் நான் பள்ளிக்கூடம் போவேன்.

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா.
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா.
கா.முரளி

விபத்தில் சிதறின உடல் பாகமோ, தற்கொலை முயற்சியில் வெற்றியடைந்த சில்லிட்ட உடலோ உறவினர்களின் கைகளுக்கு வர சமயங்களில் இரண்டு மூன்று நாள்கள்கூட ஆகலாம். ஆனால், அதுவரை உயிர்நீர்கூட பல்லில் படாமல் காத்திருந்த, சோர்வுற்ற, தளர்ந்து மயங்கின பெண்களை அங்கே கண்டிருக்கிறேன். அந்த துயரம் என்னை மிகவும் உருக்குலைய வைத்த நாள்கள் அவை. அவர்கள் எல்லோரும் சமூகத்தில் இனம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து மிகவும் பின்தங்கிய மக்கள். அவர்களுக்கு மட்டும்தான் இந்த துக்கமா? மார்ச்சுவரியில் உடல் கிழித்து மீண்டும் வெள்ளைப் பொட்டலமாய் சேர்க்கப்பட்ட உதிரத் துளிகள் அவர்களின் தேகத்திலிருந்து சிந்தியவை மட்டும்தானா? வசதி படைத்தவர்களின் சில்லிட்ட உடல் மார்ச்சுவரிக்கு வராதா? நாகரிகமானவர்களும் வசதியானவர்களும் தன் ரத்த பந்தத்தின் கடைசி ஸ்பரிசத்துக்காக அங்கே காத்திருக்கமாட்டார்களா? என் சின்ன மனசுக்கு அது புரிந்ததேயில்லை.

இருபது வருடங்களாகப் பின்தொடர்ந்த அந்தக் கூக்குரலின் வலி, என்னில் படரத் தொடங்கிய ஒரு இருளின் தனிமையில் எனக்குப் பதில் சொன்னது. பள்ளிப் பருவம், கல்லூரிக் காலம் என மாறி காதலியாய் வண்ணங்கள் சிறகடித்த வாழ்வை அனுபவித்து மனைவியாய், அம்மாவாய் பரிணமித்திருந்த ஒரு விடியற்காலையில் பிறந்த மூத்த மகன் சிபி என் வானத்தையே தன் பொங்கும் சிரிப்பொலியில் ஒதுக்கியிருந்தான். அவன் வழி வாழ்வு அர்த்தமுள்ளதானது. அவன் கண்களால் பார்க்க, அவன் காதுகளால் கேட்க, அவன் உதடுகள் வழி சிரிக்க நானும் என் கணவர் பவாவும் பழகியிருந்தோம். எதற்காக இயற்கை இப்படியொரு அற்புத மகனை எனக்குக் கொடுத்தது, ஏன் எடுத்துக்கொண்டது என நிதானிக்க முடியாத நாளில் ஒரு விபத்தில் அவன் எங்களைத் தவிக்க விட்டுப் போய்விட்டான். அடுத்த நொடியை யோசிக்க முடியாமல் நாங்கள் உதிர்ந்து கிடந்த அந்தப் பொழுதுகள் யாரும் அனுபவிக்கக் கூடாதது.

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
வம்சி

ஆனால், நான் ஏன் மார்ச்சுவரியின் எதிரிலிருக்கும் அரச மரத்தடியில் போய் காத்துக் கிடக்கவில்லை? என் மகனை மங்கிய விளக்கொளியில் விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வீட்டில் யார் கரங்களிலோ துவண்டு இருந்தேன். புத்தி பேதலித்த என் மன நிலையா? வாழ்வின் போக்கா? எதுவென்று தெரியவில்லை, ஆனால் இந்த இருபது வருடங்களாக, அன்று போகாமல் இருந்து விட்டோமே, சிபியைத் தனியாய் விட்டு விட்டோமே என மனம் பதறிக்கொண்டேயிருக்கிறது.

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் `இறுதி யாத்திரை’யும் பெண்ணின் மரணத்தை முன் வைத்து எழுதப்பட்ட `சுமித்ரா’வும் அடுத்தடுத்து மொழிபெயர்த்த நாவல்கள். இந்த இரண்டுக்குமிடையில் என் மாமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் சிறுத்து தன்னை நோய்மைக்கு தின்னக் கொடுத்திருந்தார். எல்லாமுமாய் நான் இரண்டு வருட காலங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா

கிட்டத்தட்ட ஒரு வருடமாய் மனம் பேதலித்து இருந்தவளை என் நண்பனாக இருந்து கணவர் பவாதான் தேற்றிக் கொண்டு வந்திருக்கிறார். நிதர்சனத்தை உணர்த்தி என்னை மீட்டிருக்கிறார். 'என்னைக் கொடுத்து சிபியை மீட்டுத் தரட்டுமா' என ஒருநாள் கேட்டபோது பவாவை இறுகக் கட்டிக்கொண்டு அழுதேன்.

 எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
கா.முரளி

எங்கள் இருவரின் பொது நண்பரான கருணாவும் (எஸ்.கருணா) குழந்தையிடம் பேசுவது போலப் பேசி எனக்குப் புரிய வைத்திருக்கிறார். தோழமையை இழக்க முடியாத துக்கத்தில் என்னை அடியாழத்திலிருந்து கரை சேர்த்தார் கருணா. இந்த இரு நண்பர்கள் இல்லையெனில் இன்றைய நானில்லை. இன்னும் வீரியமாய் பொதுவேலைகள் செய்யவும் இலக்கிய நிகழ்வுகளில் என்னை மறந்து செயல்படவும், எழுதவும் என்னை நகர்த்தின இதயங்கள் அவை. ஆனாலும் இன்றும்கூட இரவின் ஏகாந்தத்தில் உறக்கத்தின் மடியில் தலை சாய்த்திருக்கும்போது சாலையில் உராயும் ஒரு வண்டி சக்கரத்தின் கிறீச்சிடல், சட்டென என்னைப் பயமுறுத்தி எழுப்பி பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளை ஒரு முறை தொட்டு தடவிப்பார்க்கவைக்கும். அந்த வலியிலிருந்து மீண்டு வர எனக்கு இந்த பிறப்பு போதாது.

என் படைப்புகளில் வரும் கதாப்பாத்திரங்கள் என்னை தன்னில் ஆழ்ந்து மூழ்கடித்து நானில்லாமலாக்கிய தருணங்களில் வாழ நேர்ந்த நாள்கள் அலாதியானதும் சோர்வுக்கு உள்ளாக்குவதுமான மனநிலையைத் தருகிறது. தொடர் வாசிப்பின் வழி நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து. என்னைத் தொலைக்கவும் மீட்டெடுக்கவுமான ஒரே வழி. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்ற மலையாள கவிஞனின் வாழ்வின் பாடுகளை தமிழுக்குக் கொண்டுவரும் முதல் முயற்சியில் மூழ்கியிருந்த நாள்கள். பதினைந்து வருடங்கள் இருக்கும். வேறு எந்த யோசனையும் இல்லாமல் அதிலேயே தோய்ந்திருந்த நாள்களில், ஒரு கண் பார்வை போனதுகூட தெரியாமலிருந்தேன்.

 எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
கா.முரளி

ஒரு கண்ணில் பார்வையை இழந்து விட்டேன் என்ற திடுக்கிடல் என்னை மருத்துவமனைகளின் வாசல்களுக்கு ஓடவைத்தது. பிட்யூட்டரி கிளாண்டில் ஒரு சின்ன கட்டி இருப்பதாகவும் அது பார்வை நரம்பை அழுத்தியதால்தான் பார்வை மட்டுப்படுகிறதென்றும் மருத்துவர் கூறினார். இரண்டாவது கட்ட ஆலோசனையின்போதே அந்த கட்டி சிறுத்துப்போய் பார்வை சரியானதும் வேறு கதை. அப்படியொரு அறுவை சிகிச்சையிலிருந்து தப்பித்து வந்துதான் ‘சிதம்பர நினைவுகள்’ மொழிபெயர்ப்பு நூலை முடித்தேன்.

அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன. எதன் பிறகும் வாழ்தல் இனிது. ஆமாம் வாழ்தல் இனிது!
எழுத்தாளர் ஷைலஜா

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் என்னுள் ஆழமாய் இறங்கித்தான் மேலேறுகிறது. ஆணின் மரணத்தை முன் வைத்து எழுதப்பட்ட எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் `இறுதி யாத்திரை’யும் பெண்ணின் மரணத்தை முன் வைத்து எழுதப்பட்ட `சுமித்ரா’வும் அடுத்தடுத்து மொழிபெயர்த்த நாவல்கள். இந்த இரண்டுக்குமிடையில் என் மாமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் சிறுத்து தன்னை நோய்மைக்கு தின்னக் கொடுத்திருந்தார். எல்லாமுமாய் நான் இரண்டு வருட காலங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

 எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
கா.முரளி

சமீபத்தில் வெளிவந்த என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலான `கதை கேட்கும் சுவர்கள்’ என்ற புத்தக வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது ஆறு மாதங்கள் சூழல் மறந்திருந்தேன். அந்த நாள்களில் வெயில் என் தோலைத் தொட்டதில்லை. சூரிய வெளிச்சம் பார்த்ததில்லை.

மழைச்சாரல் என்னில் பட்டுத் தெறிக்கவில்லை. தெருக்களின் அசைவை அவதானித்ததில்லை. குடும்பம் என்னை சகித்துக் கொண்டது. ஏழெட்டு கிலோ உடல் எடை குறைந்து, ரத்தம் சுண்டி புத்தக முழுமைக்கு என்னை ஒப்புக் கொடுத்திருந்தேன்.

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
கா.முரளி

`கதை கேட்கும் சுவர்கள்’ நாவலில் வரும் உமா பிரேமன் என்கிற பாத்திரம் என் வயதொத்த பெண். அவளின் பாடுகளும் அதிலிருந்து மீண்டு வர அவள் எடுக்கும் முன்னெடுப்புகளும் என் உறக்கத்தையும் விழிப்பையும் ஒன்று போல சிதறடித்தவை. ஒரு நாவலைப் போல மலையாளத்தில் எழுதப்பட்ட வாழ்வனுபவம். மூழ்கடிப்பதும் மீட்டுக் கொண்டு வருவதும் என் படைப்புகளே. அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன. எதன் பிறகும் வாழ்தல் இனிது, ஆமாம் வாழ்தல் இனிது.”